அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து ஒருபக்கம் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் இரு அணி தலைவர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருவது கடந்த சில நாட்களாக வழக்கமாக உள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன், ஈபிஎஸ் அணி தலைவர்களை அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்
இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த மதுசூதனன், நிதியமைச்சர் ஜெயகுமார் குறித்து கூறியபோது, 'அமைச்சர் ஜெயகுமாருக்கு, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வரலாறு தெரியாது. ஜெ., உயிருடன் இருக்கும் போதே, 'ஜெ., சிறைக்கு சென்று விடுவார்; நான் முதல்வர் ஆகிவிடுவேன்' எனக் கூறியதால், சபாநாயகர் பதவியை இழந்தார். ஜெ., உயிருடன் இருக்கும் போதே, தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக விழா எடுத்தார்.
இவரால், பல தொண்டர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர் சிரமப்பட்டு, தியாகம் செய்து, அமைச்சர் பதவிக்கு வரவில்லை. சசிகலாவிற்கு கடல் நத்தை கொடுத்து, சசிகலா கணவர் நடராஜன் தயவால், அமைச்சர் பதவி பெற்றார். ஜெயகுமார் ஒரு அரசியல்வாதியே அல்ல' என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மதுசூதனன் குற்றச்சாட்டுக்கு இன்று அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது