இந்திய அரசியலின் உச்சகட்ட பரபரப்பு தற்போதுகர்நாடக மாநிலத்தில்தான் நிலவி வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த அந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 104 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமை கோரியது. பின்னர் நடந்த திடீர் திருப்பமாக ஆட்சியமைக்க உரிமை கோரிய பா.ஜ.க. நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து விலகியது.
இந்நிலையில், 78 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் , 37 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (மஜத). எச்.டி குமாரசாமி கர்நாடகாவின் முதலமைச்சராக வரும் 23-ஆம் தேதியன்று (புதன்கிழமை) பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம் குறித்தும், இது தேசிய அரசியலில் எந்த அளவு தாக்கத்தை உண்டாக்கும் என்பது குறித்தும் மூத்த பத்திரிக்கையாளர் கேஸ்தூர் வாசுகி பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
'கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஒரு புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து நீடிக்குமா என்பதும், இதன் வலிமை எவ்வாறு இருக்கும் என்பதும் போகப்போகத்தான் தெரியும்'' என்று வாசுகி தெரிவித்தார்.
முரண்பாடுகளை புதிய அரசு எப்படி எதிர்கொள்ளும்?
''பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளுடன் கூட்டணி சேரும் காங்கிரசின் முயற்சி, 2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாக தோன்றுகிறது'' என்று தெரிவித்த அவர், இந்தியா முழுவதிலும் 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் மாநில கட்சிகள் ஒன்றிணைந்தால் பெரும்பாலான தொகுதிகளை வெல்ல முடியும் என்ற எண்ணம் அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது'' என்று வாசுகி குறிப்பிட்டார்.
இதனையொட்டி காங்கிரஸ் கட்சிக்கு உள்ள கூட்டணி வாய்ப்புகள் குறித்து சிந்தித்து அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வியூகம் அமைத்து வருகிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
''ஆனால், இந்த புதிய அரசியல் திருப்பத்தில் பல கேள்விகள் மற்றும் முரண்பாடுகள் உள்ளன''
'சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் அவரை கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்து வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளரான ஜி.டி. தேவகெளடா தற்போது இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த முரண்பாட்டை எப்படி பார்ப்பது?'' என்று அவர் வினவினார்.
''கர்நாடகாவில் சமூக ரீதியாக மாறுபட்ட பல வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது இந்த வேற்றுமைகளை, அரசியல் பகைமையை களைந்து இவர்கள் இணைந்து அரசியல் மற்றும் அரசுப் பணியாற்ற வேண்டும். இது எந்த அளவு இரு தரப்புகளிடையே உரசலை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை'' என்று வாசுகி மேலும் தெரிவித்தார்.
பாஜகவின் அரசியல் வியூகம் என்ன?
''காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையே தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள் மற்றும் உரசல்கள் முழுவதும் விலகாத நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் இந்த கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே உண்டான கசப்பை எவ்வாறு சரிசெய்யும்'' என்று கேள்வியெழுப்பினார்.
''மற்ற மாநிலங்களில் இதுபோன்ற முரண்பட்ட அரசியல் கூட்டணிகளுக்கு ராகுல் காந்தி எவ்வாறு முயற்சி செய்யப் போகிறார் என்று தெரியவில்லை''
கர்நாடகாவில் விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மஜத இடையே கூட்டணி இல்லையென காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ள நிலையில், இது எந்த மாதிரியான அரசியல் மாற்றம் என்று மக்கள் குழப்பமடைந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவின் அரசியல் வியூகம் பற்றி கேட்டதற்கு, ''ஆட்சியமைக்க முடியாத நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் எவ்வாறு ஆட்சி அதிகாரத்தை பங்கு போட போகின்றன, ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யப் போகின்றன என்பதை பாஜக நன்கு உன்னிப்பாக கவனித்து வருகிறது'' என்று வாசுகி குறிப்பிட்டார்.
சங்பரிவார் அமைப்பின் 'பி டீம்' : மஜதவை குற்றம்சாட்டிய ராகுல் காந்தி
''37 இடங்களை மட்டும் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி நாளை மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாளில் கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இது என்ன மாதிரியான ஜனநாயகம்? காங்கிரஸ் ஏன் இந்த அளவு சமரசம் செய்கிறது?''
மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியை சங்பரிவார் அமைப்பின் 'பி டீம்' என்று ராகுல் காந்தி தேர்தல் பிரசார காலத்தில் கூறியிருந்தது தற்போதுள்ள நிலையில் நினைவுகூர வேண்டிய ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
குமாரசாமியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பல மாநில தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த கட்சிகளை காங்கிரஸ் கட்சி எவ்வாறு ஒருங்கிணைக்கப் போகிறது என்று தெரியவில்லை என்று வாசுகி குறிப்பிட்டார்.
''நான் 5 ஆண்டுகள் முதல்வராக நீடிப்பேன் என்று நேற்று குமாரசாமி கூறியுள்ளார். ஆனால், இதுபற்றி காங்கிரஸ் கட்சி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே துணை முதலமைச்சர் பொறுப்பு, வெவ்வேறு இலாகா பொறுப்புகள் எந்தக் கட்சிக்கு செல்லும் என்பது போன்ற தகவல்கள், வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன. இதனை எவ்வாறு இந்தக் கட்சிகள் எதிர்கொள்ள போகின்றன என்று தெரியவில்லை'' என்று அவர் கூறினார்.
பாஜகவின் நிலை என்ன?
தற்போது எந்த உடனடி அரசியல் நகர்வையும் பாஜக எடுக்காது என்று நம்புகிறேன். அதே வேளையில், தங்களின் வாய்ப்புக்காக நிச்சயம் அந்தக் கட்சி காத்திருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
''104 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, மற்ற கட்சிகளை சேர்ந்த லிங்காயத்து சமூக சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்று நினைத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனால் அவர் ஆட்சியமைக்க மிகவும் அவசரம் காட்டினார்'' என்று பாஜகவின் அரசியல் நகர்வு குறித்து அவர் குறிப்பிட்டார்.
தற்போது கர்நாடகாவில் ஏற்பட்ட புதிய அரசியல் மாற்றத்தால் எந்தக் கட்சிக்கு ஆதாயம், எந்த கட்சிக்கு இழப்பு என்று கேட்டதற்கு, '' இந்த புதிய திருப்பத்தில், நிச்சயம் மதசார்பற்ற ஜனதாதள கட்சிதான் வெற்றியாளர். இந்த புதிய அரசியல் ஏற்பாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு. பாஜகவை பொறுத்தவரை அவர்களுக்கு வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை'' என்று வாசுகி குறிப்பிட்டார்.