Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

CAA, NRC - டெல்லியில் ஜாஃபராபாத் போராட்டத்தில் வன்முறை: மூவர் உயிரிழப்பு - தற்போதைய நிலை என்ன?

CAA, NRC - டெல்லியில் ஜாஃபராபாத் போராட்டத்தில் வன்முறை: மூவர் உயிரிழப்பு - தற்போதைய நிலை என்ன?
, திங்கள், 24 பிப்ரவரி 2020 (21:48 IST)
CAA, NRC - டெல்லியில் ஜாஃபராபாத் போராட்டத்தில் வன்முறை: மூவர் உயிரிழப்பு - தற்போதைய நிலை என்ன?
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வட கிழக்கு டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், மூவர் உயிரிழந்துள்ளனர்.
 
ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான் மற்றும் ஷாஹித் ஆல்வி என்ற ஆட்டோ ஓட்டுநரும் இந்த வன்முறை சம்பவங்களில் இறந்துள்ளதாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்லி வன்முறை சம்வங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
 
முகமது சுல்தானின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவரது காலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால், அவர் இறந்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
 
உயிரிழந்த மற்றொருவரான ஷாஹித் ஆல்வியின் சகோதரனான ரஷீத் ஆல்வி இது குறித்து பிபிசியிடம் கூறுகையில், ''என் சகோதரர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார்.இன்றைய போராட்டத்தின்போது அவரது வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது'' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
 
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வட கிழக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், தலைநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைளை எடுக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
முன்னதாக டெல்லி பஜன்புரா பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களில் குடிமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது.
 
டெல்லி கோகுல்புரி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில், தலைமை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதாகவும், துணை போலீஸ் ஆணையர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது.
 
இறந்த போலீஸ் கான்ஸ்டபிளான ரத்தன் லால் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியை சேர்ந்தவர் என்றும், கடந்த 1998-இல் டெல்லி போலீசில் அவர் கான்ஸ்டபிளாக சேர்ந்தார் என்றும் ஏஎன் ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
வட கிழக்கு டெல்லியில் உள்ள சந்த்பாக் பகுதியில் உள்ள பிபிசி செய்தியாளர் சல்மான் ராவி அங்குள்ள நிலையை விவரிக்கையில், 'இந்த பகுதியை விட்டு மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். வாகனங்களும், மக்களும் விரைவாக இந்த இடத்தை விட்டு செல்வதை காண முடிகிறது' என்று கூறினார்.
 
சந்த்பாக் பகுதியில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்ததையும் அவர் கண்டுள்ளார்.
 
ஜாஃபராபாத் செல்லும் பாதைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சல்மான் ராவி மேலும் தெரிவித்தார்.
 
இந்த பகுதியில் நடந்த வன்முறை பற்றி தெளிவான தகவல் எதுவும் தெரியவில்லை என்றாலும், சமூக ஊடகங்கள் மற்றும் சில தொலைக்காட்சி சேனல்களில் வெளியான படங்களில் கல் ஏறியப்படும் காட்சியும், வாகனங்களில் இருந்து தீப்பிழம்பு வெளியேறும் காட்சிகளும் தென்படுகின்றன.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று காலை இந்தியா வந்துள்ள நிலையில், டெல்லியில் நடந்த இந்த போராட்டங்கள் மிகவும் கவனத்தை பெறுகிறது. மேலும் இன்றிரவு டிரம்ப் டெல்லிக்கு வரவுள்ளார்.
 
இன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து டெல்லி இணை போலீஸ் ஆணையரான அலோக் குமார் பிபிசியிடம் கூறுகையில், துணை போலீஸ் ஆணையர் ஒருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
 
சந்த்பாக் பகுதியில் இன்று காலை முதல் கும்பல் சேர்ந்து வந்ததாக குறிப்பிட்ட அவர், நண்பகலில் இந்த கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்ததாக தெரிவித்தார்.
 
பொது மக்களின் சொத்துக்களை தீக்கிரையாக்கி, சூறையாட முயன்ற கூட்டத்தை கட்டுப்படுத்த தாங்கள் தடியடி நடத்த வேண்டியதாக இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.
 
வட கிழக்கு டெல்லியின் இணை போலீஸ் ஆணையரான வேத் பிரகாஷ் சூர்யா நடந்த சம்பவங்கள் குறித்து கூறுகையில், ''மோதலில் ஈடுபட்ட இரு தரப்புகளிடமும் நாங்கள் பேசினோம். தற்போது இங்கு அமைதியான சூழல் காணப்படுகிறது. நிலைமை கட்டுக்குள்  உள்ளது'' என்று குறிப்பிட்டார். 
 
மேலும், வட கிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃபராபாத் மற்றும் மாஜ்பூர் பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் நடத்திவரும் போராட்டம் இன்றும் தொடர்ந்தது.
 
கடந்த வார இறுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக மற்றும் எதிராக இரு குழுக்கள் இடையே நடந்த போராட்டத்தில் கற்கள் வீசப்பட்டு போராட்டக்களம் வன்முறை களமாக மாறியது.
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 
 
இதற்கிடையே டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட மத்திய உள்துறை செயலாளரான அஜய் குமார் பல்லா, ''தற்போது களத்தில் மூத்த அதிகாரிகள் களத்தில் உள்ளனர். போதுமான அளவில் பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது நிலமை கட்டுக்குள் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.
 
ஜாஃபராபாத் வன்முறை சம்பவத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக ஜிடிபி மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோசமான சாலையால் விபத்து ஏற்பட்டால்.... சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!