Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கோவில்பட்டியில் போஸ்டர் ஒட்டியதை தடுத்த காவல் துறையினரை தாக்கியதாக பாஜகவினர் கைது

Police
, ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (14:40 IST)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்திய போது பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் பாண்டி ஆகியோரை பாஜகவினர் தாக்கியதில் படுகாயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நகர பாஜக தலைவர் மற்றும் ஒரு பாஜக நிர்வாகி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று நள்ளிரவில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் பாண்டி ஆகியோர் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்தி போஸ்டரை அவர்களிடமிருந்து வாங்கியுள்ளனர்.

போலீசார் இந்து முன்னணி போஸ்டரை வாங்கியதை கண்டித்து பாஜக நகர தலைவர் சீனிவாசன் தலைமையில், ஆய்வாளர் சென்ற வாகனத்தை வழிமறித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய ஆய்வாளர் சுஜித் ஆனந்தை பாஜகவின் கோவில்பட்டி நகர தலைவர் சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகி ரகு பாபு உள்ளிட்ட சிலர் சட்டையை கிழித்து தாக்கி காயப்படுத்தினர் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

இதனைக் தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர் என்று கூறும் காவல்துறையினர், பின்னர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்தனர் என்று தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த ஆய்வாளர் சுஜித் ஆனந்த் காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏடிஎஸ்பி கார்த்திகேயன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வாளர் சுஜித் ஆனந்த் காவலர் பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பாஜக நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

கோவையில் பாஜக போஸ்டர்கள் கிழிப்பு

இதனிடையே கோயம்புத்தூரில் நேற்று பெரியார் பிறந்தநாளை ஒட்டி திமுகவினர் கோவையில் சில இடங்களில் போஸ்டர் ஓட்டியுள்ளனர். அதற்கு போட்டியாக பாஜகவினர் சில இடங்களில் "குடும்ப அரசியல் திராவிட மாடல், ஜனநாயக அரசியல் தேசிய மாடல்" என சில இடங்களில் ஒட்டியிருந்தனர்.

இவ்வாறு பாஜக ஒட்டிய போஸ்டர்கள் சில இடங்களில் கிழிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்கள் வீட்டை தயவுசெய்து இடித்துவிடுங்கள்: முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த குடியிருப்புவாசிகள்