Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இஸ்ரேல் - காசா மோதல்: எந்த நாடுகள் யார் பக்கம்?

இஸ்ரேல் - காசா மோதல்: எந்த நாடுகள் யார் பக்கம்?
, வியாழன், 20 மே 2021 (08:39 IST)
பாலத்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்கள் ஒரு வாரத்திற்குப்பிறகும் தொடர்கிறது.
 
இந்த மோதல்களில் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த மோதல் இப்போது உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ளது. இந்த மோதலைத் தடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளன.
 
பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் பாலத்தீனியர்களை ஆதரிப்பதாகத் தெரிகிறது, அதே நேரத்தில் தம்மை ஆதரித்தமைக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 25 நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
இத்தகைய சூழ்நிலையில், இஸ்ரேல்-பாலத்தீன மோதலில் உலகின் எந்த நாடுகள் யார் பக்கம் நிற்கின்றன என்பதை தெரிந்துகொள்வோம்.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்
 
வல்லரசான அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், இஸ்ரேலுடனான அந்த நாட்டின் நெருக்கம் வெளிப்படையாகவே உள்ளது. அமெரிக்கா ஹமாஸ் அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்பாகக் கருதுகிறது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் ஹமாஸுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தையும் கொண்டு வந்தது. ஆயினும் அது நிராகரிக்கப்பட்டது.
 
எவ்வாறாயினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காசாவில் நடைபெற்று வரும் மோதலை நிறுத்த வேண்டும் என கோரியுள்ளார். மேலும் சண்டையை நிறுத்துவதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்புகிறார் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை புதன்கிழமையன்று தெரிவித்துள்ளது.
 
இருப்பினும் "இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியும் பாதுகாப்பும்" கிடைக்கும் வரை சண்டையை தொடர "தான் உறுதியாக இருப்பதாக" இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
முன்னதாக பாலத்தீனர்களின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமான இஸ்ரேலின் தற்காப்பு உரிமைக்கு, அமெரிக்கா ஆதரவளித்திருந்தது.
 
'பொது மக்களை குறிவைக்கும் ஒரு தீவிரவாத அமைப்பு' மற்றும் 'தீவிரவாதிகளை குறிவைக்கும் இஸ்ரேல்' ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசம் குறித்தும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கென் பேசினார்.
 
இருப்பினும், பாலத்தீனத்தில் மனித உரிமைகள் பிரச்சனை , அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஒரு சவாலாகவே உள்ளது. ஜோ பைடன், பாலத்தீன நிர்வாகத் தலைவர் மெஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் பேசினார். இரு தரப்பிற்கும் இடையிலான பதற்றத்தை தீர்க்கும் தனது உறுதிப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
 
தற்காப்புக்கான இஸ்ரேலின் உரிமை
 
ஐரோப்பிய நாடுகளும் ஹமாஸை ஒரு தீவிரவாத அமைப்பாக கருதுகின்றன மற்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியும், இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. பிரிட்டனில் சில அமைப்புகள், பாலத்தீனர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.
 
இஸ்ரேலின் தாக்குதல்களை பிரிட்டன் எதிர்க்க வேண்டும் என்று இவை வேண்டுகோள்விடுத்துள்ளன. பிரிட்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியேயும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் போரிஸ் ஜான்சன் அரசின் அணுகுமுறை வேறு.
 
காசாவில் இஸ்ரேலுக்கும் பாலத்தீன தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், இரு தரப்பினரின் பிரச்னைகள் தீர்க்கப்படுவதை வலியுறுத்தினார். இரு தரப்பினரிடமும் பின்வாங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சருடன் தான் பேசியதாகவும், இஸ்ரேலிய குடிமக்கள் மீதான ஹமாஸின் ராக்கெட் தாக்குதலைக் கண்டித்ததாகவும், பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் ஒரு ட்வீட்டில் தெரிவித்திருந்தார். கூடவே "இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பிரதேசங்களில் வன்முறையை நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்."
 
ஆனால் பிரிட்டனில் நடந்த எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்குப்பிறகு பிரதமர் போரிஸ் ஜான்சன், கடுமையாக பதிலளித்துள்ளார். "நமது சமுதாயத்தில் யூதர்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கு இடமில்லை. பிரிட்டனின் யூதர்களுடன் நான் நிற்கிறேன். இன்று நாம் காணும் வெட்கக்கேடான இனவெறியை அவர்கள் சகித்துக்கொள்ள தேவை இல்லை,"என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
 
பாலத்தீனர்களுக்கு ஆதரவாக பிரெஞ்சு தலைநகர் பாரிஸிலும் சனிக்கிழமை அணிவகுப்பு நடைபெற்றது. இருப்பினும், போராட்டங்கள் நடத்த அங்கு தடை இருப்பதால், போராட்டக்காரர்களை அகற்ற காவல்துறை முயன்றது. இது மோதல்களுக்கு வழிவகுத்தது.
 
அதே நேரத்தில், பிரெஞ்சு அரசு இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை ஆதரிக்கிறது.
 
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார் என்று அரபு செய்தித்தாள் தெரிவிக்கிறது. மக்ரோங், ஹமாஸ் ஏவுகணை தாக்குதலைக் கண்டித்துள்ளார். கூடவே, தற்காப்புக்கான இஸ்ரேலின் உரிமையை அவர் நியாப்படுத்தியுள்ளார்.
 
இருப்பினும், அமைதியை நிலைநாட்டுமாறு இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் ஆகிய இரு நாடுகளிடமும் பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தையை துவக்க பிரான்ஸ் முயற்சிப்பதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
 
இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை ஆதரித்துள்ள ஜெர்மனி
"இந்த வன்முறையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது, இந்த தாக்குதல்களுக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு. "என்று அரசு செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் சீபெர்ட் மே 14 அன்று தெரிவித்ததாக ஜெர்மனிய செய்தி வலைத்தளமான டைசே வேலே கூறுகிறது.
 
இஸ்ரேல் மீதான ஹமாஸ் குழுவின் தாக்குதலையும் அவர் கண்டித்தார். ஜெர்மனியிலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இஸ்ரேலிய கொடிகள் தெருக்களில் எரிக்கப்பட்டுள்ளன.
 
வீட்டோ (ரத்து) அதிகாரத்தைக் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியன ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளில் அடங்கும். பாதுகாப்பு சபையில், இஸ்ரேல் - பாலத்தீன பிரச்னையில் ரத்து அதிகாரம் தேவைப்படும்பட்சத்தில், இஸ்ரேல் நன்மைகளைப் பெறலாம். நிரந்தர உறுப்பினர்களில் ரஷ்யா மற்றும் சீனாவும் அடங்கும்.
 
இது தவிர, ஆஸ்திரேலியா, அல்பேனியா, ஆஸ்திரியா, பிரேசில், கனடா, கொலம்பியா, சைப்ரஸ், ஜார்ஜியா, ஹங்கேரி, இத்தாலி, ஸ்லோவேனியா மற்றும் உக்ரைன் ஆகியன பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்த 25 நாடுகளில் அடங்கும்.
 
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இரு தரப்பினரிடமும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இஸ்ரேலுக்கு தற்காப்புக்கான உரிமை இருந்தாலும், பாலத்தீனர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
 
பாலத்தீனத்திற்கு வெளிப்படையாக ஆதரவு
 
இஸ்லாமிய நாடுகளை எடுத்துக்கொண்டால், அவைகள் இஸ்ரேலை கடுமையாக எதிர்த்துள்ளன. பாலத்தீன பிரதேசத்தில் நடைபெறும் வன்முறையை நிறுத்துவது பற்றி அவை பேசியுள்ளன. செளதி அரேபியா, துருக்கி, ஈரான், பாகிஸ்தான், குவைத் மற்றும் பல வளைகுடா நாடுகள், இஸ்ரேலை பகிரங்கமாக கண்டித்துள்ளன.
 
பாலத்தீன குடும்பங்களை ஜெருசலேமில் இருந்து வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டத்தை செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
 
"செளதி அரேபியா பாலத்தீனர்களுடன் நிற்கிறது, பாலத்தீனத்தில் அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் முடிவுக்கு கொண்டுவருவதை நாங்கள் ஆதரிக்கிறோம். 1967 எல்லையின் கீழ், கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக்கொண்ட ஒரு சுதந்திர நாடு பாலத்தீனர்களுக்கு இருக்கும்போதுதான் இந்தப் பிரச்சனை தீரும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
 
துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான், இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். உலகம் முழுவதும் அமைதியாக இருந்தாலும்கூட, துருக்கி தொடர்ந்து குரல் எழுப்பும் என்று எர்துவான், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
 
"சிரியாவின் எல்லைக்கு அருகே பயங்கரவாதிகளின் பாதையை நான் நிறுத்தியது போலவே, மஸ்ஜித்-இ-அக்ஸாவை நோக்கி வரும் கைகள் உடைக்கப்படும்," என்று எர்துவான் கூறியிருந்தார்.
 
இஸ்ரேல் மீது தடை விதிக்க வேண்டும் என்றும் துருக்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
இரானும் பாலத்தீனர்களை வெளிப்படையாக ஆதரித்துள்ளது. அதே நேரத்தில், பாலத்தீனத்தை இஸ்ரேல் தாக்குவதை தடுக்குமாறு , ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய நாடுகளிடம் அது வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
"இஸ்ரேலின் மிருகத்தனத்தைத்" தடுக்க தங்கள் போரிடும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று இரானின் உயர் மதத் தலைவர் அயதுல்லா அலி கமெனி கடந்த வாரம் பாலத்தீனர்களிடம், கூறியிருந்தார்.
 
"யூதர்கள் அதிகாரத்தின் மொழியை மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். எனவே பாலத்தீனர்கள் தங்கள் சக்தியையும் எதிர்ப்பையும் அதிகரிக்க வேண்டும். இதனால் குற்றவாளிகள் சரணடைந்து தங்கள் மிருகத்தனமான செயல்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள்," என்று கமெனி தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
 
பாலத்தீனர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானும் இஸ்ரேலை பகிரங்கமாக விமர்சிக்கிறது.
 
"பாலத்தீனர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது குறித்து எனது சகோதரர் துருக்கிய வெளியுறவு அமைச்சருடன் நான் தொலைபேசியில் பேசியுள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு OIC மற்றும் ஐ.நா.வின் கூட்டத்தை அழைக்க துருக்கி ஆதரவளித்துள்ளது. இஸ்லாமின் முதல் கிப்லா(திசை) மசூதியான அல்-அக்ஸாவில் வன்முறை, குழந்தைகளை கொல்வது ஆகியவற்றுடன் கூடவே பாலத்தீனர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ட்வீட் செய்திருந்தார்.
 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பாலத்தீனத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
 
ஒன்றிணைதல் குறித்து உறுதியான நிலைப்பாடு இல்லை
அதே நேரத்தில், ஜெருசலேமில் நடந்த வன்முறையை கண்டித்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமைதியை நிலைநாட்டவும் தாக்குதல்களை நிறுத்தவும் இஸ்ரேல் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது.
 
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் 'ஆபிரஹாம் உடன்படிக்கைகள்' என்ற பெயரில் பிரபலமடைந்துள்ளன. தற்போதுள்ள நிலைமை, 'ஆபிரஹாம் உடன்படிக்கைகளின்' உண்மையான சோதனை என்றும் சொல்லப்படுகிறது..
 
இராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ், பாலத்தீனர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்துள்ளார் . பாலத்தீனர்கள் தங்கள் உரிமைகளை அடைய ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அவர் மெஹ்மூத் அப்பாஸுடனும் பேசியதோடு, அங்குள்ள தற்போதைய நிலைமை பற்றிய தகவல்களையும் பெற்றுள்ளார்.
 
இஸ்ரேலிய தாக்குதல்களைத் தடுக்க ராஜீய மட்டத்தில் ஆழமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டானின் அதிபர்அப்துல்லா கூறியுள்ளார். இருப்பினும், பாலத்தீனத்திற்கு ஆதரவாக ஜோர்டானில் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.
 
பாலத்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தாக்குதலில் தலையிடுமாறு, மற்றொரு அண்டை நாடான லெபனானின் அதிபர் மைக்கென் அவுன், சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீதி இல்லாமல் அமைதி இல்லை, உரிமைகளை மதிக்காமல் நீதி இல்லை என்று அவர் கூறினார்.
 
இஸ்ரேலின் அண்டை நாடான எகிப்து, இரு தரப்பினருக்கும் இடையே சண்டைநிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்துவருகிறது. இரு தரப்பிற்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக பங்குவகிக்க எகிப்து முயன்று வருகிறது.
 
எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தஹ அல் சிசி, "நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்று நம்புகிறோம்," என்று ட்வீட் செய்துள்ளார்.
 
OIC கூட்டம்
இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) இந்த பிரச்னை தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது. அதில் பாலத்தீனர்கள் மீதான தாக்குதல்களுக்காக இஸ்ரேல் விமர்சிக்கப்பட்டது.
 
மத உணர்வுகளைத் தூண்டுவதற்கு வேண்டுமென்றே செய்யப்படும் முயற்சிகள், பாலஸ்தீன மக்கள் மற்றும் இஸ்லாமிய உலகின் உணர்வுகளைத் தூண்டும் இஸ்ரேலின் முயற்சிகள், பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் OIC எச்சரித்தது.
 
சார்பில்லா அணுகுமுறையை பின்பற்றும் நாடுகள்
 
பாலத்தீனம் மற்றும் இஸ்ரேல் தொடர்பாக நடுநிலையை பராமரிக்கும் நாடுகளும் உள்ளன. அவை சார்பில்லா கருத்தை வெளிப்படுத்தியுள்ளன அல்லது பிரச்னையின் திசையை வேறு நாட்டின்பக்கம் திருப்பியுள்ளன.
 
இந்த விஷயத்தில் இந்தியா ஒரு நடுநிலையை பராமரிப்பதாகத்தெரிகிறது. பாலத்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளிடமும் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு தரப்பை ஆதரிப்பது கடினம். எனவே, இரு தரப்பினரிடமும் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், "பாலத்தீனர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்தியா ஆதரிக்கிறது. இரு நாடுகளின் கொள்கையின் மூலம் தீர்வு காண உறுதிபூண்டுள்ளது" என்று கூறினார்.
 
அதே நேரத்தில், "காசா பகுதியில் இருந்து நடத்தப்படும் ஏவுகணை தாக்குதல்களை இந்தியா கண்டனம் செய்கிறது. அதே போல் இஸ்ரேலிய பதிலடியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது,"என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்த வன்முறை காரணமாக தனது பாதுகாப்பு குறித்து ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான மோதலால் தனது பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அந்த நாடு கூறியுள்ளது.
 
வெள்ளிக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடனான சந்திப்பில் ,ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே, இஸ்ரேல்-பாலத்தீனர்களுக்கு இடையிலான மோதலின் சாக்குப்போக்கில் சீனா, அமெரிக்காவை சாடியுள்ளது.
 
மனித உரிமைகளின் பாதுகாவலர் என்றும், 'முஸ்லிம்களின் நலவிரும்பி' என்றும் தன்னை கூறிக்கொள்ளும் அமெரிக்கா, இஸ்ரேலுடனான மோதலில் பாலத்தீனர்கள் (முஸ்லிம்கள்) கொல்லப்படுவது குறித்து கண்களை மூடிக்கொண்டிருக்கிறது என்று சீனா கூறியுள்ளது. பாலத்தீனர்கள் எவ்வாறு போர் மற்றும் பேரழிவு நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை அமெரிக்கா உணரவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
 
சீனாவின் ஷின்ஜியாங்கில் உள்ள, வீகர் முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது என்றும் பாலத்தீன முஸ்லிம்கள் குறித்து அந்த நாடு அமைதி காக்கிறது என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.
 
பாலத்தீன தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் இடையிலான மோதல் ஒரு வாரத்திற்குப் பிறகும் தொடர்கிறது. ஜெருசலேமில் ஏறக்குறைய ஒரு மாதமாக இருந்துவந்த அமைதியின்மைக்குப் பின்னர் இந்த மோதல் தொடங்கியது.
 
கிழக்கு ஜெருசலேமின் ஷேக் ஜார்ரா பகுதியில் இருந்து பாலத்தீன குடும்பங்களை வெளியேற்றுவதான மிரட்டலுக்குப்பின்னர் சண்டை தொடங்கியது. யூதர்கள் இது தங்கள் நிலம் என்று கூறி அங்கு குடியேற விரும்புகிறார்கள். இதன் காரணமாக, அங்குள்ள அரபு மக்கள் வசிக்கும் பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மந்திரம் ஓதியவாறு தாலியில் இருந்த தங்கத்தை திருடிய புரோகிதர்: காட்டி கொடுத்த வீடியோ!