குரோம்பேட்டையில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவரின் வீட்டுக் கதவு அடைக்கப் பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குரோம்பேட்டை, புருஷோத்தமன் நகரில் பாதல் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இதில் இந்தியன் வங்கியில் பணிபுரியும் ஹேம்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 14 நாட்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று முன் தினம் வீடு திரும்பினார்.
அன்று மாலையே பல்லாவரம் நகராட்சி ஆணையர் மதிவாணன் உத்தரவின் படி, ஹேம்குமாரின் வீட்டு வாசலில் தகரங்களைப் பொருத்தி முழுமையாக அடைத்துள்ளனர். பல்லாவரம் நகராட்சியின் இத்தகைய அத்துமீறலால் அந்த வீட்டுக்குள் வெளி தொடர்பின்றி 6 பேர் தவிப்பதாக புகார் எழுந்தது.
"ஆரம்பத்தில் எங்கள் வீட்டுக்கோ, அடுக்குமாடி குடியிருப்புக்கோ தகரத் தடுப்பு வைக்காத நகராட்சி அதிகாரிகள், என் கணவர் கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வுடன் வீட்டு வாசலை முழுமையாக மூடிவிட்டனர். கதவை முழுமையாக மூடியதால் அவசர தேவைக்கு எங்களால் வெளியே செல்ல முடியவில்லை," என்கிறார் ஹேம்குமாரின் மனைவி.
மேலும் அவர், "எங்கள் வீடு முதல் தளத்தில் உள்ளதால் ஜன்னல் வழியாகக் கூட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. நாங்கள் சொல்வது எதையும் காதில் வாங்காமல் சென்ற நகராட்சி அதிகாரிகள், அதன் பின்னர் திடீரென அவர்களே வந்து தகரத்தை முழுமையாக அகற்றிவிட்டனர்," என்றார்.
இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இதுபோன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பல்லாவரம் நகராட்சி ஆணையரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த வீட்டில் இருந்த தகரங்கள் உடனடியாக அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ''பாதிக்கப்பட்டோரையும், பாதிக்கப்படாதோரையும் பாதுகாக்கவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் செயல்படுத்தப் படுகின்றன. நீங்கள் குறிப்பிட்ட அந்த வீட்டு வாசலை நாங்கள் முழுமையாக அடைக்கவில்லை. தகரங்களால் முழுமையாக அடைக் கப்பட்டதாக சமூக வலைதளங் களில் திரித்து வெளியிடப்பட்டன'' என்றனர்.