சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் சிறுபான்மை வீகர் முஸ்லிம்கள் மீது, சீனா மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி சீன அதிகாரிகள் மீது பல மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்திருக்கின்றன.
சீனாவின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் ஷின்ஜியாங் பகுதியில் வீகர் இஸ்லாமியர்களை ஒரு முகாமில் அடைத்து வைத்திருக்கிறது சீனா. அம்முகாமில் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக, சீன அதிகாரிகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீனாவும் ஐரோப்பிய அதிகாரிகள் மீது தடைகளை விதித்து எதிரிவினையாற்றி இருக்கிறது.
முகாம்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்திருக்கிறது. அதோடு முகாம்கள் தீவிரவாதத்தை எதிர்க்கப் பயன்படுத்தப்படும் மறு கல்வி மையங்கள் என கூறியுள்ளது சீனா.
வீகர் இஸ்லாமியர்கள் நடத்தப்படும் விதம், ஒரு மோசமான அடிப்படை மனித உரிமைகள் மீறல் என பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாமினிக் ராப் கூறினார்.
கடந்த 1989-ம் ஆண்டு தியானென்மென் சதுக்கத்தில், ஜனநாயகத்துக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது சீனா கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்த சம்பவத்துக்குப் பிறகு, வேறு எதற்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் சீனா புதிய தடை எதையும் விதிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தடைகள் என்னென்ன?
பயணத் தடை, சொத்துக்களை முடக்குவது, ஷின்ஜியாங்கில் வீகர் இஸ்லாமியர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் மூத்த அதிகாரிகளை இலக்கு வைப்பது இந்த தடைகளில் அடக்கம்.
சென் மிங்க்யுவோ - ஷின்ஜியாங் பொது பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர்.
வாங் மிங்க்ஷன் - ஷின்ஜியாங் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழு உறுப்பினர்.
வாங் ஜுன்செங் - ஷின்ஜியாங் ப்ரொடெக்ஷன் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்துக்கான கட்சி செயலாளர்.
முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவர் சூ ஹெய்லுன்.
இவர்களைப் போன்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஷின்ஜியாங்கில் இருக்கும் வீகர் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை நெருக்கடிகள், நம் காலத்தில் நிகழும் மிக மோசமான மனித உரிமை நெருக்கடிகளில் ஒன்று என பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் ராப் கூறியுள்ளார்.
"சர்வதேச சமூகம் இது போன்ற மோசமான அடிப்படை மனித உரிமை மீறல்களை கண்டும் காணாமல் இருக்காது என, நாம் சீன அரசாங்கத்துக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்குப் காரணமானவர்களை பொறுப்பேற்கச் செய்வோம்" என தன் சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார் ராப்.
சீனா தொடர்ந்து இனப் படுகொலைகளையும், மனித நேயத்துக்கு எதிரான செயல்களையும் செய்து வருகிறது என அமெரிக்க உள்துறைச் செயலர் ஆன்டனி பிலிங்கன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
வான் ஜுன்செங் மற்றும் சென் மிங்க்யுவா மீது தடை விதித்திருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த இருவரும் ஆதாரமின்றி மக்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது, உடல் ரீதியாக துன்புறுத்துவது என பல மனித உரிமை மீறல்களைச் செய்ததில் தொடர்புடையவர்கள் என்பதால் இவர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருக்கிறது.
"கிடைத்திருக்கும் ஆதாரங்கள், சீன அரசே திட்டமிட்டு மனித உரிமை விதிமீறல்களைச் செய்திருப்பதைக் காட்டுகிறது" என கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஏற்கனவே சீனா வீகர் இஸ்லாமியர்களை நடத்தும் விதம் குறித்து சர்வதேச அளவில் அதிகம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த நேரத்தில், இப்படி ஒரு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சீனா மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் என்ன?
ஷின்ஜியாங்கில் இருக்கும் முகாம்களில் லட்சக்கணக்கிலான வீகர் இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
ஷின்ஜியாங் பகுதி சீனாவின் வட மேற்கில் அமைந்திருக்கிறது. இது தான் சீனாவின் மிகப் பெரிய பகுதி. இந்த ஷின்ஜியாங் திபெத்தைப் போல ஒரு தன்னாட்சி கொண்ட பிராந்தியம். அதாவது இப்பகுதிக்குத் தன்னை நிர்வகித்துக் கொள்வதற்கென சில அதிகாரங்கள் உண்டு. ஆனால் எதார்த்தத்தில் இரு பிராந்தியங்களும் மத்திய சீன அரசால் கடுமையான கட்டுப்பாடுகளைச் சந்தித்து வருகின்றன.
இப்பகுதியில் வாழும் வீகர் இஸ்லாமியர்கள் துருக்கிய மொழியைப் போல தங்களுக்கென தனி மொழியைப் பேசி வருகிறார்கள். அதோடு தங்களை கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் மத்திய ஆசிய நாடுகளோடு நெருங்கியவர்களாகக் கருதுகிறார்கள்.
இப்பகுதியில் வாழும் பெண்களுக்கு, சீன அரசு வலுக்கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு செய்வதாகவும், குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து வைப்பதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் பிபிசி மேற்கொண்ட ஆய்வில், தொடர்ந்து முகாமில் இருக்கும் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதும், தடுப்புக் காவலில் இருப்பவர்கள் துன்புறுத்தப்படுவதும் தெரியவந்தது.
தினமும் இரவு பெண்கள் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, முகமுடி அணிந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீன ஆண்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவார்கள் என ஒரு பெண் வாக்குமூலம் கொடுத்தார்.
முன்பு இது போன்ற ஒரு முகாமில் காவலராக பணிபுரிந்த ஒருவர், தன் பெயர் மற்றும் அடையாளத்தைக் குறிப்பிடாமல் அம்முகாமில் துன்புறுத்தப்படுவது, சரியாக உணவு வழங்கப்படாதது குறித்து விளக்கினார்.
வீகர் முஸ்லிம்கள் பிரச்சனை மற்றும் சீனாவில் கொரோனா பிரச்சனை தொடர்பான செய்திகளை வெளியிட்டதால் பிபிசி உலக செய்தி சேனலுக்கு சீனா தடை விதித்துவிட்டது.
தொடக்கத்தில் அப்படிப்பட்ட முகாம்களே இல்லை என சீனா மறுத்து வந்தது. அதன் பின், அம்முகாம்கள் தீவிரவாதத்தை எதிகொள்ள மிகவும் அவசியமானவை என தன் தரப்பை நியாயப்படுத்தியது. தற்போது மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது சீனா.