Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு; 4 வீடுகள் தரைமட்டம்

சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு; 4 வீடுகள் தரைமட்டம்
, செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:34 IST)
சேலத்தில் வீட்டு கேஸ் சிலிண்டர் வெடித்ததில் நான்கு வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு அலுவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

 
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியில் ஏராளமான தனியார் குடியிருப்புகள் உள்ளன. இதில் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜன் என்பவரின் கட்டிடத்தில் கணேசன், பத்மநாபன், கோபி மற்றும் முருகன் ஆகிய நான்கு குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் கோபி வீட்டில் அவரது மனைவி ராஜலட்சுமி இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பத்த வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது. இதனால் அருகில் இருந்த வீடும், மேல்தளத்தில் இருந்த இரண்டு வீடும் என நான்கு வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. 
 
மேலும் வெடித்து சிதறியதில் சாலையில் இருந்த பால்காரர் மற்றும் அருகில் கோலம் போட்டு கொண்டிருந்த தனலட்சுமி என்பவரின் மீது கற்கள் விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
இதில் சுதர்சன், கோபால், சுப்பிரமணி, தனலட்சுமி, நாக சுதா, இந்திராணி, மோகன்ராஜ், கோபி, லோகேஷ், ராஜலட்சுமி , பூஜாஸ்ரீ, வெங்கடராஜன் உள்ளிட்ட 12 பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதில் 80 வயதான ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மீட்பு போராட்டத்திற்கு பிறகு முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜாஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
 
மேலும் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் அவரது மனைவி தேவி மற்றும் பூஜாஸ்ரீயின் அண்ணன் கார்த்திக் ராம் ஆகிய மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 6 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்புத்துறை சிறப்பு அலுவலர் பத்மநாபன் அவரது மனைவி தேவி மற்றும் கார்த்திக் ராம், எல்லம்மாள் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர் .
 
மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு இருப்பதாகவும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பொருட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் முடிவிலேயே விபத்துக்கான முழு விவரம் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சென்னையில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்