உலக அளவில் வானியல் ஆர்வலர்கள் இடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூப்பர் பிளட் மூன் நிகழ்வு, வரும் 26 ஆம் தேதி நிகழவிருக்கிறது.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் பூமி வரும் நிகழ்வுதான் சந்திர கிரகணம். அப்போது பூமியின் நிழலில் நிலவு இருக்கும். பொதுவாக ஆண்டுக்கு 2 - 5 முறை சந்திர கிரகணம் நிகழும். முழு சந்திர கிரகணம் என்பது மூன்று ஆண்டுகளுக்கு 2 முறையாவது நிகழும்.
ஒரு முழுமையான சந்திர கிரகணத்தின் போது நிலவு பளிச்சென ரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும் என்பதால், அதை Blood Moon என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு முழு சந்திர கிரகணம்தான் வரும் மே 26ஆம் தேதி (புதன்கிழமை) நிகழவிருக்கிறது.
இந்தியாவில் மே 26ஆம் தேதி பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 6.22 மணி வரை சந்திர கிரகணம் நிகழும். மாலை 4.41 முதல் 4.56 வரையான 15 நிமிடங்கள் முழு சந்திர கிரகணம் நிகழும். கிரகணத்தின் போது இந்தியாவைப் பொறுத்த வரை, நிலவு கிழக்கு அடிவானத்தின் கீழே இருக்கும் என்பதால், சூப்பர் ப்ளட் மூனை நாம் பார்க்க முடியாது.
நிலவு சென்னையில் 6.32 மணிக்கு உதயமாகும். அதற்குள் கிரகணம் நிறைவடைந்துவிடும். கொல்கத்தா போன்ற வடகிழக்கு பகுதிகளில் 6.14 மணியளவில் நிலவு உதயமாகும் என்பதால், பகுதி கிரகணத்தை சில நிமிடங்கள் மட்டும் பார்க்க முடியும்.