பெண்களுக்கான கருத்தடை மாத்திரை பிரிட்டனில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியானது. ஆனால், அதேபோல ஆண்களுக்கு இத்தகைய ஒரு மாத்திரை கொண்டு வருவது ஏன் மிகவும் கடினமாக உள்ளது?
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கொண்டு வருவதற்கு சமூக மற்றும் வணிக விருப்பம் குறைவாக இருந்ததே இதற்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இத்தகைய ஒரு மாத்திரை சந்தையில் கிடைக்குமானால், பல ஆண்கள் அதனை சாப்பிடுவதை விரும்புவர் என்று கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இந்நிலையில், குழந்தை பிறப்பதை தடுக்கும் ஆண்களுக்கான மாத்திரை ஒன்று மனித பாதுகாப்பு தொடர்பான முதல் கட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது என்று முன்னிலை மருத்துவ மாநாட்டில் பங்கேற்ற நிபுணர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விந்தணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஹார்மோன்களை கொண்டுள்ள இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட வேண்டியிருக்கும்.
ஆணுறை மற்றும் விந்தணுக்குழாய் நீக்க அறுவை சிகிச்சை (வஸக்டமி) போன்ற தற்போது ஆண்களுக்கு இருக்கின்ற குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளோடு இந்த மாத்திரையும் சேரவுள்ளது.
ஆனால், இந்த மாத்திரை சந்தைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என்று 'என்டாக்டரின் சொஷைட்டியின்' ஆண்டுக் கூட்டத்தில் மருத்துவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.