முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நன்றாக உள்ளார் என்றும், அவர் விரும்பும்போது பொழுது வீட்டிற்கு செல்லலாம் என அப்பல்லோ தரப்பில் செய்திகள் வெளியாகின. முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்று தொண்டர்கள் நிம்மதியாக இருந்தபோது திடீரென முதல்வருக்கு மாரடைப்பு என்றும், மரணம் அடைந்தார் என்றும் கூறியப்போது மக்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சைகள் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா புரட்சித்தலைவி அம்மா பேரவை நகர பொருளாளர் மதிவாணன் என்பவர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்
மிக நீண்ட சிந்தனைக்கு பிறகே இப்பதிவை எழுதுகிறேன்.
ஏனெனில் நான் சார்ந்திருக்கும் இவ்வியக்கம் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆளுமைத் திறனால் ராணுவக் கட்டுப்பாடோடு கம்பீரமாய் வளர்ந்த இயக்கம். இவ்வியக்கயத்திற்கு எனது கருத்துக்களால் மாசு ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் கழக ஒற்றுமை சீர்குலைந்து விடக்கூடாது என்பதிலும் மிகக்கவனமாக இருக்கிறேன். நான் அம்மாவின் பிள்ளை அவரது கட்டுப்பாட்டின் கீழ் ஓரளவுக்கு அரசியலை அறிந்த இளைஞன்.
எனது பதிவின் சாராம்சமும் கருத்துக்களும் இதோ.,
திருமதி. சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள தயார். திருமதி. சசிகலாவை தமிழக முதல்வராக ஏற்றுக்கொள்ளவும் தயார். திருமதி.சசிகலாவை அம்மாவால் வளர்த்து பேணிக்காக்க பட்ட அஇஅதிமுகவின் அதிகாரமிக்க தலைவராக ஏற்றுக் கொள்ளதயார்.
திருமதி.சசிகலாவின் தலைமையை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு அம்மாவிற்காக எப்படியெல்லாம் கழக பணிசெய்தோமோ அப்படியே அவருக்காகவும் பணியாற்றிடவும் தயார்.
அதற்கு முன்பாக தொண்டர்கள் வைக்கும் ஒரு பரீட்சையில் திருமதி.சசிகலா அவர்கள் தேர்ச்சி பெறவேண்டும்.அது யாதெனில்
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை அப்போலோ மருத்துவமனையில் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு எதுமாதிரியான சிகிச்சை முறைகள் நடைபெற்றன என்பதை முழு வீடியோ ஆதாரத்தோடு வெளியிட வேண்டும். புகைப்படங்களோ அல்லது எழுத்து பூர்வமான எந்தவிதமான விளக்கமும் எங்களுக்கு தேவையில்லை.நாங்கள் கேட்பது வீடியோ ஆதாரம் மட்டுமே.அவற்றில் அம்மா எதுமாதிரியான சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்பவை எல்லாம் கடைசி நிமிடம் வரை இடம் பெற்றிருக்கவேண்டும்.
இவற்றை வெளியிட்டு திருமதி.சசிகலா மாண்புமிகு அம்மா அவர்களின் நம்பிக்கைக்குறிய தோழி என்பதை எங்களிடத்திலே நிரூபணம் செய்ய வேண்டும். இதை திருமதி. சசிகலா நிரூபித்துவிட்டால் அம்மா எழுதிய உயிலில் வேறு யார் பெயர் இடம்பெற்றிருந்தாலும் கூட அதை தவிற்த்து திருமதி.சசிகலா அவர்களை மானசீகமாக தலைவியாக ஏற்றுக்கொள்ளுகிறோம். அம்மா அவர்கள் கட்டிக்காத்த ஒன்றரை கோடி தொண்டர்களும் திருமதி சசிகலாவின் பின்னால் அணிவகுத்து நிற்கிறோம்.
முக்கியமாக அவரை #சின்னம்மா என்று அழைக்கிறோம்.
கடந்த பாராளுமன்றத்தேர்தலில் மாண்புமிகு அம்மா அவர்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்ததை போலவே வருகிற 2019 பாராளுமன்றத்தேர்தலிலும் திருமதி.சசிகலாவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி கழகப்பணி ஆற்றுகிறோம். அம்மாவிற்கு கொடுத்த அத்தனை முக்கியத்துவத்தையும் அச்சு பிசகாமல் அப்படியே கொடுக்கிறோம்.
ஆனால் திருமதி.சசிகலா அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக மாண்புமிகு அம்மா அவர்களுக்கு என்னவெல்லாம் சிகிச்சை நடைபெற்றதோ அவை அத்தனையையும் ஆதாரத்தோடு காட்டி தான் ஒரு குற்றமற்றவர் என்பதை எங்களுக்கு நிரூபித்து காட்டவேண்டும். இதை திருமதி. சசிகலா அவர்கள் செய்துவிட்டால் முழுமனதோடு அம்மாவின் பிள்ளைகளான நாங்கள் அத்தனை பேரும் திருமதி.சசிகலா அவர்களின் பின்னால் அணிவகுத்து நிற்கத்தயாராக உள்ளோம்.
அம்மா திருமதி.சசிகலாவை நம்பினார் .அவரை நம்பிக்கைக்குரியவராக வைத்திருந்தார்.என்று சிலர் கூறுவதை வைத்து எல்லாம் நாங்கள் நம்பமுடியாது. எங்களிடம் தான் குற்றமற்றவர் என்று நிரூபித்து விட்டு அதன்பிறகு தலைமை பொறுப்பிற்கு வரட்டும். அதன்பின்பு திருமதி .சசிகலா அவர்களை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளுகிறோம் என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.