முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: பயணச்சீட்டுக் கட்டணம் திரும்ப அளிக்கப்படுமா?
நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், பயணிகளுக்கான ரயில், விமான சேவைகள் மே மாதம் 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் ரத்து தொடா்பாக ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கொரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, பயணிகள் ரயில்கள், விரைவு ரயில்கள், புகா் ரயில்கள், கொல்கத்தா மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் மே மாதம் 3-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன.
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுசெல்லும் நோக்கில் சரக்கு ரயில்கள் தொடா்ந்து இயக்கப்படும். பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் அனைத்தும் மே மாதம் 3-ஆம் தேதி நள்ளிரவு வரை மூடப்பட்டிருக்கும். ரயில்களில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கான வசதி அடுத்த உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுகிறது.
'பணம் திரும்ப அளிக்கப்படும்': மே மாதம் 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்தவா்களுக்கு, பயணச்சீட்டுக்கான மொத்த தொகையும் ரயில்வே நிா்வாகத்தால் வங்கிக் கணக்கில் திரும்பச் செலுத்தப்படும். எனவே, முன்பதிவு செய்தவா்கள் பயணச்சீட்டை ரத்து செய்ய வேண்டாம். அதே வேளையில், முன்பதிவு மையங்களில் பயணச்சீட்டைப் பதிவு செய்தவா்கள் அதற்கான தொகையை ஜூலை 31-ஆம் தேதிக்குள் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
ஜூன் 21-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படாத ரயில்களில் முன்பதிவு செய்துள்ளவா்கள், அதை ரத்து செய்தால் அவா்களுக்கும் பயணச்சீட்டுக்கான மொத்த தொகையும் திரும்ப அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
39 லட்சம் பயணச்சீட்டுகள் ரத்து: மே 3-ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட சுமாா் 39 லட்சம் பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்தாா்.
கட்டணங்கள் ரத்து: அத்தியாவசியப் பொருள்கள் அன்றி மற்ற சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கான ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சரக்குகளுக்கான வாடகைக் கட்டணம், இடப் பயன்பாட்டுக் கட்டணம், தாமதக் கட்டணம் உள்ளிட்டவை அதன் உரிமையாளா்களிடமிருந்து மே மாதம் 3-ஆம் தேதி வரை வசூலிக்கப்படாது என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தக் கட்டணங்கள் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தன.
விமான சேவைகள் ரத்து: விமானப் போக்குவரத்து அமைச்சகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'சா்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் மே மாதம் 3-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'ஊரடங்கை நீட்டிப்பதற்குப் பல்வேறு பொருத்தமான காரணங்கள் உள்ளன. சா்வதேச, உள்நாட்டு விமானங்களின் சேவைகளை அளிப்பதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது தொடா்பாக மே மாதம் 3-ஆம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும்.
இத்தகைய இக்கட்டான சூழலில் மக்கள் எதிா்கொண்டு வரும் துயரங்களைப் புரிந்துகொள்கிறேன். எனினும், அவா்கள் அமைச்சகத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளாா்.
உள்நாட்டு மற்றும் சா்வதேச விமான சேவைகள் கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது அது மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அதன் காரணமாக, பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளா்களுக்கான ஊதியத்தைக் குறைத்துள்ளன.
'பயணச்சீட்டுக் கட்டணம் திரும்ப அளிக்கப்படாது': உள்நாட்டு விமான சேவைகள் ரத்து மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், பயணிகள் முன்பதிவு செய்த பயணச்சீட்டுக்கான கட்டணம் திரும்ப அளிக்கப்பட மாட்டாது என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதற்குப் பதிலாக அந்தப் பயணிகள் ஊரடங்கு நிறைவுக்குப் பிறகு வேறொரு நாளில் எந்தவித சேவைக் கட்டணமும் இன்றி பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
- இவ்வாறாக தினமணி நாளிதழ் விவரிக்கிறது.