உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளின் காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக அவரது கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பெருங்குடல் அழற்சி (Ulcerative colitis)நோயால் அவதிப்பட்டு வரும் அவரது உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 65 வயதாகும் பிரதமர் ஷின்சோ அபே தனது உடல்நலனால் அரசுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க விரும்புவதாக ஜப்பானின் அரச ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஜப்பானின் பிரதமராக பதவியேற்ற ஷின்சோ அபே, நாட்டின் வரலாற்றில் நீண்டகாலம் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை இந்த வாரத்தின் தொடக்கத்தில் பெற்றிருந்தார். தனது இளம்வயதிலிருந்து பெருங்குடல் அழற்சியுடன் போராடி வரும் ஷின்சோ அபே, கடந்த 2007ஆம் ஆண்டு இதே காரணத்தினால் பதவியிலிருந்து விலக நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர பழமைவாத மற்றும் தேசியவாதியாக அறியப்படும் அபே, தனது தனித்துவமான "அபெனோமிக்ஸ்" என்ற அழைக்கப்படும் ஆக்கிரோஷமான பொருளாதாரக் கொள்கையுடன் வளர்ச்சியைத் தூண்டுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளார்.
ஜப்பானின் பாதுகாப்புப்படைகளை வலுப்படுத்தியுள்ள இவர் இராணுவ செலவினங்களுக்கான நிதியை அதிகரித்துள்ளார். ஆனால் தற்காப்பு தவிர வேறு எதற்கும் இராணுவத்தை பயன்படுத்துவதை தடை செய்யும் அரசமைப்பின் பிரிவு 9ஐ திருத்தும் நோக்கம் நிறைவேறவில்லை.
ஒருவேளை ஷின்சோ அபே பதவி விலகினால், ஜப்பானின் சட்டத்தின்படி, அந்த நாட்டின் இடைக்கால பிரதமராக ஒருவர் பதவி ஏற்பார். இதற்கான களத்தில், நிதியமைச்சராக இருக்கும் துணைப் பிரதமர் டாரோ அசோ மற்றும் அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா ஆகியோர் உள்ளனர்.