நான்கு வாரங்களாக, இந்தியாவும், சீனாவும் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் 3,500 கிலோமீட்டர் (2,174 மைல்) நீள எல்லையின் ஒரு பகுதியில் மோதல் நிலையில் ஈடுபட்டுள்ளன.இவ்விரு நாடுகளும் எல்லை பிரச்சனை தொடர்பாக 1962 ஆம் ஆண்டு போர் ஒன்றை நடத்திய பின்னரும், பல பகுதிகளில் சர்ச்சைகள் நிலவுகின்றன. அவ்வப்போது இந்த இடங்களில் பதட்டங்கள் எழுகின்றன. கடந்த மாதம் இந்த மோதல் தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு தரப்பும் தங்களுடைய படைப்பிரிவுகளை பலப்படுத்தி கொண்டு, எதிர் தரப்பை பின்வாங்க அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் டோக்லாம் என்றும், சீனாவில் தொங்லாங் என்று அறியப்படும் பீடபூமி வழியாக எல்லையில் சாலையை விரிவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தபோது இந்த மோதல் நிலை தொடங்கியது. சீனாவுக்கும், வட கிழக்கு இந்திய மாநிலமான சிக்கிம் மற்றும் பூட்டானுக்கு இடையிலான சந்திப்பில் இந்த பீடபூமி உள்ளது. தற்போது சீனாவுக்கும், பூட்டானுக்கும் இடையில் இந்த இடம் சர்ச்சையில் உள்ளது. இந்த இடத்தை பூட்டான் உரிமை கொண்டாடுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது.
இந்த சாலை பணிகள் நிறைவுபெற்றுவிட்டால், இந்தியாவின் கேந்தர முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் "கோழியின் கழுத்து" எனப்படும் 20 கிலோமீட்டர் (12 மைல்) நிலப்பரப்பை சீனா எளிதாக சென்றடைய வழிசெய்யும் என்பதால் இந்தியா கவலையடைந்துள்ளது. இந்திய பெருநிலப்பகுதியின் வட கிழக்கில் அமைந்துள்ள 7 மாநிலங்களை இந்த பகுதிதான் இணைக்கிறது.
இந்த சாலையை அமைத்த குழுவினரை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்ததாக இந்திய ராணுவ அதிகாரிகள் பிராந்திய செய்தி ஆய்வாளர் சுபிர் பௌமிக்கிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த சீன படைப்பிரிவுகள் இந்திய நிலைகளுக்கு வந்து லால்டென் புறக்காவல் இடத்திலுள்ள இரண்டு சேமிப்பு கிடங்குகளை நாசப்படுத்தியுள்ளன. நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை, நம்முடைய படையினர் மனித தடுப்புச்சுவரை உருவாக்கி, சீனப் படையினரின் மேலதிக ஊடுருவலை தடுத்தனர்" என்று ஊடகங்களிடம் பேசுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்பதால் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையில் ஒரு படை அதிகாரி கூறினார்.
இந்தியா சாலை கட்டுமானத்தை எதிர்ப்பது பற்றிக் கூறுகையில், இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சீன தரப்பின் "வழக்கமான செயல்பாடுகளை" தடுத்தனர் என்றும், இந்தியா உடனடியாக பின்வாங்க வேண்டும் என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தியாவும், சீனாவும் எல்லைப் பகுதிக்கு அதிக படைப்பிரிவுகளை அனுப்பியுள்ளன. இருதரப்பும் நேருக்கு நேர் மோதல் நிலையில் இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைதி நிலவுவதற்காக இந்தியா எந்த நிபந்தனையும் இல்லாமல் படையினரை பின்வாங்க வேண்டும் என்று இந்தியாவுக்கான சீனத்தூதர் லுவோ ட்சாவ்குய் 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார். அவரது இந்த அறிக்கை சீன ராஜதந்திரத்தின் விரிவாக்கமாக பார்க்கப்படுகிறது.
சிக்கிமிலுள்ள நாது லா கணவாய் வழியாக திபெத்தின் மானசரோவருக்கு சென்ற 57 புனிதப் பயணிகளை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி சீனா பதிலடி வழங்கியுள்ளது. இது இந்துக்களின் ஒரு புனித இடமாக இருப்பதால், பக்தர்களை பார்வையிட அனுமதிப்பதற்கு அண்டை நாடுகளுடன் முறையானதொரு ஒப்பந்தம் உள்ளது. அதேவேளையில், இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை மீறுகின்ற செயல் என்று கூறி, இந்த சாலை அமைப்பதை நிறுத்திவிட பூட்டான் சீனாவை கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவின் ஊடுருவலுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதற்கும், இமய மலையோரத்தில் இந்திய படைப்பிரிவுகளுக்கு நிலப்பரப்பு மற்றும் கேந்திர நன்மைகளை வழங்குவதற்கும் ஒரேயொரு பகுதியாக சிக்கிம் இருப்பதாக இந்திய ராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் அதிக படையினரை கொண்டுள்ளனர். அங்குள்ள சீன நிலைகள் இந்தியாவுக்கும், பூட்டானுக்கும் இடையில் நெருக்கப்பட்டுள்ளன.
சீனர்களுக்கு இது தெரியும்.எனவே, இவ்விடத்தில் நமக்கு இருக்கின்ற நன்மைகளை இல்லாமல் செய்ய எப்போதும் முயல்கிறார்கள்" என்று எல்லையில் படைப்பிரிவுகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ககாஜித் சிங் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார். இந்த சாலை கட்டுமானம் இந்தியாவுக்கு கடும் பாதுகாப்பு பாதிப்புக்களை வழங்குவதோடு, தற்போதைய நிலைமையில் குறிப்பிட்டதொரு மாற்றத்தை கொண்டுவரும்" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம், தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு, இந்தியா 1962 ஆம் ஆண்டில் இருந்தது போன்றதல்ல. தன்னுடைய எல்லையின் ஒருமைப்பாட்டை தற்காத்துகொள்ளும் ஆற்றலோடு உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனா சொல்வதென்ன?
இந்த சாலை தன்னுடைய எல்லையில் அமைக்கப்படுவதாக கூறி இந்தப் பகுதியின் இறையாண்மையை சீனா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் படைப்பிரிவுகள்தான் பலவந்தமாக இதில் தலையிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. 1962 ஆம் ஆண்டு போரில் கிடைத்த தோல்வியை இந்தியா நினைவில் கொள்வது நல்லது என்று கூறியுள்ள சீனா, முன்பை விட சீனாவும் பலமிக்கதாய் இருப்பதாக இந்தியாவை எச்சரித்திருக்கிறது.
பிரிட்டனோடு 1890 ஆம் ஆண்டு ஏற்படுத்திய ஒப்பந்தத்தால் சிக்கிம் எல்லைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று திங்கள்கிழமை தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், இந்தியாவின் இந்த மீறல் மிகவும் கடுமையானது என்று தெரிவித்திருக்கிறார்.
அதேவேளையில், இந்த சாலை கட்டுமானத்தை நிறுத்த பூட்டான் ஏற்கெனவே சீனாவிடம் முறையிட்டுள்ள நிலையில். இந்த சாலை பணித்திட்டத்தில் தலையிட்டிருப்பதன் மூலம் பூட்டானின் இறையாண்மையை இந்தியா புறந்தள்ளியிருக்கிறது என்று 'த குளோபல் டைம்ஸ்' செய்தித்தாள் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
சர்ச்சையில் பூட்டானின் பங்கு
சீனாவின் இந்த சாலை கட்டுமானம் இரு நாடுகளுக்கு இடையில் இருக்கும் ஒப்பந்தத்தை மீறுகின்ற செயல் என்று இந்தியாவுக்கான பூட்டான் தூதர் வெட்சோப் நாம்க்யெல் தெரிவித்திருக்கிறார். பூட்டானுக்கும், சீனாவுக்கு இடையில் முறையான உறவுகள் இல்லை. ஆனால், டெல்லியிலுள்ள தூதரகங்கள் வழியாக அவை தங்களின் தொடர்பை பராமரித்து வருகின்றன. தெற்காசியாவில் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருக்கும் பூட்டானோடு இந்த பிரச்சனையை நேரடியாக கையாள சீனா முயன்றுள்ளது என்று பாதுகாப்பு ஆய்வாளர் ஜெய்திப் சாய்கியா பிபிசியிடம் கூறியிருக்கிறார்.
"பூட்டானின் இறையாண்மை பிரச்சனையை எழுப்பியிருப்பதன் மூலம், நேபாளத்தை சீனாவோடு ஈர்த்ததுபோல பூட்டானை சீனாவிடம் திரும்ப செய்வதற்கு அவர்கள் முயலுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்து என்ன?
இந்த பிராந்தியம் சீனா மற்றும் இந்தியாவின் மோதல்களை 1967 ஆம் ஆண்டு கண்டுள்ளது. பதட்டங்கள் அவ்வப்போது ஏற்படுகிறது.சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமாக அதிகரித்த பதட்டங்களில் ஒன்றான இந்த பிரச்சனை பார்க்கப்படுகிறது. திபெத்தின் ஆன்மிக தலைவரான தலாய் லாமா இந்தியாவில் தங்கியிருப்பதும் இரு நாடுகளுக்கு இடையில் நெருடலாகவே இருந்து வருவதும் உண்மை. சீனா தன்னுடையது என்று உரிமை கோரிவரும் இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்திற்கு தலாய் லாமா பயணம் மேற்கொண்டதற்கு எதிராக சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த சில வாரங்களில் இந்த பிரச்சனை எழுந்துள்ளதை உண்மையிலே உணரலாம்.
இருப்பினும், மானசரோவரை பார்வையிட இந்திய மாநிலமான ஹிமாச்சல பிரதேசம் வழியாக வந்த 56 இந்து புனித பயணிகளை சீனா அனுமதித்திருப்பதால். ஆசியாவிலுள்ள பெரிய இந்த இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் வீழ்ச்சியடையாமல் போகலாம். இந்த புனித பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்" என்று மூத்த சுற்றுலா துறை அதிகாரி தீரஜ் கார்பியால் கடந்த வாரம் தெரிவித்தார்.
எல்லை முழுவதும் சீனர்கள் பதட்டத்தை உருவாக்கவில்லை. ஆனால், குறிப்பாக சிக்கிம்-பூட்டான் எல்லையில் மட்டுமே பதட்டத்தை உருவாக்குகிறார்கள் என்பதை இது காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.