Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

"உலகையே வியக்க வைத்த கல்வெட்டு" - பிரதமர் கூறிய உத்திரமேரூர் கல்வெட்டின் சிறப்புகள்

, செவ்வாய், 31 ஜனவரி 2023 (09:50 IST)
"உலகையே வியப்பில் ஆழ்த்திய உத்திரமேரூர் கல்வெட்டு" என்று தனது 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டிருக்கிறார்.

உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன? அந்தக் கல்வெட்டு சொல்லும் செய்தி என்ன? ஞாயிற்றுக்கிழமையன்று 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய ஜனநாயகம் குறித்துப் பேசும்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகள் பற்றி குறிப்பிட்டுப் பேசினார். "தமிழ்நாட்டில் உத்திரமேரூர் என்ற புகழ்பெற்ற சிறிய கிராமம் இருக்கிறது. இங்கு உள்ள 1,000- 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தக் கல்வெட்டு ஒரு சிறிய அரசமைப்பு சாசனத்தைப் போல விளங்குகிறது. எவ்வாறு கிராம சபை நடத்தப்பட வேண்டும், கிராம சபை உறுப்பினர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதெல்லாம் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது," என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் ஜனநாயகம் குறித்துப் பேசப்படும் தருணங்களில் எல்லாம் இந்த உத்திரமேரூர் கல்வெட்டு குறித்து சுட்டிக்காட்டப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்தக் கல்வெட்டு எங்கே இருக்கிறது? இந்தக் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன? காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை சாலையில் அமைந்திருக்கிறது உத்திரமேரூர்.
 
உத்திரமேரூரின் சிறப்பு
உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம், ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம், விஜயகண்டகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை, உத்திரமேலூர், பாண்டவவனம், பஞ்சவரத ஷேத்திரம் எனப் பல விதங்களில் இந்த ஊர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. வைகுண்ட பெருமாள் கோயில், சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், கேதாரீஸ்வரர் கோயில், செங்கையம்மன் கோயில் என பல பழமையான கோவில்களைக் கொண்டிருக்கிறது இந்த ஊர். உத்திரமேரூர் பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சிக் காலத்தில் பிராமணர்கள் மட்டும் வசிக்கக்கூடிய பிரம்மதேய கிராமமாக கி.பி. 750வாக்கில் இந்த ஊர் உருவாக்கப்பட்டது. வைணவப் பிரிவைச் சேர்ந்த 1,200 பிராமணர்களுக்கு இந்தக் கிராமம் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இந்த ஊரை, உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம் எனக் குறிப்பிடுகிறது.'
 
ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் பகுதியைச் சோழர்கள் கைப்பற்றினர். முதலாம் பராந்தகச் சோழன் (907–950), ராஜராஜசோழன் (985–1014), ராஜேந்திரச் சோழன் (1012–1044), முதலாம் குலோத்துங்கச் சோழன் (1070–1120) காலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் இங்குள்ள பல்வேறு கோவில்களில் காணப்படுகின்றன. உத்திரமேரூரில் இப்படி நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் கிடைத்தாலும், ஊராட்சி அமைப்பு குறித்த இரண்டு கல்வெட்டுகளே மிகவும் பிரசித்திபெற்றவை. ஊராட்சி முறையைப் பற்றி இரண்டு கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் இங்குள்ள வைகுண்டப் பெருமாள் கோவிலின் ஒரு பகுதியாக உள்ளன. இரண்டு கல்வெட்டுகளுமே முதலாம் பராந்தகச் சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை. அதில் ஒன்று 12 ஆம் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 917), மற்றொன்று 14ஆம் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 919) பொறிக்கப்பட்டவை. இந்தக் கல்வெட்டுகள் குடவோலை முறையைப் பற்றிப் பேசுகின்றன. குடவோலை முறை பற்றிப் பேசும் முதல் கல்வெட்டு 12 வரிகளைக் கொண்டது. இரண்டாம் கல்வெட்டில் 18 வரிகள் உள்ளன. கல்வெட்டுப் பாடத்திலிருந்து முதல் 5 வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
webdunia
"ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு பனிரண்டு ஆவது உத்திரமேருச்சதுர்வேதிமங்கலத்து சபையோம் இவ்வாண்டுமுதல் எங்களூர் ஸ்ரீமுகப்படி ஆஞை யினால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செய்த பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி காநிலத்துக்கு மேல் இறை நிலமுனையான் தன் மனையிலே அகம் எடுத்துக்கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணரென்னப்பட்டிருப்பாரை அர்த்தசௌசமும் ஆத்ம சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு" என இந்தக் கல்வெட்டு நீண்டு செல்கிறது. மதுரையைப் கைப்பற்றிய பரகேசரிவர்மனான முதலாம் பராந்தகனின் 12ஆம் ஆட்சியாண்டிலும் 14ஆம் ஆட்சியாண்டிலும் உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை கிராம நிர்வாகத்திற்குத் தேவையான குழுக்களை அரசாணையின்படி அமைக்கிறது. அவ்வமைப்பின்படி அரசு அதிகாரி ஒருவரும் உடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் சம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்ச வாரியம் போன்ற வாரியங்கள் அமைக்கப்பட்டு அதன் செயல்பாட்டிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் என்கிறது இந்தக் கல்வெட்டு. உத்திரமேரூரில் வசித்தவர்கள் 30 குடும்புகளாக பிரிக்கப்பட்டிருந்தனர். பல்வேறு வாரியங்களுக்கு ஒவ்வொரு குடும்பிலிருந்தும் ஆட்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதுபோலத் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும், எப்படித் தேர்வு செய்ய வேண்டும், அப்படித் தேர்வு செய்தபின் என்ன செய்ய வேண்டும் ஆகிய நடைமுறைகள் இந்தக் கல்வெட்டுகளில் விளக்கப்பட்டிருக்கின்றன.
 
தகுதிகள்
 
தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு ஆறு தகுதிகள் குறிப்பிடப்படுகின்றன: 1. உறுப்பினருக்கு கால் வேலிக்கு மேல் வரி கட்டும் நிலம் இருக்கவேண்டும். 2. சொந்த இடத்தில் வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும். 3. வயது முப்பதுக்கு மேல் அறுபது வயதிற்குள் இருக்கவேண்டும். 4. வேதத்திலும் சாஸ்திரத்திலும் நிபுணராக இருக்கவேண்டும். 5. நல்ல வழியில் செல்வம் சேர்க்கப்பட்டிருப்பதோடு நல்ல ஆன்மாவும் இருக்க வேண்டும். 6. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தவர்களும் அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக முடியாது. இக்கல்வெட்டில் உறுப்பினர்களின் தகுதிகள் குறிப்பிடப்படும் பொழுது, வேத, சாஸ்திரத்தில் வல்லுனர்கள் மட்டுமே இதில் உறுப்பினராகத் தகுதி படைத்தவராகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், பிராமணர்களால் மட்டுமே உறுப்பினராக முடியும். அந்த ஊரே, சதுர்வேதி மங்கலம் எனக் குறிப்பிடப்படுவதால், பிராமணர்களுக்கான சபையாகவே இதைக் கருத முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கல்வெட்டுகளில் ஸம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் பணி விளக்கப்படவில்லை. இரண்டாவது கல்வெட்டில், உறுப்பினராவதற்கான தகுதிகள் சற்று மாற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வயதைப் பொறுத்தவரையில் 35 வயதுக்கு மேலும் 70 வயதுக்குக் கீழும் இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மந்திர பிரமாணம் அறிந்து அதை மற்றவர்க்குச் சொல்பவராக இருக்க வேண்டும் என்றும் ஒரு வேதத்திலும் நான்கு பாஷ்யத்திலும் நிபுணத்துவம் வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
webdunia
இது தவிர, ஏதாவதொரு வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாது சென்றவர்களும் அவர்களது உறவினர்களும் உறுப்பினராகக் கூடாது. ஆகமங்களுக்கு எதிராக பஞ்சமா பாதகங்களைச் செய்தவர்கள், பாவம் செய்தவர்கள், லஞ்சம் வாங்கியவர்கள், கொலைக் குற்றம் செய்யத் தூண்டுபவர், கொலை செய்பவர், அடுத்தவர் பொருளை அபகரிப்பவர், ஊர்மக்களுக்கு விரோதி ஆகியோரும் உறுப்பினராக முடியாது. கழுதை ஏறியோர், பொய் கையெழுத்து போட்டவர்களும் உறுப்பினராக முடியாது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
 
தேர்தல் முறை
மேலே சொன்ன தகுதிகளை உடையவர்களின் பெயர்கள் ஓலையில் எழுதப்படும் அதனை ஒரு குடத்தில் இட்டு, அதன் வாயைக் கட்ட வேண்டும். தேர்தல் நாளன்று எல்லோரும் கூடியிருக்கும்போது, அங்குள்ள வயதில் மூத்தவர் குடத்தை எல்லோருக்கும் காட்டுவார். பிறகு அந்த குடத்தில் உள்ள ஓலைகள் வேறு குடத்தில் போடப்பட்டு நன்றாக கலக்கப்படும். பிறகு, ஒரு சிறுவனைக் கொண்டு ஓர் ஓலையை எடுக்கச் செய்வார்கள். அந்த ஓலையில் உள்ள பெயர் வாசிக்கப்பட்டு, எழுதிக்கொள்ளப்படும். இதுபோலவே எல்லா வாரியத்திற்கும் உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். "இவை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள். அந்த காலகட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மிகத் தூய்மையாக இருந்தது என்பதற்கு இந்தக் கல்வெட்டுகள் எடுத்துக்காட்டு. இங்கு மட்டுமல்ல சோழ நாட்டில் வேறு சில இடங்களிலும் இதுபோல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அந்தக் காலகட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தையே இந்தக் கல்வெட்டுகள் காட்டுகின்றன" என்கிறார் சோழர் காலம் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருபவரான குடவாயில் பாலசுப்பிரமணியம். ஆனால், பிராமணர்கள் மட்டும் பங்கேற்கக்கூடிய இந்த குடவோலை முறையை முழுமையான மக்களாட்சி முறை எனக் கூறக்கூடாது என்ற கூற்றுகளும் உள்ளன.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுவானில் விமான ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்