உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய மலை நகரமான ஜோஷிமட்டில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் கேட்ட பெரும் சத்தம் பிரகாஷ் பூட்டியாலை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.
52 வயதாகும் இந்த தையல்காரர் எழுந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள தனது இரண்டு அடுக்கு மாடி வீட்டை பார்வையிட்டார். அந்த வீட்டிலிருக்கும் 11 அறைகளில் ஒன்பது அறைகளின் சுவர்களில் விரிசல் இருப்பதை கண்ட அவரது குடும்பத்தினர் பீதியடைந்தனர்.
உடனடியாக அந்த வீட்டில் இருந்து தனது 11 குடும்ப உறுப்பினர்களையும், சேதமடையாமல் இருந்த இரண்டு அறைகளுக்கு மாற்றினார், குடும்பத் தலைவரான பிரகாஷ் பூட்டியால். சிறிய அளவில் விரிசல் இருக்கும் அந்த இரண்டு அறைகளில் தான் மொத்த குடும்பமும் இப்போது வரை தங்கியுள்ளது.
ஜோஷிமட்டில் என்ன நடக்கிறது?
"நாங்கள் தூக்கத்தை தொலைத்து, பின்னிரவு வரை விழித்து இருக்கிறோம். ஒரு சிறிய ஒலி கூட பயத்தை உருவாக்குகிறது. அவசரம் ஏற்பட்டால் எப்படி தப்பித்து வெளியே செல்வது என்ற சிந்தனையுடன் தான் படுக்கைக்கு செல்கிறோம்," என பூட்டியால் கூறுகிறார்.
ஆனால் வெளியேயும் பாதுகாப்பில்லை. 6,151 அடி (1,874 மீட்டர்) உயரத்தில் இரண்டு பள்ளத்தாக்குகள் சந்திக்கும் ஒரு மலைச்சரிவில் அமைந்துள்ள ஜோஷிமட் நகரம் 20,000 மக்களின் வசிப்பிடமாக உள்ளது. இந்த ஜோஷிமட் நகரம் பூமிக்குள் புதைந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இங்குள்ள 4,500 கட்டிடங்களில் 670க்கும் மேற்பட்ட கட்டிடத்தில் விரிசல்கள் உருவாகியுள்ளன. இதில் ஒர் உள்ளூர் கோயிலும் மற்றும் ஒரு ரோப்வேயும் அடங்கும். நடைபாதைகள் மற்றும் தெருக்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இரண்டு ஹோட்டல்கள் ஒன்றுடன் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. வயல்களில் இருந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டே இருப்பதன் காரணம் குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை.
சுமார் 80 குடும்பங்கள் வரை தங்கள் வீடுகளில் இருந்து அருகில் உள்ள பள்ளி, ஹோட்டல்களில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவினர் இங்கு வந்துள்ளனர். தேவைப்பட்டால் ஹெலிகாப்டர்கள் கொண்டு மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். "உயிர்களைக் பாதுகாப்பதே எங்களின் முன்னுரிமை" என்று உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகிறார்.
நகரமே புதைய என்ன காரணம்?
ஜோஷிமட் நகரமே ஆபத்தான புவியியல் சூழ்நிலைகளில் இருந்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பத்தால் தூண்டப்பட்ட நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து உருவானது தான் மலைச்சரிவில் அமைந்துள்ள ஜோஷிமட் நகரம். இந்த ஊர் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகமுள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது.
நிலம் பல்வேறு காரணங்களுக்காக புதைய தொடங்கி இருக்கலாம். பூமியின் வெளிப்புற அடுக்கில்(Earth's crust) ஏற்பட்ட இயக்கத்தின் காரணமாகவோ, நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட உயர மாறுதல் என பல்வேறு காரணங்களுக்காக இங்குள்ள நிலம் பூமிக்குள் புதைய தொடங்கி இருக்கலாம்.
இது மட்டுமின்றி, மனிதர்களின் நடவடிக்கை கூட இதற்கு காரணமாக இருக்கலாம். உதாரணமாக அதிக நிலத்தடி நீரை பயன்படுத்துவது, முறையற்ற வடிகால் அமைப்பு போன்ற மனிதர்களின் தலையீட்டினால் கூட ஜோஷிமட்டில் இந்த நிலை ஏற்பட்டு இருக்கலாம்.
இதே போன்ற நிலை தான் இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும் நடந்தது என்று புவியியலாளர்கள் நம்புகின்றனர். அதன் முறையற்ற வடிகால் அமைப்பு காரணமாக, ஜகார்த்தா உலகின் பிற நகரங்களை விட வேகமாக மூழ்கி வருகிறது.
உலகெங்கிலும் 80% க்கும் அதிகமான நிலச்சரிவு, நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் தான் ஏற்படுகிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோஷிமட்டின் இந்த நிலைக்கு மனிதத் தலையீடு தான் காரணம் என புவியியலாளர் டி.பி.தோபல் கூறுகிறார். "பல தசாப்தங்களாக விவசாயத்திற்காக இங்குள்ள நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு வந்தது. இதனால் பூமிக்கு அடியில் உள்ள மண் மற்றும் பாறைகள் எளிதில் உடையக்கூடிய அளவில் மாறின. இதனால் பூமிக்கு அடியில் இருக்கும் மண் இலகுவதால், நகரம் மெதுவாக புதையத் தொடங்கி இருக்கிறது," என அவர் விளக்கினார்.
40 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை
1976ஆம் ஆண்டிலேயே, அரசின் ஆய்வு ஒன்று ஜோஷிமட் புதைந்து வருவதாக எச்சரித்தது, மேலும் இப்பகுதியில் கனரக கட்டுமான பணிகளை தடை செய்ய பரிந்துரைத்தது. போதுமான வடிகால் வசதிகள் இல்லாததால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன என்று அது சுட்டிக்காட்டியது. "ஜோஷிமட் நகரம் மனிதர்கள் குடியேற்றத்திற்கு உகந்தது அல்ல" என்று அந்த ஆய்வு எச்சரித்து இருந்தது.
ஆனால் அந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பல தசாப்தங்களாக, இந்த இடம் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக இருந்து வருகிறது.
இங்கிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள இந்துக் கோயில் நகரமான பத்ரிநாத்திற்கு யாத்ரீகர்கள் இந்த வழியாக செல்கின்றனர். இது மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம், பனிச்சறுக்கு போன்ற கேளிக்கைகளுக்காக ஜோஷிமட்டிற்கு வருகின்றனர். இதனால் இந்த நகரத்தில் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளன.
பாதிப்பை அதிகமாக்கிய அரசின் திட்டங்கள்
ஜோஷிமட் நகரத்தை சுற்றி, பல நீர் மின் திட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கான உள்கட்டமைப்பை பணிகளுக்காக புதிய சாலைகள், சுரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால் நிலைமை மோசமானதை அடுத்து, ஜோஷிமட் நகரில் உள்ள என்டிபிசியின் தபோவன் விஷ்ணுகர் நீர்மின் நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், ஹெலாங் பைபாஸ் சாலை பணியும் ஆசியாவின் மிக நீளமான ரோப்வேயான 'ஆலி ரோப்வேயின்' இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.
தபோவன் விஷ்ணுகர் நீர்மின் திட்டத்திற்கான கட்டுமான பணியின் போது டிசம்பர் 2009 இல், ஒரு துளை போடும் இயந்திரம் ஏற்படுத்திய பாதிப்பு சரி செய்யும் வரை தினமும் 7 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வெளியேறியது.
2021 ஆம் ஆண்டில், உத்தராகண்டில் ஏற்பட்ட ஒரு பெரிய வெள்ளத்திற்குப் பிறகு நீர் மின் திட்டத்துடன் இணைக்கப்பட்ட இரண்டு சுரங்கங்களில் ஒன்று மூடப்பட்டது, இதில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் காணாமலும் போய் இருந்தனர்.
ஜோஷிமட்டை காப்பாற்ற முடியுமா?
உத்தராகண்ட் மாநிலம் இயற்கை பேரழிவுகளுடன் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1880 மற்றும் 1999 ஆம் ஆண்டுக்களுக்கு இடையில் பூகம்பம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற ஐந்து பேரிடர்களால் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.
2000 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்களுக்கு இடையே நிலச்சரிவு, மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக 433 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்களுக்கு இடையில், தீவிர வானிலை நிகழ்வுகள் காரணமாக உத்தராகாண்ட் மாநிலத்தில் 1,312 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சுமார் 400 கிராமங்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்றதாக குறிக்கப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டில் மட்டும், உத்தராகாண்டில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் பனிச்சரிவுகள் போன்றவற்றில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை அதிகாரி சுஷில் கந்தூரியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, ஜோஷிமட் நகரில் வசித்தவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பூமி தங்கள் வீடுகளை விழுங்க எவ்வளவுநேரம் எடுக்கும்? இதை எப்படி தடுப்பது என்று எந்த திட்டமும் நம்மிடம் இல்லை.
பல தசாப்தங்களாக மண் எத்தனை அடி குறைந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. காலப்போக்கில் நகரம் எவ்வளவு மூழ்கக்கூடும் என்பது குறித்தும் எந்த ஆய்வும் இல்லை.
மிக முக்கியமாக, ஜோஷிமட்டை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. நகரம் புதைவது தொடர்ந்தால் நகரத்தில் வசிக்கும் 40% மக்களை வெளியேற்ற வேண்டியிருக்கும் என்று உள்ளூர் ஆர்வலரிடம் ஒர் உயர் அதிகாரி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "அது உண்மையாக இருந்தால், நகரத்தின் மற்ற பகுதிகளைக் காப்பாற்றுவது கடினம்" என்று அதுல் சதி கூறுகிறார்.