இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்
இந்து தமிழ் திசை - தங்கம் விலை உயர்வு ஏன்?
ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், சுப நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டாலும் ஆன்-லைன் வர்த்தகம் தொடர்வதால் தங்கத்தின் விலை உயர்வும் தொடர்கிறது என்கிறது இந்து தமிழ் திசை.
அதேநேரம், கடந்த ஒரு மாதமாக நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால், அக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆபரண நகைகளின் மதிப்பு தற்போது கிராம் ஒன்றுக்கு ரூ.1,169 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து பொருளாதார பேராசிரியரான புதுச்சேரி முன்னாள் எம்.பி ராமதாஸிடம் கேட்டபோது, "சர்வதேச அளவில் கொரோனா பரவலால் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் வரவு குறைந்து, விலை உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவும் ஒரு காரணம். அதில் முதலீடு செய்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தற்போது ஆர்வம் காட்டுவதாலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது'' என்றார்