Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் சீனா; ஏங்கும் இந்தியா - இந்த நிலை ஏன்?

ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் சீனா; ஏங்கும் இந்தியா - இந்த நிலை ஏன்?
, திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:50 IST)
இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள். இரண்டுமே அளவில் பெரியவை மற்றும் பெரிய மக்கள் தொகை கொண்டவை. இரண்டு நாடுகளுமே வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் ஒலிம்பிக் போட்டி என்று வரும்போது, ​​சீனாவுடன் ஒப்பிடுவது இந்தியர்களுக்கு தலைகுனிவான விஷயமாக உள்ளது.
 
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை காணப்படும் போக்கு முந்தைய ஒலிம்பிக்கைப் போலவே இருக்கிறது. பதக்கப் பட்டியலில் சீனா முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இருக்கும் அதேநேரம் இந்தியா , பட்டியலின் கடைசியிலிருந்து 5 வது இடத்தில் உள்ளது.
 
இந்தியாவின் இந்த ஏமாற்றமளிக்கும் செயல்திறன் குறித்தும், சீனா ஏன் முன்னிலையில் உள்ளது என்பது பற்றியும் யாரிடமாவது பதில் இருக்கிறதா?
webdunia
ஒலிம்பிக்கில் இந்தியா, சீனா போல ஏன் பதக்கங்களை வெல்லமுடிவதில்லை என்று இந்தியாவின் பிரபல முன்னாள் தடகள வீராங்கனை பிடி உஷாவிடம் பிபிசி வினவியது. "நான் கடந்த 20 வருடங்களாக இதே கேள்வியை என்னிடமே கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு பதில் இல்லை."என்று அவர் சொன்னார்.
 
பிடி உஷா, தனது தொழில் வாழ்க்கையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் 103 பதக்கங்களை வென்றுள்ளார். "நான் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். என் பெற்றோர் எப்போதும் உண்மையைப் பேசவேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தனர். ஆனால் நான் உண்மையைச் சொன்னால் அது கசப்பாக இருக்கும். ஆகவேதான் நான் இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை, "என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
கசப்பான உண்மை
 
அந்த கசப்பான உண்மை என்னவென்பதை ஊகிப்பது கடினமாக இல்லை. விளையாட்டோடு தொடர்புடையவர்கள் சொல்வது என்னவென்றால், நாட்டில் கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டிலும் யாருக்குமே சிறப்பு ஆர்வம் இல்லை.
 
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு, இந்தியா தனது 121 ஆண்டு ஒலிம்பிக் வரலாற்றில் 28 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. அதில் ஒன்பது , தங்கப் பதக்கங்கள். அவற்றில் எட்டு ஹாக்கியில் கிடைத்தவை.
 
1900 இல் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் முறையாக பங்கேற்று இரண்டு பதக்கங்களை வென்றது.
 
இந்தியாவைப் போலல்லாமல் சீனா, 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில்தான் முதன்முறையாக பங்கேற்றது. ஆனால் டோக்கியோவுக்கு முன்பாக, 217 தங்கப் பதக்கங்கள் உட்பட 525 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளது.
webdunia
இதுவரை டோக்கியோவில் அதன் செயல்திறன் ஒலிம்பிக் சூப்பர் பவர் போலவே இருக்கிறது. சீனா 2008 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை பெய்ஜிங்கில் நடத்தியது.100 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தையும் பெற்றது.
 
அதிக மக்கள் தொகை கொண்ட நாடு
மேற்கத்திய நாடுகள் எப்போதுமே ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
 
அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் மட்டும் தனது தொழில் வாழ்க்கையில் 28 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார். இது இந்தியாவின் ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றில் (டோக்கியோவுக்கு முன்) வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கைக்கு சமம்.
 
உண்மையில், ஒலிம்பிக் போட்டிகளை பார்க்கும்போது சீனாவும் இந்தியாவும் வெவ்வேறு நிலையில் உள்ளன. பதக்கம் வெல்வது மட்டுமே முக்கியமானதா என்று இப்போது சீனாவில் விவாதம் நடக்கிறது.
 
அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் தனது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகக்கூறி போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு இத்தகைய விவாதம் சீனாவில் தீவிரமடைந்துள்ளது.
 
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒலிம்பிக் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்குப் பின்னால் உள்ள முக்கிய நோக்கம் , விளையாட்டு உணர்வை அதிகரிப்பது மற்றும் தேசிய கெளரவத்தை அடைவதாகும்.
 
மறுபுறம், வீரர்கள் ஏன் பதக்கங்களை வெல்ல முடியவில்லை என்று இந்தியாவில் விவாதம் நடக்கிறது.
 
சீனாவுடன் ஒப்பீடு
பிடி உஷா உலகெங்கிலும் தனது திறமையை டிராக் அண்ட் ஃபீல்டில் நிரூபித்துள்ளார். ஆனால் அவரால் ஒரு ஒலிம்பிக் பதக்கத்தைக்கூட வெல்ல முடியவில்லை, அதற்காக அவர் மிகவும் வருந்துகிறார்.
 
சீனா எப்படி குறுகிய காலத்தில் ஒலிம்பிக் சூப்பர் பவர் ஆனது? என்று பிபிசி ஹிந்தி அவரிடம் கேட்டது. அவர் "டிஸையர்" என்ற ஆங்கில வார்த்தையில் பதிலளித்தார். இது ஒரு ஆழமான வார்த்தை. இதில் பல வார்த்தைகள் மறைந்துள்ளன: ஆசை, ஆவல், பேராசை, இலக்கு, லட்சியம் மற்றும் பேரார்வம்.
 
ஆனால் ' டிஸையர்' இல்லாமல் இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார்களா என்ன?
 
"சீனாவில், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் அதாவது அரசு மற்றும் அரசு சாரா பிரிவினர் அனைவரிடமும், பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற வலுவான விருப்பம் உள்ளது,"என்று பிடி உஷா கூறுகிறார்.
 
பிடி உஷாவின் சிறந்த ஆண்டுகள் 80 களில் கழிந்தன. அந்த தசாப்தத்தின் சீன ஊடகங்களைப் பார்த்தால், ஆரம்ப ஆண்டுகளில் பதக்கங்களைப் பெறுவதற்கான இந்த ஆசை வெறும் ஆசை மட்டுமல்ல, உண்மையில் அது ஒரு 'வெறி' என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். மேலும் நாட்டின் பெருமையை மேம்படுத்த வேண்டும் என்ற பேராவலும் அதில் இருந்தது.
 
சீனாவின் இன்றைய தலைமுறை தன் தலைவர் ஷி ஜின்பிங்கின் அறிக்கையால் ஈர்க்கப்பட்டுள்ளது. "விளையாட்டுகளில் வலிமையான நாடாக இருப்பது சீனக் கனவின் ஒரு பகுதி", என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீன அதிபரின் இந்த அறிக்கை ' டிஸையர்' ஐ அடிப்படையாகக் கொண்டது.
 
இந்திய வீரர்களுக்கு ஊக்கம்
 
பொதுவாக இந்தியாவின் குடிமக்களும் தலைவர்களும் ஒவ்வொரு துறையிலும் தங்களை சீனாவுடன் ஒப்பிடுகின்றனர். சீனாவை ஒப்பிடும்போது தங்கள் ஒவ்வொரு தோல்விக்கும், அதன் ஜனநாயகமற்ற தன்மையின் மீது குற்றம் சுமத்துகின்றனர். , ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற ஜனநாயக நாடுகளும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் வலிமையான நாடுகளான உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
 
சீனாவுடன் இந்தியர்கள் இத்தனை போட்டிபோடும்போது, சீனா போன்ற விளையாட்டுத் தரம் இந்தியாவில் ஏன் இல்லை? அல்லது இந்திய வீரர்களுக்கு சீனா ஏன் உத்வேகம் அளிக்கவில்லை?
 
1970 களில், இரண்டு ஏழை நாடுகள், மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட சமமாக இருந்தன, ஆனால் அவற்றில் ஒன்று விளையாட்டில் மிகவும் முன்னேறி உச்சம் தொட்டநிலையில் மற்றொன்று ஏன் மிகவும் பின்தங்கிவிட்டது?
 
ஒரு நாடு பதக்கங்களில் அமெரிக்காவுடன் போட்டியிடுகிறது. ஆனால் மற்றொன்று, உஸ்பெகிஸ்தான் போன்ற ஏழை நாட்டிற்கும் பின்னால் உள்ளது.
 
சீனா மற்றும் இந்தியா
மஹா சிங் ராவ் ஒரு புகழ்பெற்ற மல்யுத்த பயிற்சியாளர் மற்றும் இந்திய விளையாட்டு அதிகார அமைப்பின் துரோணாச்சார்யா விருது பெற்றவர்.
 
பிபிசியின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "சீனாவும் இந்தியாவும் ஏறக்குறைய ஒரே மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.நமது பெரும்பாலான விஷயங்களும் ஒரே மாதிரியானவை. அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சீன வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் பதக்கம் வெல்வதில் வெற்றிபெற்றுள்ளனர்," என்றார்.
 
வி.ஸ்ரீவத்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளின் முன்னாள் விளையாட்டுப்பிரிவு ஆசிரியர். பல ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் தோல்விகள் மற்றும் அவ்வப்போது கிடைத்த வெற்றிகளை நேரில் கண்டு எழுதிய பரந்த அனுபவம் அவருக்கு உள்ளது .
 
சீனாவில் உள்ள அனைத்து ஏற்பாடுகளும் ' 'ராணுவ ரீதியில்' செய்யப்பட்டிருக்கும். அதை அனைவரும் கட்டாயமாக பின்பற்றவேண்டும். இந்தியாவில் இதைச் செய்வது கடினம் என்று . என்று பிபிசி ஹிந்தியுடனான உரையாடலில் அவர் தெரிவித்தார்.
 
தங்கள் பிள்ளைகள் குழந்தை பருவத்திலிருந்தே விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும் என்று சீனாவில் பெற்றோர்களும் குடும்பங்களும் விரும்புகிறார்கள். அதே நேரம் இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் பெற்றோர்கள் , குழந்தைகளின் கல்வியிலும் , பின்னர் அவர்களின் வேலையிலும் கவனம் செலுத்துகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
 
சீனாவின் வெற்றிக்கு என்ன காரணம்?
சீனாவின் வெற்றிக்கு பின்வரும் விஷயங்களே காரணம் என்று பிபிசியிடம் பேசிய, சிங்கப்பூரில் வசிக்கும் மூத்த சீன பத்திரிகையாளர் சுன் ஷி, விளக்குகிறார்
 
அரசு தலைமையிலான ஒட்டுமொத்தத்திட்டம்.
மக்களின் பெரும் பங்கேற்பு
ஒலிம்பிக் வாரியாக இலக்கு அமைத்தல்.
ஹார்ட் வேர் மற்றும் சாஃப்ட் வேர் இரண்டிலும் வலிமை
திறமை கண்டுபிடிப்பு மற்றும் ஊக்குவிப்பு வழிமுறை
பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு
"ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்கும், சீனாவில் உறுதியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சீனா தனது விளையாட்டு உள்கட்டமைப்பை பெரிதும் மேம்படுத்தியுள்ளது மற்றும் பல்வேறு விளையாட்டு உபகரணங்களை சீனாவால் சொந்தமாக தயாரிக்க முடியும்."என்று சுன் ஷி சுட்டிக்காட்டுகிறார்.
 
சீனாவின் ஒலிம்பிக் வெற்றிகள் இந்தியாவில் ஆர்வத்துடனும் பொறாமையுடனும் பார்க்கப்படுவது போலவே, இந்தியாவின் தோல்விகள் , சீனாவில் பெரிதும் விமர்சிக்கப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் சீனா 70 பதக்கங்களை பெற்றநிலையில், இந்தியா இரண்டு பதக்கங்களை மட்டுமே வென்றது. இந்தியாவின் "விளையாட்டு மீதான அணுகுமுறை" இதற்குக்காரணம் என்று ரியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு 'சைனா டெய்லி' குற்றம் சாட்டியது.
 
"பதக்கப் பட்டியலில் சீனா 70 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் தான் பெற்ற 88 பதக்கங்களை ஏன் இந்த முறை அதிகரிக்க முடியவில்லை என்று சீனா விவாதித்துக்கொண்டிருக்கும். மாறாக இந்தியா, பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி சிந்து மற்றும் மல்யுத்தத்தில் வெண்கல பதக்க வெற்றியாளர் சாக்க்ஷி மல்லிக்கிற்கு பரிசுத்தொகை மற்றும் மதிப்புமிக்க அரசு விருதுகளை வழங்கியுள்ளது. பதக்கங்களை பெறத்தவறிய ஜிம்னாஸ்ட் தீபா கர்மாகர் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர் ஜீத்து ராய் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர். இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில், தங்கம் மற்றும் வெள்ளி உட்பட ஒரு டஜன் பதக்கங்களை வென்றுள்ளனர். ஆனால் ரியோவில் எந்த பதக்கத்தையும் அவர்களால் வெல்ல முடியவில்லை." என்று அந்த செய்தித்தாள் கூறியது.
 
விரக்திக்குப் பிறகு இயல்புநிலை
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது, முந்தைய போட்டிகளைப் போலவே, இந்த முறையும் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர்கள் வெறுங்கையுடன் நாடு திரும்புகிறார்கள். சீனா பதக்க மழையில் நனைந்துகொண்டிருக்கும் அதே நேரம் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளது.
 
ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தபிறகு, இந்தியாவின் தோல்விக்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவிப்பார்கள் . ஊடகங்கள் தோல்வி குறித்து அலசும். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு எல்லாம் இயல்பாகிவிடும் என்று விளையாட்டு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
இந்தியாவின் தோல்விக்கு விளையாட்டு வீரர்கள் மீது முழுமையாக குற்றம்சாட்ட முடியாது என்று விளையாட்டு நிபுணர்களுடன் பேசியதன் அடிப்படையில் தெரிகிறது. இந்தியாவின் பெரும்பாலான குறைபாடுகள் பற்றி மக்களுக்குத் தெரியும். அவை:
 
விளையாட்டு கலாச்சாரம் குறைவாக இருப்பது
குடும்ப-சமூக ஒருங்கிணைப்பு இல்லாதது
அரசுகளுக்கு முன்னுரிமை இல்லை
விளையாட்டு கூட்டமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல்
விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் சரியான உணவு இல்லாதது.
ஊழல் மற்றும் உறவினர்களுக்கு தனிச்சலுகை
வறுமை காரணமாக, விளையாட்டுக்கு முன் வேலைக்கு முன்னுரிமை அளித்தல்
தனியார் ஸ்பான்சர்ஷிப் இல்லாமை
இந்த குறைபாடுகளில் சிலவற்றை அமீர் கான் தனது வெற்றிகரமான 'தங்கல்' திரைப்படத்தில் மிக நன்றாக முன் வைத்துள்ளார்.
 
விளையாட்டின் இந்த நிலைக்கு யார் பொறுப்பு - அரசா, குடும்பமா, சமூகமா அல்லது அனைவருமா?
 
இதற்கு அனைவரும் பொறுப்பு என்கிறார் பிடி உஷா. " விளையாட்டு யாருக்கும் முன்னுரிமையாக இல்லை. நாம் தகவல் தொழிநுட்பம் மற்றும் பிற துறைகளில் உலக புகழ் பெற்றவர்களை உருவாக்குகிறோம். பல துறைகளில் உலகின் பல நாடுகளை விட நாம் முன்னணியில் இருக்கிறோம், நாம் ஏன் விளையாட்டில் இல்லை? இங்கு திறமைக்கு பஞ்சமில்லை. இங்கு விளையாட்டு யாருக்கும் முன்னுரிமையாக இல்லை."என்று அவர் குறிப்பிட்டார்.
 
ஒரு இளம் வீரரின் ஆரம்ப நாட்களில், குடும்பம் மற்றும் சமூகத்தின் முழு ஆதரவு தேவைப்படுகிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முன்னாள் விளையாட்டு ஆசிரியர் ஸ்ரீவத்ஸ் தெரிவிக்கிறார்.
 
"ரஷ்ய கூடைப்பந்தாட்டத்துடன் தொடர்புடையவர்கள் திறமையை தேடி இந்தியாவுக்கு வந்தனர். அவர்கள் 15-16 வயது மற்றும் ஆறு அடிக்கு மேல் உள்ள 126 சிறுவர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களின் பயிற்சியைத் தவிர, அவர்களின் கல்விப் பொறுப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த நாள் சிறுவர்களின் பெற்றோர்கள் கையெழுத்து போட அழைக்கப்பட்டனர், ஆனால் வயலில் யார் வேலை செய்வார்கள், யார் மாட்டை மேய்ப்பார்கள், யார் அவர்களுக்கு வேலை கொடுப்பார்கள்? என்று பெற்றோர்கள் கூச்சலிட ஆரம்பித்துவிட்டனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு வேலைக்கு அனுப்ப விரும்புவதை தனது 50 வருட தொழில்வாழ்க்கையில் தெரிந்துகொண்டதாக ஸ்ரீவத்ஸ் கூறுகிறார், ஆனால் இன்று அரசு வேலைகள் கூட குறைவாக உள்ளது. "விளையாட்டு என்பது அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு மட்டுமே" ஆனால் நகரத்தில் வசிக்கும் குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் விளையாட்டைத் தொடர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
டென்னிஸ் வீரர் லியாண்டர் பேயஸின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டுகிறார், அவரது தந்தை தனது மகனின் டென்னிஸ் வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தார்.
 
உலகின் பல பெரிய விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கான பெருமை அவர்களின் பெற்றோருக்கு அளிக்கப்படுகிறது. புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாஸி, தனது சுயசரிதையான 'ஓபன்' இல், தன் தந்தையே தனது வெற்றிகரமான வாழ்க்கைக்குக்காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் தனக்கு டென்னிஸில் ஆர்வம் இல்லாதபோதிலும், தனது தந்தை தினமும் காலையில் பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாக அவர் எழுதினார். டென்னிஸ் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்காக அவர் தனது மூத்த மகனிடம் அகாஸிக்கு எதிரான போட்டியில் தோற்குமாறு கூறுவார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அகாஸி விம்பிள்டன் பட்டத்தை வென்றபோது, ​​அவர் முதலில் தனது தந்தையை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
 
மூத்த மல்யுத்த பயிற்சியாளர் மகா சிங் ராவ், விளையாட்டு அமைச்சகத்தின் இந்திய விளையாட்டு அதிகார அமைப்புடன் தொடர்புடையவர். நாட்டில் விளையாட்டை ஊக்குவிப்பதே இதன் வேலை. இது நாடு முழுவதும் நிறைய பணிகளை செய்துள்ளது ஆனால் அடிமட்டத்தின் நிலை மாறவில்லை.
 
விளையாட்டு நாட்டின் முன்னுரிமை அல்ல என்று ராவ் , வருத்தத்துடன் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்தியாவில் விளையாட்டுக்கு முன்னுரிமை இல்லை. எனவேதான், மத்திய அரசுஅல்லது மாநில அரசுகளின் வரவு செலவுத் திட்டம் இதன் தேவைக்கு ஏற்றவாறு இல்லை. கிட்டத்தட்ட அனைத்து மாநில அரசுகளின் தனிநபர் விளையாட்டு பட்ஜெட் பத்து பைசா கூட இல்லை."என்று அவர் சுட்டிக்காட்டினார்.
 
விளையாட்டுகள் அரசின் முன்னுரிமை இல்லை, அதே நேரம் அது தனியார் தொழிலதிபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் முன்னுரிமையாகவும் இல்லை. ஸ்ரீவத்ஸ் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் விளையாட்டு குழுவில் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுமாறு பல தனியார் நிறுவனங்களிடம் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
 
"நாங்கள் விளையாட்டுத்துறையில் உள்ள பிரச்சினைகளை மிகவும் தீவிரமாக விவாதித்தோம். நீங்கள் ஏன் சில விளையாட்டுகளைத் தத்தெடுக்கக் கூடாது என்று ஒரு தொழிலதிபரிடம் சொன்னவுடன், அவர் கிரிக்கெட்டை ஸ்பான்ஸர் செய்கிறோம், அதில் எங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று சொல்லுவார். ஹாக்கியில் நான் பணம் போடவிரும்பவில்லை, ஏனென்றால் இந்தப்பணம் ஹாக்கி வீரர்களை சென்றடையாது என்று மற்றொரு தொழிலதிபர் என்னிடம் கூறினார்."
 
முறையான அமைப்பின் தேவை
பிபிசி ஹிந்தி பேசிய அனைத்து வீரர்களும் அதிகாரிகளும் நாட்டில் விளையாட்டு, ஒவ்வொரு பரப்பிலும் ஒரு இயக்கத்தைப் போல முன்னேற வேண்டும் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். சீனா போன்ற ஒரு முறைமையை நிறுவுவது அவசியம் என்றும் இந்த வேலை, கீழ் மட்டத்திலிருந்து தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 
"அடிமட்டத்திலிருந்து விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்" என்கிறார் மகா சிங் ராவ். இந்தியா படிப்படியாக முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதியான சில முன்னாள் வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல முடியவில்லை என்றாலும், அவர்கள் பல சர்வதேச பதக்கங்களையும் பட்டங்களையும் வென்றுள்ளனர்.
 
இதில் முன்னாள் பேட்மிண்டன் சாம்பியன் பிரகாஷ் படுகோன், பில்லியர்ட்ஸ் வீரர் கீத் சேத்தி மற்றும் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் அடங்குவர்கள். அவர்கள் 'ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட்' என்ற பெயரில் ஒரு பயிற்சி மையத்தைத் திறந்துள்ளனர். அங்கு 10 விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மையம் இதுவரை எட்டு ஒலிம்பியன்களை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
பிடி உஷா தனது மாநிலமான கேரளாவில், மகளிர் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். அதில் 20 பெண்கள் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த மையத்தை அமைக்க மாநில அரசு 30 வருட குத்தகையில் நிலத்தை வழங்கியுள்ளது என்று பிடி உஷா கூறினார்.
 
இந்தியாவில் விளையாட்டு மற்றும் வீரர்களின் நிலையை மேம்படுத்த, அவர்களுக்கு உயர் மட்ட பயிற்சியும், வேலைவாய்ப்பும் வழங்குவது அவசியம் என்று ராவ் குறிப்பிடுகிறார். 2000 வது ஆண்டு முதல், சீனாவைப் போலவே இந்திய வீரர்களுக்கும், அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியலின்படி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறுகிறார்.
 
இந்தியாவில் நிலமை மேம்பட்டுவருகிறது என்று கூறும் ஸ்ரீவத்ஸ், மோதி அரசு கடந்த சில ஆண்டுகளில் மூன்று விளையாட்டு அமைச்சர்களை கொண்டுவந்தது. இதன் காரணமாக கொள்கைகளை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது என்று தெரிவித்தார். தனியார் துறையினர் முன் வந்து விளையாட்டுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
அடுத்த 10-12 ஆண்டுகளில் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை வெல்லத் தொடங்கும் என்று பிடி உஷா நம்பிக்கையுடன் உள்ளார். சீனாவுடன் ஒப்பிடும் அளவிற்கு இல்லையென்றாலும் முன்பை விட அதிக எண்ணிக்கையில் பதக்கங்கள் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார்..
 
அடுத்த தலைமுறை பிடி உஷா, தனது பயிற்சி மையத்தில் இருந்து வருவதை உறுதி செய்ய கடந்த பல ஆண்டுகளாக அயராது உழைத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிராமசபை கூட்டங்களை சீக்கிரம் நடத்துங்க! – மநீம கமல்ஹாசன் மனு!