முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
”450 சீனப் பொருட்களை புறக்கணியுங்கள்” - டைம்ஸ் ஆஃப் இந்தியா
மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் சீன ராணுவம் அத்துமீறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு 450 சீன பொருட்களை புறக்கணிக்குமாறு கோரியுள்ளது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற கைகலப்பில் இருதரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது.
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 13 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன இறக்குமதி பொருட்களை குறைக்க வேண்டும் என்பதே நோக்கம் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் இந்தியா ஆண்டொன்றிற்கு சுமார் 5.25 கோடி மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்கிறது.
"முதற்கட்டமாக பலதரப்பட்ட 3000க்கும் மேற்பட்ட பொருட்களை கூட்டமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. அது இந்தியாவிலும் தயாரிக்கப்படுகிறது. ஆனால் விலை மலிவாக கிடைப்பதால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது" என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
`கொரோனாவை எதிர்கொள்ளும் திட்டத்தில் மாற்றம் வேண்டும்` - டைம்ஸ் ஆஃப் இந்தியா
கொரோனாவை எதிர்கொள்வதற்கான தமிழகத்தின் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க அதிக நெரிசல் கொண்ட பகுதிகளில் கூட்ட நெரிசலை குறைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று ஆணையம் கோரியுள்ளது.
தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், மக்களை தனிமைப்படுத்தும் வசதிக்காக பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளது.
"வாழ்வதற்கான உரிமை அனைவருக்குமானது; குடிமக்கள் வாழ்வதற்கான சூழலை அரசு உருவாக்கித் தர வேண்டும். குறிப்பாக, விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
`பொருளாதார இழப்பை ஈடுகட்ட 9000 கோடி தேவை` - தினமணி
தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்வதற்கும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் 9000 கோடி தேவை என பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.
மாநில முதலமைச்சர்களுடன் இரண்டாவது நாளாக பிரதமர் நரேந்திர மோதி நேற்று ஆலோசனை நடத்தினார்; காணொளி வாயிலாக நடைபெற்ற அந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடியும் பங்கேற்றார்.
மேலும் மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏற்கனவே கோரியிருந்த 3000கோடியை வழங்க வேண்டும் என்றும், கொரோனாவை எதிர்கொள்ள தேசிய பேரிடம் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 1000 கோடி வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.
மும்பை பாஜக தலைவர் மீது மோசடி புகார் - இந்து தமிழ் திசை
மும்பை பாஜக பொதுச் செயலாளர் மோகித் கம்போஜ் மற்றும் நான்கு பேருக்கு எதிராக ரூ.57 கோடி வங்கி மோசடி வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
இது தொடர்பாக மோகித் கம்போஜின் இல்லம் மற்றும் அலுவலக வளாகங்களில் சிபிஐ ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. தனியார் நிறுவனத்தில் மேற்கொண்ட ரெய்டில் குற்றங்கள் தொடர்பான சில ஆவணங்களும் சிக்கின.
அலியான் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான மோகித், 2013ஆம் ஆண்டில் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து 60 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். 2015ஆம் ஆண்டு வரை கடன்களை வழங்காததால் மோகித்தின் நிறுவனம் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
நிறுவனம் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் அதன் இயக்குனர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் புரோமோட்டர்கள் வங்கியின் பணத்தை பெற்று மோசடி செய்ததால் வங்கிக்கு ரூ 57 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் சிபிஐக்கு புகார் அளித்தது என விவரிக்கிறது அச்செய்தி.