இராக்கின் வடக்கு பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2700ஆம் ஆண்டு பழமையான பளிங்கு பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.
மொசூலில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் அமைப்பால் 2016ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பழமையான மாஷ்கி கேட்டின் மறு சீரமைப்புப் பணியில் அமெரிக்க - இராக் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
பாபிலோன் உட்பட உலகின் பழமையான நகரங்கள் இராக்கில் அமைந்துள்ளன. ஆனால் அங்கு பல ஆண்டுகளாக நடந்த சண்டையால், பல தொல்பொருள்கள் திருடப்பட்டன. தீவிரவாதிகளின் செயல்களால் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சேதப்படுத்தப்பட்டன.
கிமு 705 - 681 ஆண்டுகளில் நினிவே என்ற பழமையான நகரத்தை ஆண்ட அசிரிய அரசர் சென்னத்செரிப் காலத்தை சேர்ந்தது இந்த பாறை ஓவியங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினிவே விரிவாக்கம் செய்தது, பாபிலோன் நகருக்கு எதிராக போர் தொடுத்தது போன்ற வலுவான தனது ராணுவ நடவடிக்கைகளுக்காக அறியப்படுகிறார் அரசர் சென்னத்செரிப்.
இந்த ஓவியங்கள் ஒரு காலத்தில் அரசரின் அரண்மனையில் வைக்கப்பட்டு பின் அது மாஷ்கி கேட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது என இராக், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு தலை ஃபேடல் முகமது கொடர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
கண்டறியப்பட்ட இந்த எட்டு பாறை ஓவியங்களில் போர் காட்சிகள், ஒயின், பனை மரம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாஷ்கி கேட் நினிவேவில் மிகப் பெரியதாக இருந்தது. மேலும் நகரின் அளவையும் நகருக்கு இருந்த அதிகாரத்தை பறைச்சாற்றுவதாகவும் இருந்தது. இந்த கேட் 1970ஆம் ஆண்டு மறு கட்டமைப்பு செய்யப்பட்டது. ஆனால் 2016ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் புல்டோசரால் தகர்க்கப்பட்டது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய காலத்தில் உள்ள பல்வேறு தளங்களை உருவ வழிபாடு என்று கூறி அழித்தது.
கேட் பகுதியில் பதிக்கப்பட்ட பளிங்கு பாறை ஓவியங்கள் பகுதியளவு மண்ணில் புதைந்துவிட்டன. எனவே பூமிக்குக் கீழே இருந்த பகுதியில் இருந்த சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பூமிக்கு மேலே இருந்த பகுதி காலப்போக்கில் அழிந்துவிட்டது என்றும் முகமது காடோர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் இராக்கின் மொசூல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து ஐஎஸ் அமைப்பினர் மாஷ்கி கேட் பகுதியை அழிப்பதற்கு முன்பு இருந்த நிலையை மீட்பதற்கு பணியாற்றி வருகின்றனர்.
இராக்கில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் ஆராய்ச்சி இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல அண்டை நாடான சிரியாவிலும் ஐஎஸ் அமைப்பால் பல தொல்லியல் இடங்கள் அழிக்கப்பட்டன.
அங்கு பாமிரா என்ற நகரில் உள்ள பெல் கோவில் ஐஎஸ் அமைப்பால் 2015ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. அதேபோல இராக்கில் தீவிரவாதிகளால் மட்டுமல்ல, கடத்தல்காரர்களாலும் பல தொல்லியல் சார்ந்த இடங்கள் சேதப்படுத்தப்பட்டன.
2003ஆம் ஆண்டு இராக்கை அமெரிக்கா படையெடுத்தபோது எஞ்சி இருந்த பாபிலோன் நகரம் ராணுவத் தளமாக பயன்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
அந்த நகரில் பள்ளம் தோன்றுதல், நிலத்தை சமம் செய்தல், சுரண்டுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அங்கிருந்த படைகள் பல சேதங்களை ஏற்படுத்தியதாக 2009ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.