Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜெருசலேம் தாக்குதலுக்கு பதிலடி; அல்-அக்சா மசூதியில் வன்முறை

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜெருசலேம் தாக்குதலுக்கு பதிலடி; அல்-அக்சா மசூதியில் வன்முறை
, செவ்வாய், 11 மே 2021 (10:20 IST)
காசா பகுதியில் உள்ள போராளிக் குழுக்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் இருந்து ஜெருசலேம் நகரத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலத்தீன சுகாதார அமைச்சகம் குழந்தைகள் உள்பட 20 பேர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத்  தெரிவித்துள்ளது.
 
காசாவில் இருந்து ஜெருசலேம் நகரை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்பு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
 
இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தரப்புகள் இடையே கடந்த சில நாட்களாகவே பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.
 
திங்கட்கிழமை ஜெருசலேம் நகரில் இஸ்ரேலிய காவல்துறையினர் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையே நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலத்தீன தரப்பினர்  காயம் அடைந்தனர். இதன் பின்பு தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று காசாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
 
ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 'குறைந்தது மூன்று தீவிரவாதிகளை தாங்கள் கொன்றுள்ளதாக' இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
 
"நாங்கள் தொடங்கி விட்டோம்; நான் மீண்டும் சொல்கிறேன்; காசாவில் உள்ள ராணுவ நிலைகளை இலக்கு வைத்து நாங்கள் தாக்கத் தொடங்கி விட்டோம்," என்று  இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டிணன்ட் கர்னல் ஜோனாத்தன் கான்ரிகஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி முகமது அப்துல்லா ஃபயாத் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் வட்டாரங்கள் பிபிசிக்கு  தெரிவிக்கின்றன.
 
ஹமாஸ் எல்லைமீறி விட்டதாகவும் அதற்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி தரும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
 
ராக்கெட் தாக்குதல் நடத்துவதை ஹமாஸ் அமைப்பு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆன்டனி ப்ளின்கன், அனைத்து தரப்பினரும் பதற்ற நிலையைக் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
அல்-அக்சா மசூதியில் என்ன நடந்தது?
 
முன்னர் திட்டமிடப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்ட ஜெருசலேம் தின கொடி அணிவகுப்பு நடக்கும்போது மோதல்கள் உண்டாகும் என்று எதிர்பார்த்த பாலத்தீனர்கள் அல்-அக்சா மசூதியில் கற்கள் மற்றும் தீயை உண்டாக்கும் பொருட்களுடன் குவிந்திருந்தனர் என்று இஸ்ரேலிய காவல் துறை தெரிவிக்கிறது.
 
திங்கட்கிழமை காலை காவல் சாவடி ஒன்று தாக்கப்பட்டதுடன் அருகில் இருந்த சாலையில் கற்கள் வீசப்பட்டதால் "கலவரக்காரர்களை எதிர் கொள்ளவும் அவர்களின் கூட்டத்தைக் கலைக்கவும்" அல்-அக்சா மசூதி வளாகத்துக்குள் செல்லுமாறு இஸ்ரேலிய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
 
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இஸ்ரேலிய காவல்துறையினர் பாலத்தீன தரப்பினரை நோக்கி ரப்பர் குண்டுகளால் சுட்டதுடன் கண்ணீர் புகை குண்டுகளையும்  வீசினர்.
 
'ஸ்டன் கிரனேடுகளும்' பாலத்தீனர்களை நோக்கி எறியப்பட்டன. பாலத்தீன தரப்பினர் இஸ்ரேலிய காவல்துறையினர் மீது கற்களையும் பிற பொருட்களையும்  வீசினர்.
 
சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகளில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக அல்-அக்சா மசூதியில் கூடியிருந்தவர்கள் ஓடுவதையும் இஸ்ரேலிய காவல்துறையினர் வீசிய ஸ்டன் கிரனேடுகள் மசூதி வளாகத்திற்குள் விழுவதையும் காண முடிகிறது.
 
இங்கு நடந்த மோதலின்போது காயமடைந்த மொத்தம் 305 பாலத்தீனர்களில் 228 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பாலத்தீன ரெட் க்ரசென்ட் அமைப்பு கூறுகிறது. அவர்களில் ஏழு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தங்கள் அலுவலர்கள் 21 பேர் காயமடைந்ததாகக் கூறியுள்ள இஸ்ரேலிய காவல்துறை அவர்களின் மூவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது என்றும்  தெரிவிக்கிறது.
 
இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமாக கருதப்படும் அல்-அக்சா மசூதி இஸ்லாமியர்களால் ஹரம் ஷெரிப் என்று அழைக்கப்படுகிறது. மலைக் குன்றின் மேல் அமைந்துள்ள இந்த இடத்தை யூதர்களும் புனிதத் தலமாக கருதுகின்றனர்.
 
அவர்கள் இதை 'டெம்பிள் மவுண்ட்' (கோயில் மலை) என்று அழைக்கின்றனர். தங்களின் இரண்டு விவிலிய புனித இடங்களில் ஒன்றாக யூதர்கள் இதைக்  கருதுகிறார்கள்.
 
இஸ்ரேல் - பாலத்தீன தரப்புகள்: சமீபத்திய வன்முறை ஏன்?
 
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜெருசலேம் நகரில் சமீப நாட்களாக வன்முறை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
 
திங்களன்று ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதிக்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையினருடன் நடந்த மோதலில் 300க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள்  காயமடைந்தனர்.
 
கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள இஸ்லாமியர்கள் வாழும் பகுதி வழியாக இஸ்ரேலிய தேசியவாதிகள் கொடி அணிவகுப்பு ஒன்றை, திங்களன்று நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனும் அச்சத்தின் காரணமாக கைவிடப்பட்டது.
 
ஆண்டுதோறும் ஜெருசலேமில் நடக்கும் ஜெருசலேம் தின கொடி அணிவகுப்பின் போது இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் வழியாக ஜியனிச (zionism) கொள்கையுடைய யூதர்கள் செல்வார்கள்.
 
1967ஆம் ஆண்டு ஜெருசலேம் பழைய நகரம் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியதை கொண்டாடும் நிகழ்வாக இந்த அணிவகுப்பு  நடைபெறுகிறது.
 
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இந்தக் கொடி அணிவகுப்பு, தங்களை வேண்டுமென்றே தூண்டிவிடும் செயல் என்று பாலத்தீன தரப்பு கருதுகிறது.
 
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் உள்ள தங்கள் வாழ்விடங்களில் இருந்து, யூத குடியேறிகளால் பாலத்தீன குடும்பங்கள் வெளியேற்றப்பட  வாய்ப்புள்ள சூழல் உருவானது பாலத்தீனர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது. இதனால் அங்கு சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது.
 
யூத குடியேறிகளுக்கு ஆதரவாக தங்களது சொந்த இடத்திலிருந்து பாலத்தீன குடும்பத்தினர் வெளியேற்றப்படுவதை, எதிர்த்து 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தொடர்ந்த வழக்கு பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
 
ஆனால் திங்கட்கிழமை இஸ்ரேலிய அரசின் தலைமை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நடக்கும் வன்முறைகளை காரணம் காட்டி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. விசாரணை தள்ளி வைக்கப்பட்ட முப்பது நாட்களுக்குள் புதிய தேதி முடிவு செய்யப்படும்.
 
கிழக்கு ஜெருசலேம் - ஏன் முக்கியம்?
 
இஸ்ரேல் - பாலத்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.
 
1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின்பு கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
 
1980-ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெருசலேமை தங்களுடன் இணைத்துக் கொண்டது.
 
ஜெருசலேம் நகரம் தங்களது தலைநகரம் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் சர்வதேச நாடுகள் பலவும் இதை அங்கீகரிக்கவில்லை.
 
எதிர்காலத்தில் அமையக் கூடும் என்று தாங்கள் நம்பும் சுதந்திர நாட்டுக்கு கிழக்கு ஜெருசலேம்தான் தலைநகராக அமையும் என்று பாலத்தீனர்கள் கூறுகிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு! – எல்.முருகன் அறிவிப்பு!