கொரோனாவை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு 12 பில்லியன் டாலர்கள் வரை நிதியளிக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது. குறைந்த வட்டியில் கடன், தொழில்நுட்ப உதவி, மானியம் ஆகியவை இதில் அடங்கும்.
கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்தநிலைக்கு எடுத்து செல்லலாம் எனக் கணிக்கப்படும் சூழலில் உலக வங்கி இந்த முடிவினை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எங்களாலான முயற்சிகளை நாங்கள் எடுக்கிறோமென உலக வங்கி குழு தலைவர் டேவிட் மால்பஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
கொரோனாவால் இதுவரை 92000 பேர் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் 3000 கடந்து சென்றுவிட்டது. கொரோனா வைரஸ் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் நடந்த நிகழ்வுகளைக் காண்போம்.
கொரோனா அச்சம் காரணமாக 54,000 கைதிகளை இரான் அரசு தற்காலிகமாக விடுவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை பெற்றவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டிருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இரானில் மட்டும் 2336 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர். இரான் தெஹ்ரானில்தான் அதிக அளவில் இறப்பு பதிவாகி உள்ளது. அங்கு 1043 பேர் பலியாகி உள்ளனர்.
இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள மரணங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டில் இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் பெரும்பாலான உயிரிழப்புகள் லோம்பார்டி பகுதியில் தான் நடந்துள்ளது.
இதேபோல் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இறந்தவர்கள் அனைவருமே வாஷிங்டனை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் ஸ்பெயினில் கடந்த பிப்ரவரி 13-ஆம் இறந்த ஒரு 69 வயது நபரின் உடலை உடல் கூறாய்வு செய்ததில், அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்ந்த முதல் மரணம் இதுவாகும்.
தென்கொரியா, இத்தாலி மற்றும் இரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தொற்றுநோய் ஆய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரானில் உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த நஜானின் விரைவில் விடுவிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இவரும் தெஹ்ரான் இவின் சிறையில்தான் உள்ளார்.