அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வராக முன்னிறுத்தப்பட்டிருக்கும் வேளையில் முன்னாள் அமைச்சர் புதுவை கண்ணன் அதிமுகவிலிருந்து விலகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் முக்கிய அதிமுக பிரமுகர் புதுவை கண்ணன், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர். அமைச்சராக இருந்தவர்.
இவர், சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் கட்சியிலிருந்து விலகி விட்டதாக தெரிகிறது. அவரின் இந்த முடிவு புதுச்சேரி அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் பலர் அதிமுவிலிருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.