இங்கிலாந்தின் கிழக்கு பிரிஸ்டோலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்யும் இடத்தில் காந்தியின் மூக்கு கண்ணாடி, £260,000 (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு கோடியே ஐம்பத்து ஐந்து லட்சம்) அளவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
ஓர் வார இறுதியில் தங்க முலாம் பூசிய பிரேம்களை கொண்ட அந்த மூக்கு கண்ணாடியை ஒரு உறையில் வைத்து கடிதப்பெட்டியில் அதை கடைசியாக வைத்திருந்தவர் விட்டுச் சென்றார். 1910-1920 ஆண்டுகளில் காந்தி தென் ஆப்ரிக்காவில் வசித்தபோது அவரை சந்தித்த தனது மாமாவிடம் அந்த மூக்கு கண்ணாடியை காந்தி கொடுத்ததாகவும், அவர் வழியாக அந்த மூக்கு கண்ணாடி தனக்கு கிடைத்ததாகவும் வயோதிகரான அந்த கண்ணாடியை வழங்கிய நபர் கூறுகிறார்.
அந்த நபரின் மாமா, காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்காக அதே நாட்டில் வேலை பார்த்துள்ளார். தனது உடைமைகளை நெருங்கியவர்களிடம் விட்டுச் செல்லும் வழக்கத்தை கொண்டிருந்த காந்தி, அதுபோலவே, தமது மூக்கு கண்ணாடியை தங்களுடைய மாமாவுக்கு வழங்கிச் சென்றிருக்க வேண்டும் என்று அதை கடைசியாக வைத்திருந்த குடும்பத்தினர் நம்புகிறார்கள்.
காந்தி தென் ஆப்பிரிக்காவில் வசித்தபோதுதான் முதன் முறையாக மூக்கு கண்ணாடிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார் என்றும், காந்தியின் கண்ணாடிகளை தங்களிடம் ஒப்படைத்த உரிமையாளர் அளிக்கும் தகவல்கள் அனைத்தும் சரியானவை என்றும் கிழக்கு பிரிஸ்டோலில் ஏலம் விடும் நிறுவன உரிமையாளர் ஆண்ட்ரூ ஸ்டோவ் கூறுகிறார்.
அந்த மூக்கு கண்ணாடியை வாங்குவதற்காக, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இருப்பவர்கள் ஏலம் கேட்ட நிலையில், ஏலம் கேட்கப்பட்ட தொகையின் முடிவு உண்மையிலேயே தனித்துவமாக அமைந்திருக்கிறது என்று ஆண்ட்ரூ ஸ்டோவ் கூறுகிறார்.
இதை கொடுக்கும்போது, 50 ஆண்டுகளாக டிராயருக்குள்ளேயே இருந்த மூக்கு கண்ணாடி ஏல விற்பனைக்கு பயன் தராவிட்டால், தூக்கிப்போடுங்கள் என்று முன்பு இதை வழங்கியவர் கூறியிருந்தார். ஆனால், இப்போது இவ்வளவு பெரிய தொகை, அவரது வாழ்வையே இந்த வயதில் மாற்றப்போகிறது. பிரிஸ்டோலின் மாங்கோட்ஸ்ஃபீல்டைச் சேர்ந்த அவர், இந்த ஏலத்தொகையை அவர் தனது மகளுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறார் என்று ஆண்ட்ரூ ஸ்டோவ் தெரிவித்தார்.
மதிப்பு மிகுந்த காந்தியின் மூக்கு கண்ணாடியை, புதிய வீட்டுக்கு செல்வதற்காக ஒப்படைப்பதை ஒரு கெளரவமாக கருதுகிறேன் என்று கூறிய அவர், இது எங்களுடைய ஏல வரலாற்றில் ஏற்பட்ட திருப்பத்தின் அடையாளம் மட்டுமின்றி, சர்வதேச வரலாற்று முக்கியத்துவத்தின் தேடலாகவும் கருதப்படுகிறது என்று தெரிவித்தார். காந்தியின் மூக்கு கண்ணாடி எல்லா எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, ஏல நிறுவனத்தின் முந்தைய ஏலங்களையும் முறியடித்து விட்டது என்றும் ஆண்ட்ரூ ஸ்டோவ் பெருமிதப்பட்டார்.