நிவர் புயலின் போதும், புயலுக்கு பின்பும் அதிகமாக விவாதிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது பயிர்க்காப்பீடு. வேளாண் அலுவலகங்களில் காப்பீடு செய்ய விரைவதற்கு முன்பு வேளாண் காப்பீடு குறித்து அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
விவசாயிகள் வியர்வை சிந்தி உழைத்து இறுதியில் இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் சேதமடைவது தொடர்கதையாக உள்ளது. பயிர் சேதமடைவதால் ஏற்படும் இழப்பை சரிக்கட்டும் வகையில் பயிர்க் காப்பீடு செய்ய மத்திய அரசும், மாநில அரசும் வலியுறுத்தி வருகின்றன. ஏற்கெனவே இருந்த திட்டத்தை தற்போது ''புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டமாக மாற்றியுள்ளது மத்திய அரசு. இத்திட்டத்தில் இணைவது விவசாயிகளுக்குக் கூடுதல் சுமையா அல்லது பாதுகாக்கக்கூடிய முக்கிய அம்சமா என்பது குறித்து .முக்கிய பத்து விஷயங்கள் உங்களுக்காக.
1. விவசாயிகள் தங்களுடைய விதை செலவுடன் பயிர்க் காப்பீடும் முதல் செலவாக இருக்க வேண்டும் என்றாலும் காப்பீடு பெறுவதற்கு விவசாயி எந்த வங்கியிலும் கடன் பெற்றிருக்கக்கூடாது என்று நிபந்தனை உண்டு. கடன் பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட வங்கியிலேயே பயிருக்கான காப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும்.
2. காப்பீடு பெற விண்ணப்பிக்கும் விவசாயிகளின் ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மின்னணு பரிமாற்றத்துக்கு உகந்த வகையில் வங்கிக் கணக்கு இருப்பது அவசியம்.
3. காப்பீட்டில் இணைய முன்மொழிவு படிவம், வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC தகவல்களுடன் கூடிய வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கத்தின் நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் போன்றவற்றையும் இணைக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் சேர, வேளாண் துறை அலுவலகம், பொதுச் சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, கிராம வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வழியே காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம்.
4. விதைப்பதற்கு முன் தங்களது பயிர்களுக்குக் காப்பீடு செய்ய நினைத்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் விதைப்பு சான்றிதழைப் பெற்றுத்தர வேண்டும். அதுவும் காப்பீட்டுத் திட்டத்தை உள்ளடங்கியதாக இருக்க வேண்டும். விதைத்த ஒரு மாதத்தில் அடங்கலை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
5. சில பயிர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில், குறிப்பிட்ட குறு வருவாய் வட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. ஆகையால், உங்கள் பகுதியில் எத்தகைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள் என்ற விவரத்தை அறிந்த பின்பே காப்பீடு செய்ய வேண்டியது அவசியம். பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தா பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்தாலும் பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டையும், நிவாரண தொகையை கோர முடியாது.
6. உங்கள் பகுதியில் செயல்படுத்தப்படும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விவரங்களை அருகில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். காப்பீட்டுக்கான தொகையை மத்திய அரசு வரையறுத்துள்ளது. நெல் பயிருக்கு ஏக்கருக்கு 32,950 ரூபாய் காப்பீட்டுத் தொகை. இதற்கான பிரீமியமாக, 494 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். இதைப்போலவே, மற்ற பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகையையும், பிரீமியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு தானியப் பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகையிலிருந்து 1.5 சதவிகிதம் பிரிமீயம் தொகையாகவும், தோட்டக்கலைப் பயிர் மற்றும் பணப்பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகையிலிருந்து 5 சதவிகிதம் பிரிமீயம் தொகையாகச் செலுத்த வேண்டும்.
7. பயிர்க் காப்பீடு செய்வது முக்கியமல்ல, பயிர்க் காப்பீடு செய்தவுடன் பயிர் செய்ததற்காகக் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கலிலும், கிராம நிர்வாக அலுவலக பதிவேட்டிலும் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம். பயிர்க் காப்பீடு செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் குறிப்பிட்ட பயிருக்கான அடங்கல் பெறாமலும், பதிவேட்டில் பதிவும் செய்யாமல் இருந்தால் காப்பீட்டுத் தொகையும், நிவாரணமும் பெற முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
8. பயிர்கள் பாதிப்படைந்திருக்கிறது என்பதை வேளாண் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஊரில் விசாரித்து அவர்கள் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்களுக்குத் தகவல் அனுப்புவார்கள். அதன் அடிப்படையிலேயே பயிர்க் காப்பீட்டுத் தொகையும், நிவாரணமும் கிடைக்கும். குறிப்பிட்ட ஊரில் ஒரு விவசாயி பாதிக்கப்பட்டார் என்பதற்காகக் காப்பீடு வழங்குவது கிடையாது.மேலும், எவ்வளவு பரப்பளவு காப்பீடு வழங்குவது என்பது குறித்தும் முன்பே முடிவு செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஒன்றியத்தில் 500 ஹெக்டேர் என்று வரையறுத்திருந்தால் அந்த பரப்பளவுக்கு மட்டுமே காப்பீடு கிடைக்கும்.
9. எந்த வகையில் பாதிப்பு என்பதையும் முன்னரே வரையறுத்து இருக்கிறார்கள். பயிர் காலத்தில், வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளிக் காற்று, அதிக பரப்பளவில் பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஏற்றவாறு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
10. தற்போது சம்பா பருவத்தில் நெல், பருத்தி, மக்காச்சோளம் பயிரிட்டவர்கள் மட்டுமல்லாது, தக்காளி, வாழை, தென்னை போன்ற தோட்டக்கலை பயிர் செய்தவர்களுக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. வேளாண் காப்பீட்டுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், கூடுதல் விவரங்கள் போன்றவற்றையும் முன்னரே படித்துத் தெரிந்துகொண்டு காப்பீடு செய்வது நல்லது.