உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய இணையதள வணிக நிறுவனமான அமேசானில் மெக்கின்ஸிக்கு உள்ள நான்கு சதவீத பங்கை அவர் தொடர்ந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெஃபுக்கு சொந்தமான விண்வெளி சுற்றுலா நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கை கைவிடுவதற்கு மெக்கன்சி முடிவெடுத்துள்ளார்.
இதற்கு முன்புவரை, கலை வியாபாரி அலெக் வொலின்ஸ்டைன் மற்றும் அவரது மனைவி ஜோசலினுக்கிடையேயான 3.8 பில்லியன் விவாகரத்து இழப்பீடு உலகளவில் அதிகமானதாக கருதப்பட்டது.
"இருவரின் தார்மீக ஆதரவுடன் எங்களது மண முறிவு செயல்பாடு முடிவடைந்துள்ளது" என்று மெக்கின்ஸி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.