Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மீண்டும் அமைச்சர் ஆவாரா செந்தில் பாலாஜி? வழக்கு கடந்து வந்த பாதை!

senthil balaji

Prasanth Karthick

, வியாழன், 26 செப்டம்பர் 2024 (14:02 IST)

தமிழ்நாட்டின் முன்னாள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூன்று பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று (வியாழன், செப்டம்பர் 26) ஜாமீன் வழங்கியுள்ளது.

 

 

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். நீண்ட காலமாக ஜாமீன் வழங்கப்படாமல் அவர் சிறையில் இருப்பதால் மனித உரிமைகளை கருத்தில் கொண்டு அவர் விடுவிக்கப்பட்டிருப்பதாக செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறுகையில், “15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாக இருந்து வருவதால் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன” என்றார்.

 

மேலும் அவர் “அமைச்சராக பொறுப்பேற்பதற்கு சட்ட ரீதியாக தடை ஏதும் இல்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

“உச்சநீதிமன்றம் சமீப காலமாகவே ஒன்றிய அரசால் தொடுக்கப்பட்ட அமலாக்கத்துறை வழக்குகளில், பலரை சிறையில் வைத்து ஜாமீன் வழங்காமல் இருக்க வேண்டும் என்று கூறுவதை அடக்குமுறை சட்டமாக பார்க்கிறது,” என்று அவர் அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோரின் வழக்குகளை குறிப்பிட்டு பேசினார்.

 

முதல்வர் வரவேற்பு
 

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், சகோதரர் செந்தில் பாலாஜியை வரவேற்கிறேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “அமலாக்கத்துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன், உன் தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

 

வழக்கின் பின்னணி என்ன?
 

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

 

2014-ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்றது.

 

இந்தப் பணி நியமனங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர்.

 

காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

 

2018-ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார்.

 

வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் ஆட்சேர்ப்பு பட்டியல் வந்தபோது தங்களின் பெயர் வராததால் அதிருப்தியடைந்து புகார் அளித்துள்ளனர்.

 

முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சுமத்தப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

 

இதன் தொடர்ச்சியாக 2018-ஆம் ஆண்டு இந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இதன் விசாரணை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவில் இணைந்திருந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.

 

இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

 

மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சியங்கள் 13 பேரும் சமரசத்தை எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கின் விசாரணை நிறுத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது.

 

இதற்கிடையே, இந்த வழக்கில் பணமோசடி நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை அனுப்பியிருந்தது.

 

அதை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அழைப்பாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

 

அதேசமயம், செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

வழக்கு கடந்து வந்த பாதை
 

  • மே 2021 - திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றார்.
  • 2022 - அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு
  • மே 2023 - அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • ஜூன் 2023 - செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு முறை பிணை கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே அவருக்கு நீதிமன்ற காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது
  • ஜூன் 2023 - செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அவருடைய துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்தார். அதனை திமுக ஏற்கவில்லை.
     
  • ஜூன், 2023 – செந்தில் பாலாஜிக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
  • ஜூன் 2023 - செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டார். நள்ளிரவே அந்த உத்தரவை ஆளுநர் வாபஸ் பெற்றார்.
  • ஆகஸ்ட், 2023 - செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
  • ஆகஸ்ட், 2023 : செந்தில் பாலாஜி மீதான பண பரிமாற்ற குற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை 3,000-பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
  • அக்டோபர், 2023 - செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதால் வழக்கில் சாட்சியங்களை கலைக்கக்கூடும் எனக்கூறி ஜாமீன் மறுக்கப்பட்டது.
  • பிப்ரவரி 2024 - இலாகா இல்லாத அமைச்சராக பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • பிப்ரவரி 2024 - சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
  • ஆகஸ்ட் 2024 - வழக்கு விசாரணையில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது.
  • செப்டம்பர் 2024 - செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
 

யார் இந்த செந்தில் பாலாஜி?
 

ஒரு ஒன்றிய கவுன்சிலராக தி.மு.கவில் தன் அரசியல் பயணத்தைத் துவங்கி மீண்டும் திமுகவிலேயே இணைந்து ஒரு முழுச் சுற்றை முடித்தவர் செந்தில் பாலாஜி.

 

கரூரில் உள்ள ராமேஸ்வரப் பட்டியைச் சேர்ந்த வி.செந்தில் குமார் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படிக்கும்போது, படிப்பை பாதியில் விட்டுவிட்டு அரசியலில் குதித்தவர். 1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்தார். பிறகு தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார்.

 

அதற்குப் பிறகு அமைச்சராகும்வரை அ.தி.மு.க-வில் அவரது பயணம் தொடர்ந்து மேல் நோக்கியதாகவே இருந்தது. கட்சியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளரானார். 2004ல் மாவட்ட மாணவரணி செயலாளரானவர் 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தார். 2007ல் கரூர் மாவட்டச் செயலாளராகவும் ஆனார்.

 

இதற்குப் பிறகு, ஜெயலலிதா மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினருடனும் மிகவும் செல்வாக்கான நபராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி. இதையடுத்து 2011லும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா.

 

2015ஆம் ஆண்டுவரை பல முறை அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியபோதும், செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவில்லை.

 

கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தனது செல்வாக்கை வளர்த்துவந்தார் செந்தில் பாலாஜி.

 

அ.தி.மு.க-வில் இருந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தி.மு.கவுக்குச் சென்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பிதுரைக்கு பல இடங்களில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்குப் பின்னால், செந்தில் பாலாஜியின் கரம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

 

கட்சி சசிகலா - ஓ.பி.எஸ் என இரு தரப்பாக இரண்டாகப் பிளவுபட்டபோது, சசிகலா பிரிவுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் அந்த நேரத்திலும்கூட, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக ஒரு அதிரடியைக் கிளப்பினார் செந்தில் பாலாஜி.

 

அந்த நேரத்திலேயே அதாவது 2017 ஏப்ரலிலேயே அவர் தி.மு.கவுக்கு வரப்போவதாக செய்திகள் அடிபட்டன. அவர் மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தி.மு.கவுக்கு அழைத்துவருவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பிலிருந்து டிடிவி தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டபோது அவர் பக்கம் சென்றார் செந்தில் பாலாஜி.

 

ஆனால், டிடிவி தரப்பிலிருந்து அவருக்கு பல்வேறு விதங்களில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் இருந்த நிலையிலேயே அவர் தி.மு.க பக்கம் சென்றார் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு முக்கியத் தேர்தல்களில் தனது பலத்தை அவர் நிரூபித்திருக்கிறார்.

 

2018-ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையின் புதிய பிரதமர் ஹரிணி டெல்லியில் படித்தவரா? ஆச்சரிய தகவல்..!