Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஹாரி பாட்டர் படத்துக்கு 20 வயது: நடிகர்கள் என்ன செய்கின்றனர்?

ஹாரி பாட்டர் படத்துக்கு 20 வயது: நடிகர்கள் என்ன செய்கின்றனர்?
, செவ்வாய், 23 நவம்பர் 2021 (00:17 IST)
உங்கள் மந்திரத் தொப்பிகளை அணிந்துகொள்ளுங்கள், ஹாரி பாட்டர் திரைப்படத் தொடரின் நடிகர்கள், அத்தொடரின் முதல் திரைப்படமான 'ஹாரி பாட்டரும் ரசவாதக் கல்லும்' வெளிவந்து 20 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாட மீண்டும் திரையில் இணைய உள்ளனர்.
 
'ஹாக்வார்ட்ஸுக்குத் திரும்புதல்' என்று தலைப்பிடப் பட்டிருக்கும் HBO Max-இன் சிறப்பு நிகழ்ச்சி ஜனவரி 1 வெளியாகும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இத்திரைப்படத் தொடரின் நட்சத்திரங்களான டேனியல் ரேட்க்ளிஃப், ரூபர்ட் க்ரின்ட் மற்றும் எம்மா வாட்சன், மேலும் அவர்களது சக நடிகர்கள், முதல் திரைப்படத்தின் இயக்குநரான க்றிஸ் கொலம்பசுடன் இணைந்து அத்தொடரின் எட்டு திரைப்படங்கள் குறித்து ஆழமாக விவாதிக்க உள்ளனர்.
 
குழந்தை நட்சத்திரங்களாக, இம்மூவரும், ஜே.கே ரௌலிங்கின் மிக வெற்றிகரமான சிறார் நூல்களின் வெள்ளித்திரை தழுவலில், ஹாரி பாட்டர் (ரேட்க்ளிஃப்), ரான் வீஸ்லி, மற்றும் ஹெர்மயனி க்ரேஞ்சர் ஆகிய மந்திரவாத கதாபாத்திரங்களில் தோன்றியதால், அவர்களின் வாழ்க்கையே மாறியது. எழுத்தாளர் ரௌலிங்கின் பெயர் இந்த சிறப்பு நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
 
நவம்பர் 16 2001இல் முதல் படம் வெளியாகி, சரியாக 20 வருடங்கள் கழித்து இந்த அறிவிப்பு வெளிவந்தது. இத்தொடரின் கடைசி படமான 'ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹாலோஸ்' 2011ம் ஆண்டு திரைக்கு வந்தது.
 
இருபது ஆண்டுகள் கழித்து ஹாக்வார்ட்சிலிருந்து ஏற்புக் கடிதத்திற்காக நீங்கள் காத்திருக்கையில், குழந்தை நட்சத்திரங்களாகத் திரையில் தோன்றியதிலிருந்து, முக்கிய நடிகர்களும், வேறு சில நடிகர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதோ.
 
டேனியல் ரேட்க்ளிஃப் - ஹாரி பாட்டர்
 
முதன்முதலில் 12 வயதில் ஹாரி பாட்டரின் மூக்குக் கண்ணாடியணிந்த முகமாக வெள்ளித்திரையில் தோன்றிய ரேட்க்ளிஃப், ரௌலிங்கின் பிரதான கதாபாத்திரத்தின் முகஜாடையோடு கச்சிதமாகப் பொருந்திப் போனார்.
 
இவர் வெகு துரிதமாக 'பாய் ஹூ லிவ்ட்' (உயிவாழ்ந்த சிறுவன்) என்ற கதாபாத்திரமாகவே மாறிப்போனார், மேலும் மிகுந்த லாபகரமான திரைப்படத் தொடரின் மைய்யக் கதாபாத்திரமானதால், 30 வயதுக்குக் குறைவான நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர்களின் பட்டியலிலும் இடம்பெற்றார்.
 
தன்னுடைய நிலையையே கேலி செய்துகொள்வதைப் போல, ரேட்க்ளிஃப் 2006இல் ரிக்கி ஜெர்வைசின் 'எக்ஸ்ட்ராஸ்' எனும் தொலைக்காட்சித் தொடரின் ஒரு அத்தியாயத்தில் நளினமற்ற ஒரு பதின்வயது சூப்பர்ஸ்டாராகத் தோன்றினார். பின்னர் மேடை நாடகங்களிலும் திரையிலும் பல துணிச்சலான பாத்திரங்களில் தோன்றினார்.
 
இவற்றில் 2007ல் வெஸ்ட் எண்ட் தயாரித்து பீட்டர் ஷாஃபர் இயக்கிய 'ஈக்வஸ்' திரைப்படத்தில் ஆலன் ஸ்ட்ரேங் என்ற பாத்திரமும் அடங்கும், இப்பாத்திரம் அவர் நிர்வாணமாக நடிக்கவும், ஒரு குதிரையோடு உடலுறவு கொள்வதுபோல பாவிக்கவும் கோரியது.
 
"ஒரு இளம் நடிகருக்கு இது நம்பமுடியாத பாத்திரம். அவர் மிக அபாயமான ஒரு தேர்வை செய்திருக்கிறார்," என்றார் சக ப்ரிட்டிஷ் நடிகரான ரிச்சர்ட் ஈ க்ரான்ட், அப்போது 17 வயதான இந்த நடிகரைப் பற்றி.
 
2011 இல், இறுதி பாட்டர் திரைப்படத்திற்குப் பிறகு, ரேட்க்ளிஃப் 'தி உமன் இன் தி ப்ளாக்', மற்றும் 'கில் யுவர் டார்லிங்ஸ்' ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு 2015ல் ஷேன் கேருத்தின் 'தி மாடர்ன் ஓஷன்' படத்தில் ஆன் ஹாத்தவே, கீனூ ரீவ்ஸ் உடனான நடிகர் பட்டாளத்தில் இணைந்தார்.
 
அதிலிருந்து, 32 வயதாகும் இந்த நடிகர், முன்னணி நடிகர்கள் பட்டியலின் வெளிச்சத்திலிருந்து விலகி, த்ரில்லரான 'கன்ஸ் அகிம்போ', மற்றும் 'விக்டர் ஃப்ரான்கென்ஸ்டைன்' போன்ற படங்களில் தோன்றினார்.
 
எம்மா வாட்சன் - ஹெர்மயனி க்ரேஞ்சர்
 
மூவரில் மிக இளையவரான எம்மா வாட்சன், ஹெர்மயனி க்ரேஞ்சராக முதலில் திரையில் தோன்றிய போது அவருக்கு 11 வயதுதான்.
 
ஹாரி பாட்டரைக் கடந்த அவரது திரைப் பயணம் பலதரப்பட்டது, விமர்சன ரீதியாகப் பாராட்டப் பெற்ற 'பெர்க்ஸ் ஆஃப் பீயிங் எ வால்ஃப்ளவஃப்ர்', 'லிட்டில் வுமென்' நாவலின் 2019 திரைத்தழுவல், மற்றும் 2017ல் 'ப்யூட்டி அன்ட் தி பீஸ்ட்'டின் லைவ்-ஆக்‌ஷன் ரீமேக் போன்றவற்றில் அவர் தோன்றினார்.
 
இருந்தும் நடிப்பைத் தாண்டியும் இவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
 
தன்னை "சரியான ஒரு நெர்ட்" என்று வர்ணித்துக்கொள்ளும் இவர், 2009ல் அமெரிக்காவின் மிகப் பிரதானமான ப்ரௌன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்கப் பதிவு செய்து கொண்டார்.
 
இன்டெர்வ்யூ இதழிடம், குழந்தையாகத் தான் தொலைத்த பள்ளிக்கூட வாழ்வை ஈடு செய்துகொள்ளும் பொருட்டும் இந்த முடிவை எடுத்ததாக வாட்சன் கூறினார்.
 
உலகளவு பிரபலமான நட்சத்திரமாகத் தனது மாணவ வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது, "முதல் நாள் நான் கேன்டீனுக்குள் நுழைந்த போது, அனைவரும் முற்றிலும் அமைதியாகி என்னைத் திரும்பிப் பார்த்தனர்… 'பரவாயில்லை, உன்னால் இது முடியும்' என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ள வேண்டியிருந்தது." என்றார்.
 
டெத்லி ஹாலோஸ் படத்தில் நடிக்க ஒரு வருடம் விடுப்பு எடுத்துக் கொண்ட பிறகு, இவர் 2014ல் பட்டம் பெற்றார்.
 
தீவிரமான செயற்பாட்டாளரான இவர், ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதுவராக இருந்தது, 2015ல் டைம் இதழின் 100 மிகுந்த செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலில் இவரை இடம் பெறச் செய்தது.
 
2019ல் ப்ரிட்டிஷ் வோக் இதழுக்கு அளித்த நேர்காணலில், 30 வயதாகியும் திருமணமாகாத பெண்ணாக வாழ்வதை ஆதரித்தும், பெண்கள் மீது சமூகம் செய்யும் "மறைமுகக் குறிப்புகளின் ஊடுருவலுக்கு" எதிராகவும் பேசினார்.
 
சென்ற ஆண்டு, தான் நடிப்பதில்ருந்து விலகப்போவதாக வந்த செய்திகளை மறுத்தார் எம்மா வாட்சன்.
 
ரூபர்ட் க்ரின்ட் - ரான் வீஸ்லி
 
விரும்பத்தக்க முரடனான ரானின் பத்திரம், க்ரின்ட்டை பலரையும் விரும்ப செய்தது, ஆனால் பாட்டர் திரைப்படத் தொடர் நிறைவடைந்ததும் இவர் படங்களிலிருந்து பெரிதும் விலகியே இருந்திருக்கிறார்.
 
2011ல், எட் ஷீரானின் இசைக் காணொளியான 'லெகோ ஹவுசில்' தோன்றியது, இவருக்குப் பொதுவாழ்வுக்குள் எதிர்பாராத மறு நுழைவாக அமைந்தது, இதனைத் தொடர்ந்து 'இன்டூ தி வைட்', மற்றும் 2015ல் 'மூன்வாக்கர்ஸ்' போன்ற திரப்படங்களின் பாத்திரங்களிலும் தோன்றினார்.
 
க்ரின்ட் மேடை நாடகங்களிலும் தோன்றினார், 2014ல் ப்ராட்வே தயாரிப்பான 'இட்ஸ் ஒன்லி எ ப்ளே' நாடகத்தில், மேத்யூ ப்ரோடெரிக், நேதன் லேன் ஆகியாருடன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தைப் பெற்றார்.
 
ஆனால், ஸ்னாட்ச், ABC மர்டர்ஸ் மற்றும் செர்வன்ட் போன்ற திரைத்தொடர்களில் அவ்வப்போதைய சிறிய பாத்திரங்களில் தோன்றியதைத் தவிர, இவர் தனது சேமிப்புகளைப் பரந்துபட்ட சொத்துகளில் முதலீடு செய்வதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார், HELLO! இதழின் படி இவை $24 மில்லியன் மதிக்கத்தக்கவை.
 
சென்ற ஆண்டு, யாரும் எதிர்பாராத போது இவர், தான் தந்தையான செய்தியை வெளியிட்டார் - தனது மகளோடு இருக்கும் புகைப்படம் தான் இவரது முதல் இன்ஸ்டாகிராம் பதிவு. "க்ரின்ட் ஆன் தி க்ராம்' என்று தன்னை அழைத்துக்கொண்டு, இந்த சமூக வலைதளத்துக்கு "வெறும் 10 வருடங்கள் தான் தாமதமாக" வந்ததாகக் கேலியாகச் சொல்லிக்கொண்டார்.
 
டாம் ஃபெல்டன் - ட்ரேகோ மால்ஃபாய்
 
கொடுமைக்கார ஹாக்வார்ட்ஸ் வாசியான தனது பாத்திரத்தை நிறைவு செய்துகொண்ட பின்னர், ஃபெல்டன், நேரடியாக மற்றொரு பெரிய பட்ஜெட் தயாரிப்பான 2011ன் 'ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்' படத்தில், மற்றொரு வில்லன் கதாபாத்திரமான டோட்ஜ் லேண்டனாக நடிக்கச் சென்றார்.
 
அப்போதிருந்து, இவர், தொலைக்காட்சித் தொடர்களான 'மர்டர் இன் தி ஃபர்ஸ்ட்', 'தி ஃப்ளாஷ்', ஆகியவற்றில் பாத்திரங்கள் ஏற்று நடித்தார், மேலும் யூட்யூப் ஒரிஜினல் தொடரான 'ஆரிஜின்'இல் லொகனாகத் தோன்றினார்.
 
ஃபெல்டன் மற்றொரு கலைசார் வேட்கையிலும் தனது நேரத்தைச் செலவிடுகிறார் ஆம் இசை துறையில். 2018ல் ஜேம்ஸ் ஆர்தரின் 'எம்ப்டி ஸ்பேஸ்' காணொளியில் தோன்றினார், மேலும் 2008லிருந்து தனது சொந்த இசைப் படைப்புகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார், இந்த ஆண்டின் YoOHoO EP உட்பட.
 
34 வயதாகும் இவர், தனது ஹாரி பாட்டர் பின்னணியை தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கிறார், சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுக்கு பதிலளிக்கிறார், தனது ஸ்லிதரின் விசுவாசத்தை உதறிவிட்டு, போன மாதம் ஹாலோவீனுக்கு ஹாரி பாட்டராக வேடமணிந்தார்.
 
ஹாரி பாட்டர் ரீயூனியன் அறிவிப்பு வந்ததும், "வீடு திரும்புதல் இப்படித்தான் இருக்குமா?" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
 
மேத்யூ லூயில் - நெவில் லாங்பாட்டம்
 
நளினமற்ற, கவனக்குறைவான கதாநாயகனான நெவில் லாங்க்பாட்டம் பாத்திரத்தில் தோன்றியது முதல் லூயில் பல தொலைக்காட்சி, திரைப்பட மற்றும் மேடை நாடக பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.
 
2016ன் காதல் திரைப்படமான 'மீ பிஃபோர் யூ'வில் ஒரு பாத்திரத்தை பெறுவதற்கு முன்பு, BBC நிகழ்ச்சிகளான 'ஹேப்பி வேலி', மற்றும் 'டெத் இன் பாரடைஸ்' ஆகியவற்றில் இவர் தோன்றினர், இப்போது சேனல் 5இன் 'ஆல் க்ரீச்சர்ஸ் க்ரேட் அன்ட் ஸ்மால்' தொடரில் தோன்றி வருகிறார்.
 
பாட்டர் திரைப்படத் தொடர் இவரது வாழ்வில் ஒரு நேர்மறையான தாக்கத்தையே செலுத்தி வந்திருக்கிறது. 2018ல், தனது நீண்டநாள் காதலியான ஏஞ்செலா ஜோன்ஸை மணமுடித்தார், ஜோன்ஸ் வேலை செய்துவந்த ஆர்லேண்டோவிலிருக்கும் யூனிவர்ஸல் ஸ்டூடியோஸில் ஒரு ஹாரி பாட்டர் விழாவில் இவர்கள் முதலில் சந்தித்தனர்.
 
நடிப்பைத் தவிர, 32 வயதாகும் லூயிஸ், இப்போது லீட்ஸ் யுனைட்டட் பற்றிய ஒரு பாட்காஸ்ட்டை அந்தக் அணியின் முன்னாள் வீரரான ஜெர்மைன் பெக்ஃபோர்டுடன் இணைந்து வழங்கி வருகிறார்.
 
ரீயூனியன் பற்றிய செய்திக்கு எதிர்வினையாற்றுகையில் "இந்த புத்தாண்டு தினத்தன்று நாங்கள் குழுவை மீண்டும் ஒன்று சேர்க்கிறோம்," என்று பதிவிட்டிருந்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய காற்றழுத்தம்- அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்