Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கொரோனா ஊரடங்குக்கு பின் உங்கள் வேலை எப்படி மாறும்?

கொரோனா ஊரடங்குக்கு பின் உங்கள் வேலை எப்படி மாறும்?
, சனி, 4 ஜூலை 2020 (22:41 IST)
2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதிலிருந்து, பூர்வி ஷா தன் வீட்டிலிருந்தபடியே அலுவலக பணியை மேற்கொள்கிறார். இரண்டு குழந்தைகளின் தாயான பூர்வி ஷா பொது தகவல் தொடர்பு நிபுணராக பணியாற்றி வருகிறார். தனது அலுவலக பணியையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமமாகக் கையாள ஷா தொடர்ந்து முயன்று வருகிறார்.
 
''வீட்டிலிருந்து அலுவலக பணி மேற்கொள்வது கடினம் தான்; ஆனால் தற்போது பழகிக்கொண்டேன்'' என்கிறார் அவர்.
 
ஷா தனது வீட்டிலேயே அலுவலகத்திற்கு என ஒரு தனி இடம் ஒதுக்கி இருக்கிறார். மேஜை, அச்சு இயந்திரம், இணையச் சேவை போன்ற வசதிகளுடன் தனது அலுவலக பணியை மேற்கொண்டு வருகிறார்.
கொரோனாவிற்கு பிறகு இயல்பு நிலை திரும்பியவுடன் வேறு ஒரு அலுவலக இடம் அமைத்து அங்கிருந்து தனது பணியை தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாக ஷா கூறுகிறார்.
 
''வீட்டில் இருந்து மிக தொலை தூரத்தில் அலுவலகம் அமைந்திருப்பதால், அலுவலகம் செல்ல நான் விரும்பவில்லை. வீட்டிலிருந்து வேலை பார்க்கவும் விருப்பமில்லை. பயனுள்ள வகையில் எனது அலுவலக இடத்தை மாற்றிக்கொள்ளப் போகிறேன்'' என்கிறார்
 
வீட்டில் இருந்து அலுவலக பணி
 
பெரிய இடத்தை கொண்ட அலுவலகங்கள் சிறிய இடங்களாக மாற்றப்படுகின்றன. பியூன் போன்ற உதவியாளர்கள் துணையின்றி தங்கள் பணிகளை தாங்களே மேற்கொள்ளப் பலர் கற்றுக்கொள்கின்றனர்.
 
''இது பலரின் தான் என்ற அகங்காரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்கிறார் பிராண்ட் ஆலோசகர் ஹரிஷ் பிஜூர்.
ஊரடங்கு உத்தரவு பலரை தங்கள் வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ளது.
 
''தற்போது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒரு அலைபேசியும் அலுவலக பணிகளுக்காக ஒரு அலைபேசியையும் மக்கள் பயன்படுத்துகின்றனர். அலுவலகத்திற்கு என தனி இடம் ஒதுக்கப் பெரிய வீடு தேவைப்படும். அச்சு இயந்திரங்கள் மற்றும் அலுவலக இயந்திரங்களுக்கான தேவை அதிகரிக்கும், புதிய இயல்பு என்ற ஒரு விஷயம் உருவாகும்'' என்கிறார் பிஜூர்.
 
''இந்திய வீடுகளின் அமைப்பு மிக சிறியதாக இருக்கும். எனவே அலுவலகத்திற்கு என தனி இடம் ஒதுக்க முடியாது என்று பிரபல கோத்ரேஜ் இன்டிரியோ நிறுவனத்தைச் சேர்ந்த சமீர் ஜோஷி கூறுகிறார்
 
''நாற்காலிகள் குறித்துத் தெரிந்துகொள்ளப் புதிதாக 140% அதிகமானோர் எங்கள் வலைத்தள பக்கத்தை நாடியுள்ளனர். இரண்டாவதாக அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மேஜைகள் குறித்து அதிகம் தேடியுள்ளனர்'' என்கிறார் அவர்.
 
எளிய முறையில் வடிவமைக்கப்பட்ட நார்காலிகள், பயன்படுத்தி முடித்தவுடன் மடக்கி வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேஜைகள், நாற்காலிகள், கணினி மேஜைகள் உள்ளிட்டவற்றை கோத்ரேஜ் நிறுவனம் தற்போது மீண்டும் விளம்பரம் செய்து வருகிறது. இந்த வகை நாற்காலிகளும் மேஜைகளும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்றும் அந்நிறுவனம் நம்புகிறது.
 
வீட்டில் இருந்து அலுவலக பணி மேற்கொள்வது ஊழியர்களுக்கு மட்டுமின்றி முதலாளிகளுக்கும் சவாலாகவே அமைந்துள்ளது என நிபுணர்கள் நம்புகின்றனர்.
 
''மிகவும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டிய அலுவலக பணியில், அலுவலக பணியாளர் அல்லாத தனிநபரின் தலையீடு ஏற்படுமோ என்ற அச்சம் முதலாளிகளுக்கு எழுந்துள்ளது. பாதுகாப்பாக ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய அலுவலக தரவுகள் ஊழியர்களுக்குத் தெரியாமல் வெளியில் கசிந்துவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. மேலும் நீங்கள் வேறொருவருடைய தரவுகளைக் கையாளும்போது பாதுகாப்பாகச் செயல்பட வேண்டும்'' என பாதுகாப்பு சேவை நிறுவனமான செக்கியூரிடெக் நிறுவனத்தின் துணை நிறுவனர் பன்கிட் தேசாய் கூறுகிறார்.
 
ஃபேஸ்புக் மற்றும் டி.சி.எஸ் போன்ற பெருநிறுவனங்கள் 30% முதல் 50% ஊழியர்களை மட்டுமே தங்களின் அலுவலக பணியில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சிகளும் துவங்கிவிட்டன. நிறுவனங்கள் தங்களின் சரியான உள்கட்டமைப்பை உருவாக்கும் வரை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு இவ்வாறான புதிய நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.
 
''பல ஊழியர்கள் தங்களின் அலுவலக பணியை மேற்கொள்ள வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்படுவார்கள், அதற்கு ஏற்ப இழப்பீடுகளும் வழங்கப்படும். இதுவே வரும் காலங்களில் நாம் காணவிருக்கும் மிக பெரிய மாற்றம்'' என யூனிகான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான பாஸ்கர் மஜூம்தார் கூறுகிறார்.
 
பணியிடத்தில் ஏற்படவிற்கும் அடிப்படை மாற்றங்கள்
 
வீட்டிலிருந்து அலுவலக பணி மேற்கொள்வதே புதிய இயல்பாக மாறியுள்ளதால், நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பணியிடத்தில் சில அடிப்படை மாற்றங்களை மேற்கொள்வது குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். குறைந்தபட்சம் குறுகிய தூரத்தில் இரண்டு ஊழியர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாக பார்த்துக்கொள்ள முடியாத அளவு கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிடுகின்றனர்
DESHPANDE
ஊழியர்களை நெருக்கமாக பழக வைக்க முயற்சிக்கும் கோலாப்ரேட்டிவ் சோன்(Collaborative Zone) என்ற சிந்தனையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களே தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
 
இதற்காக ஊழியர்களுக்கு மத்தியில் நெருக்கும் இல்லாமல் போகும் என்ற நிலை ஏற்படாது; மாறாக டிஜிட்டல் சேவைகள் மூலம் ஊழியர்களுக்கு மத்தியில் நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 
விவசாயம்
 
இந்திய விவசாயத்துறை 50% தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17% விவசாய உணவு உற்பத்தியாக உள்ளது. தற்போது பல துறைகளில் மாற்றம் நிகழ்வது போல விவசாயத்துறையிலும் மாற்றம் ஏற்படப்போகிறது. மண்ணின் தரத்தைப் பரிசோதிக்க விவசாயிகளும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
 
''விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கலாம்; ஆனால் உலகம் முழுவதும் பரவும் இந்த நோய்த் தொற்று காரணமாக ஆறிலிருந்து எட்டு மாதங்களுக்குள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விவசாயிகள் முயற்சிக்கின்றனர்'' என்று உண்ணதி என்ற விவசாய தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் அமித் சின்ஹா கூறுகிறார்.
 
விவசாயத்திற்கும் தொழில்நுட்பத்திற்குமான இடைவெளியை நிறுவனங்கள் வர்த்தகமாக மாற்றுகின்றனர். எடுத்துக்காட்டாக, விவசாயி ஒருவர் அறுவடை செய்வதற்கு ஒரு டிராக்டரை வாடகைக்கு எடுத்தால், அதைச் சரியாகப் பயன்படுத்தக் காணொளி அழைப்புகள் மூலம் தொழில்நுட்ப நிபுணர்களிடம் சில அறிவுரைகளை விவசாயிகள் கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர். மேலும் மழை வருவதற்கான அறிகுறியைக் கணிக்கவும் உரத்தின் தரத்தைக் கணிக்கவும் கூட சில இயந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் வாங்கி பயன்பெறுகின்றனர்
 
ஒரே பகுதியில் வசிக்கும் விவசாயிகள் ஒரே ஒரு டிராக்டரை வாடகைக்கு வாங்கி தேவைக்கு ஏற்ப மாறி மாறி பயன்படுத்தலாம். இதனிடையே பயிர்கள் நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குகின்றனர். சந்தைகள் மூடப்பட்டிருந்தால், தங்கள் உற்பத்தியை நேரடியாக வியாபாரியிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்றும் நிபுணர்கள் விவசாயிகளுக்குக் கற்றுக்கொடுக்கின்றனர்.
 
மனிதர்களை நம்பி விவசாயம் மேற்கொள்வதைவிட இயந்திரங்களைக் கொண்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் விவசாயம் மேற்கொள்வது பாதுகாப்பானது என விவசாயிகள் நம்ப ஆரம்பித்துவிட்டால் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் நிறைந்ததாக விவசாயம் மாறிவிடும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
 
கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பு தேவைக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அதன் அவசியத்தை புரிந்துக்கொண்டனர். இந்த புரிதலுக்கு முக்கிய காரணமாக ஸ்மார்ட் ஃபோன்கள் விளங்குகின்றன.
 
வெவ்வேறு பணிகளை தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள்
 
உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் வெவ்வேறு வர்த்தக மாதிரிகள் குறித்துச் சிந்தித்து வருகின்றன. ஏற்கனவே ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களையும் அவர்கள் வகித்த பணியிடங்களையும் முழுமையாக நீக்குகின்றனர். எனவே கொரோனா வைரசுக்கு பிந்தைய நாட்களில் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படும். தானியங்கி இயந்திரங்கள் அதிக அளவில் உருவாக்கப்படுவதால் 2030ம் ஆண்டிற்குள் பலர் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது தாங்கள் பணிபுரியும் துறையிலிருந்து வேறு துறைக்கு மாற வேண்டும் என 2017ம் ஆண்டு மெக்கென்சி நிறுவனம் குறிப்பிட்டது.
 
உலகளவில் 14% தொழிலாளர்கள் துறை மாற்றத்தை எதிர்கொள்வார்கள் என்றும் மெக்கென்சி நிறுவனம் கணித்தது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிக நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது.
 
பகுதிநேர பணியாளர்களுக்கு சில சாதகமான சூழல் நிலவும் என்றே நிபுணர்கள் நம்புகின்றனர். எடுத்துக்காட்டாகப் பலர் உணவகம் சென்று உணவு உண்ண ஆசை படுவார்கள். ஆனால் வைரஸ் தொற்று பரவும் அபாயம் காரணமாக உணவகம் செல்லாமல், உணவகத்தில் பணிபுரியும் சமையல் கலைஞரை ஒரு நாள் வீட்டிற்கு அழைத்து உணவு தயாரிப்பார்கள். சமையல் கலைஞரைப் பகுதி நேர ஊழியராக அழைத்து ஒரு நாள் ஊதியம் மட்டுமே வழங்குவார்கள்.
 
பல தொழில்கள் டிஜிட்டல் மையமாக மாறிவருவதையும் நம்மால் காணமுடிகிறது. யோகா, நடனம் மற்றும் இசை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இணையம் மூலம் காணொளி வகுப்புகள் எடுக்க தொடங்கிவிட்டனர்
 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், இயந்திரம் மூலம் கற்பித்தல், இணையப் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளுக்குத் தரவுகளைக் கையாளும் பொறியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதிக அளவில் தேவைப்படுவார்கள் என சில மனித வள மேம்பாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அலுவலக அழுத்தங்களைச் சரியாகக் கையாளும் திறன் உள்ளவர்களுக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என கூறுகிறார்கள்.
 
ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்
 
2011ம் ஆண்டிலிருந்தே இந்தியா ரோபோடிக்ஸ் துறையில் திறமையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் வைரஸ் தொற்று பரவும் அபாயம் பல புதுமையான கண்டுபிடிப்புகள் வெளிவர ஊக்கமாக அமைந்துள்ளது. வர்த்தக நிலையங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் கூட அன்றாட பணிகளுக்கு ரோபோக்களை பயன்படுத்தப் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். தோட்டத்தில் உள்ள புல்களை நீக்குவதற்கு, ஜன்னல் கதவுகளை சுத்தம் செய்ய என பல பணிகளுக்கு ரோபோக்களை பயன்படுத்த மக்கள் விரும்புகின்றனர்.
 
இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் ரோபோக்களுக்கான தேவை 1000-2000% அதிகரித்துள்ளது. ''எனவே தற்போது ஜன்னல் துடைப்பது போன்ற சிறிய வேலைகள் ரோபோக்களுக்கு வழங்கப்படும், அதிக மதிப்பு உள்ள வேலைகள் மனிதர்களுக்கு வழங்கப்படும்'' என்கிறார் மிலாக்ரோ ரோபோட்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜீவ் கர்வால்.
 
மிலாக்ரோ நிறுவனத்தின் ரோபோக்கள் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் தரையைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஃபோர்டிஸ், அப்பலோ மற்றும் மேக்ஸ் மருத்துவமனைகளிலும் மிலாக்ரோ நிறுவன ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது
 
பல நிறுவனங்களில் சிறிய வேலைகள் தானியங்கி இயந்திரங்களால் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பணிகள் மிகவும் துல்லியமாக நடக்கின்றன.
 
ரியல் எஸ்டேட் வர்த்தகம் மேற்கொள்ளும் முகவர்கள் கூட நிலத்தையும் தங்கள் கட்டடங்களையும் ட்ரோன் இயந்திரங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்கின்றனர்.
கண்காணிப்பு
 
வீட்டிலிருந்து பணியாற்ற வற்புறுத்தப்பட்ட பல ஊழியர்கள் கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பிறகும் தங்கள் வீடுகளிலிருந்தே பணிகளைத் தொடர வேண்டுமென என 74% தலைமை நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர் என கார்ட்னர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
ஊழியர்களைக் கண்காணிக்க மொபைல் டிவைஸ் மானேஜ்மென்ட் போன்ற மென்பொருளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
 
மொபைல் டிவைஸ் மானேஜ்மென்ட் மென்பொருள் மூலம் ஊழியர்கள் பயன்படுத்தும் லேப்டாப்களை கண்காணிக்க முடியும், தொலைவிலிருந்தபடியே முக்கியமான தரவுகளை நீக்கவும் முடியும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் பேசிய இன்ஃபி செக் இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வினோத் செந்தில் கூறினார்.
 
ஒரு ஊழியர் தனது கீ போர்டில் என்ன தரவுகளை தட்டச்சு செய்கிறார் என்பது முதல், லேப்டாப்பில் உள்ள செயலிகளின் செயல்பாடு வரை அனைத்தையும் பதிவு செய்து நிர்வாக மேலாளருக்கு அனுப்பும் திறன் கொண்ட மென்பொருளை இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று உருவாக்கி வருகிறது. 10 நிமிடத்திற்கு ஒரு முறை ஊழியரைப் புகைப்படம் எடுத்துப் பதிவு செய்யும் திறன் கொண்டதாகவும் மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது
ஒர்க் அனலிடிக்ஸ், டெஸ்டிராக், ஐமோனித் மற்றும் டெராமைண்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் ஊழியர்களைக் கண்காணிக்கும் இந்த வகையான மென்பொருளின் தேவைகள் அதிகரிப்பதைக் காணமுடிகிறது என கூறுகின்றன.
 
''பலர் நிர்வாக மேலாளர்களுக்கு நான் எத்தனை முறை சிறுநீர் கழிக்க எழுந்தேன் என்பது தெரியும். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த வகை கண்காணிப்பு மிகையாக உள்ளது'' என்கிறார் பிபிசியிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர் ஒருவர்.
 
''ஊழியர்கள் பணிபுரியும்போது தொடர்ந்து தங்கள் வெப் கேமராக்களை ஆன் செய்து வைக்க வேண்டும்'' என சில நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது தனியுரிமை விதி மீறலாகும்.
 
பொதுவாக அனைத்து துறைகளில் உள்ள ஊழியர்களும் இதுதான் புது இயல்பு என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டு, தங்கள் பணியை தொடர்கின்றனர்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாத்தான் குளம் மரண வழக்கு.. எஸ்.ஐ உள்ளிட்ட 5 பேர் மதுரை சிறைக்கு மாற்றம் !