Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மகளை நேசித்த தந்தை; இயற்கையை நேசித்த மகள் - ஒரு நெகிழ்ச்சி கதை

மகளை நேசித்த தந்தை; இயற்கையை நேசித்த மகள் - ஒரு நெகிழ்ச்சி கதை
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (21:38 IST)
பிரபுராவ் ஆனந்தன்
 
திருத்துறைப்பூண்டி அருகே தன்னுடன் பேசாமல் இருந்த மகளுடன் பேசுவதற்கு தந்தை குளத்தை சுத்தம் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ செய்துள்ளது. அத்தோடு சுற்றுச்சுழல் மற்றும் நீர் நிலைகள் மீது சமூக பொறுப்போடு சிந்தித்த சிறுமி நதியாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதாவனம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (37). இவர் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார்.
 
இவரது மனைவி அருள் மொழி (33), மகன் விவேகானந்தம், மகள் நதியா. குழந்தைகள் இருவரும் அருகே உள்ள மருதாவனம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
 
சிவக்குமார் குடித்து விட்டு வீட்டில் மனைவியிடம் சண்டை போடுவது வழக்கமாக இருந்துள்ளது. தந்தையின் இச்செயலால் ஏழாம் வகுப்பு படித்து வரும் மகள் நதியா கடந்த 8 மாதங்களாக தந்தையிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.
 
மகளிடம் பேச முடியாமல் கடந்த 8 மாதங்களாக தவித்து வந்த தந்தை சிவக்குமார் மகள் தன்னிடம் பேசுவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என மகளிடம் கேட்டுள்ளார்.
 
குடியை நிறுத்த வேண்டும், தான் படிக்கும் பள்ளியின் பின்புறம் உள்ள குளம் குப்பைகளால் சூழ்ந்துள்ளது. ஆதலால் மழை காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது, இதனால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் எனக்கும், என்னுடன் படிக்கும் நண்பர்களுக்கும் ஏற்பட வாய்புள்ளது. எனவே அந்த குளத்தை சுத்தம் செய்து கொடுத்தால் பேசுவதாக நதியா கூறியுள்ளார்.
 
மகள் நதியாவின் முன்னிலையில் உணவை மறந்து, நாள் முழுவதும் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் தந்தை ஈடுபட்டார். சமுக அக்கறையுடன் செயல்பட்ட ஏழாம் வகுப்பு படித்து வரும் நதியாவின் இச்செயல் அப்பகுதி மக்கள்,பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை நெகிழ்சி அடைய செய்துள்ளது.
 
குளங்களில் துர்நாற்றம்
 
தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், கும்பகோணம், திருத்துறைபூண்டி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான குளங்கள்,ஏரிகள் என நீர் நிலைகள் அதிகம் உள்ளன.
 
ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜ புயலுக்கு பின் குளங்களில் அவ்வப்போது மீன்கள் இறந்து மிதப்பதாகவும், குளங்களில் அதிகளவில் காணப்படும் ஆகாய தாமரை செடிகள் அழுகி கடுமையான துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் குளங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை எனவும் அப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஆறு மாதம் தந்தையிடம் பேசாத மகள்
 
இது குறித்து நதியாவின் தாத்தா வீராசாமி பிபிசி தமிழிடம் பேசுகையில், என் மகன் சிவக்குமார் மது அருந்திவிட்டு தினந்தோறும் எனது மருமகள் அருள்மொழியுடன் சண்டை போட்டு வந்தான்.
 
இதனை தினந்தோறும் பார்த்த என் பேத்தி நதியா, அப்பாவின் மீது ஏற்பட்ட கோபத்தால் கடந்த 8 மாதங்கள் பேசாமல் இருந்து வந்தாள். சிவக்குமாரால் இதனை தாங்கி கொள்ள முடியாமல் அப்பாவிடம் பேசு என பல முறை நதியாவிடம் கேட்டுள்ளார்.
 
நதியா, தந்தைோடு பேச வேண்டும் என்றால் அவரது பள்ளிக்கு பின்னால் உள்ள குளத்தை சுத்தம் செய்து கொடுக்க வேண்டுமென கூறியதையடுத்து, அடுத்த நாளே நதியா முன்னிலையில் சிவக்குமார் அந்த குளத்தை சுத்தம் செய்தார்.
 
அன்றில் இருந்து என் பேத்தி மீண்டும் அப்பாவிடம் பேச தொடங்கிவிட்டார். இந்த செயல் எங்களுக்கு மிகுந்த மகிழ்சியை தந்துள்ளது என்றார்.
 
நீர் நிலைகள்,இயற்கை மீது ஆர்வம்
 
நதியாவின் ஆசிரியர் அமுதசெல்வி பிபிசி தமிழிடம் இது பற்றி கூறுகையில்,
 
“எங்கள் பள்ளிக்கு பின்னால் உள்ள குளத்தில் ஆகாய தாமரை அழுகி துர்நாற்றம் வீசி வந்தது. அதனை சுத்தம் செய்ய இப்பகுதிகளில் வேலை ஆட்கள் கிடைக்காததால் குளத்தை எப்படி சுத்தம் செய்வது என மாணவி நதியாவிடம் பேசினேன். காரணம் நதியாவுக்கு நீர் நிலைகள்,இயற்கை மேல் அதிக ஆர்வம்; உண்டு. நான் முயற்சி செய்கிறேன் டீச்சர் என கூறி சென்றாள். மறுநாள் காலையில் பள்ளிக்கு வந்து பார்த்தபோது மிக பெரிய ஆச்சரியம். நதியா அவரது அப்பாவை கொண்டே குளத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தால், இச்செயலை குறித்து பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை” என்றார்.
 
மகளின்சமூக சேவைக்கு உறுதுணை
 
“எனது 12 வயது மகளுக்கு இவ்வளவு பெரிய சமூக சேவை செய்யும் எண்ணம் வந்துள்ளது என்பதை பார்க்;கும்போது மிகவும் வியப்பாகவுள்ளது. இந்த வயதில் உள்ள மற்ற பிள்ளைகள் விளையாட கார்,பொம்மை, வளையல் போன்றவற்றை அப்பாவிடம் கேட்கும் இந்த காலத்தில் என் மகள் குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற சமூக சேவை நோக்கில் கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களிலும் என் மகள் செய்யும் சமூகப் பணிக்கு நானும் என் கனவரும் உறுதுணையாக இருப்போம்” என நதியாவின் தாய் அருள்மொழி கூறினார்.
 
மகள்பாசத்தின் முன்னால் குளத்திலுள்ள பாம்பு, விஷ பூச்சிகள் பொருட்டல்ல
 
குளத்தை சுத்தம் செய்தது பற்றி நதியாவின் தந்தை சிவக்குமார் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
 
“என் மகள் என்னுடன் 8 மாதங்கள் பேசவில்லை. அவள் என்னிடம் பேச வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென கேட்டேன். அவரது பள்ளிக்கு பின்னால் உள்ள குளத்தை சுத்தம் செய்து கொடுத்தால் உங்களுடன் பேசுகிறேன் என கூறினார். மறுநாள் காலையில் குளத்தை சுத்தம் செய்ய இறங்கினேன்”
 
“அப்போதுதான் குளத்தில் பாம்பு, விஷ பூச்சிகள் இருப்பது தெரிந்தது. நான் எதையும் கண்டு கொள்ளவில்லை. என் மகளின் முகம் மட்டுமே தெரிந்தது. நாள் முழுவதும் உணவே உட்கொள்ளாமல் என்னால் முடிந்த அளவு குளத்தை சுத்தம் செய்தேன். அதில் இருந்து என் மகள் என்னுடன் பேச ஆரம்பித்து விட்டாள்” என்றார்.
 
சுத்தமான குளம்
 
இந்த சம்பவம் பற்றி பேசிய நதியா, “அம்மாவிடம் தினமும் அப்பா சண்டை போடுவதால் கடந்த 8 மாதங்களாக அவரிடம் நான் பேசவில்லை ஆனால் என்னுடன் பேச அப்பா பல முயன்றார். ஆனால் எனக்கு பேச விருப்பம் இல்லை என கூறிவிட்டேன். ஒரு நாள் என்ன செய்தால் என்னோடு பேசுவாய் என்று அப்பா என்னிடம் கேட்டார்”
 
“என் பள்ளிக்கு பின்னால் உள்ள குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. அதனால், எனக்கும் என்னுடம் படிக்கும் நண்பர்களுக்கும் உடல் நிலை பாதிக்கபடுகிறது. அந்த குளத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என கூறினேன். என் அப்பா அடுத்த நாளே குளத்தில் இறங்கி சுத்தம் செய்தார் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததையடுத்தது அப்பாவிடம் மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டேன். எங்களால் முடிந்த வரை குளத்தை சுத்தம் செய்து விட்டோம். அனைவரும் இதே போல் குளங்களை சுத்தம் செய்ய வேண்டும்” என கேட்டு கொண்டார்.
 
குளங்களில் துர்நாற்றம் ஏன்?
 
குளங்கள் துர்நாற்றம் வீசுவது ஏன் என்று நீர் நிலைகள் நிலை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவக்குமாரிடம் பேசினோம்.
 
கஜ புயலின்போது ஏற்பட்ட சூறைகாற்றின் வேகம் காரணமாக வேதாரண்யம்,திருத்துறைபூண்டி, பகுதிகளில் குளங்களிலுள்ள மீன்களும், பண்ணைகளில் வளர்த்து வந்த மீன்களும் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கின.
 
ஆகாய தாமரை செடிகளை பொறுத்தமாட்டிலும் நல்ல தண்ணீரில் வாழ கூடியவை. ஆகாய தாமரை தாவரம் வறட்சியின் போதும் வாழ கூடியது என்பதால் எளிதில் பட்டுவிடாது.
 
ஆனால் நல்ல தண்ணீர் (Fresh water) பெருகியிருக்கும் குளங்களில் இந்த புயல் காரணமாக தண்ணீரின் உப்பு சத்து (Saltation) அதிகரித்து இருக்கலாம்.
 
அதே போல் புயலுக்குபின் பேக்டீரியா போன்ற நோய் தொற்று அல்லது புயலின்போது குளங்களின் அடியில் உள்ள சுற்றுசூழல் மாற்றம் ஏற்பட்டு தேவையற்ற வேதி பொருள்கள் நீரின் மேற்புறத்தை நோக்கி வந்து இருக்லாம்.
 
அவை அனைத்தும் தற்போது மழை பெய்வதால் வருகின்ற நீருடன் கலந்து வேதியியல் மாற்றம் ஏற்படுவதன் மூலம், ஆகாய தாமரை செடிகளை எளிதில் இறந்து மிதக்க வாய்ப்புள்ளது. ஆகாய தாமரை செடி இறந்து குளத்தை மிதந்தால் அப்பகுதியை சுற்றி சுமார் 500 மீட்டருக்கு அழுகிய துர்நாற்றம் வீசும் என்று விளக்கினார் சிவக்குமார்

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாத்தான் தூண்டுதல் ...சிறுமியை கற்பழிக்க முயன்ற பாதிரியார் விளக்கம்!