எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எவர் கிவன் கப்பலின் பின்பகுதி கால்வாயின் கடையை உரசிக்கொண்டு நிற்பதை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகள் காட்டுகின்றன.
கடல்சார் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளும் 'இன்ச்கேப்' நிறுவனமும் தரைதட்டி, சிக்கிக்கொண்டிருந்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இழுவைப் படகுகள் மற்றும் அகழ்வுக் கருவிகள் ஆகியவற்றின் துணையுடன் இந்தக் கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வந்தன.
சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகன் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) முதல் எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்குக் கப்பல் தரைதட்டி நின்றது.
ஞாயிறு வரை 18 மீட்டர் ஆழத்தில், 27,000 கியூபிக் மீட்டர் அளவு மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது என்று சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்திருந்தது.
எவர் கிவன் கப்பலுக்கு அடியில் பெரும் அளவில் பாறைகள் இருந்ததாக சூயஸ் கால்வாய் ஆணைய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
சீனாவிலிருந்து நெதர்லாந்து நோக்கி
சீனாவிலிருந்து நெதர்லாந்தில் உள்ள துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்குப் புறப்பட்டு, மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழியில் கால்வாய் வழியாக வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எவர் கிவன் கப்பல் தரை தட்டியது.
சுமார் 2,20,000 டன் மொத்த எடையுள்ள அந்தக் கப்பலில் தற்போது 18,300 மிகப்பெரிய சரக்கு பெட்டகங்கள் உள்ளன.
வேகமான காற்று மற்றும் மணல் புயலால் மறைக்கப்பட்ட பார்க்கும் திறன் ஆகியவற்றால் 400 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சூயஸ் கால்வாயில் செவ்வாயன்று தரைதட்டியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தன
ஆனால் இந்த கப்பல் தரை தட்டியதற்கு வானிலை முக்கியக் காரணமல்ல என்று சூயஸ் கால்வாய் ஆணையத்தின் ஜெனரல் ஒசாமா ரேபி தெரிவித்துள்ளார்.
"இது தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மனித பிழைகள் காரணமாக நடந்து இருக்கலாம். விசாரணையில் இதற்கான முழுமையான காரணம் தெரியவரும்," என்று கடந்த சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் என்ன விதமான தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மனித பிழைகள் என்பது தொடர்பான விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
சூயஸ் கால்வாய் உலக பொருளாதாரத்துக்கு ஏன் முக்கியமானது?
உலகளாவிய வர்த்தக சரக்குகளின் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது, இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாகவும் உள்ளது.
சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா - ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும்.
ஆனால் அதற்கு சுமார் இரண்டு வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும். அதற்கேற்ப எரிபொருள், உணவுக் கையிருப்பு ஆகியவையும் அதிகமாகும்.
2020ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19,000 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக சென்றன. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 51.5 கப்பல்கள் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் குறிப்பிடுகிறது.
2017ஆம் ஆண்டில், ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எகிப்திய அதிகாரிகள் இழுபறிப் படகுகளின் உதவியோடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அதை மிதக்க வைத்தனர்.
2017ஆம் ஆண்டில், ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எகிப்திய அதிகாரிகள் இழுபறிப் படகுகளின் உதவியோடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அதை மிதக்க வைத்தனர்.
சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலுக்கு இடையிலான ஒரு பகுதியான சூயஸ் இஸ்த்மஸை எகிப்தில் கடக்கிறது. இந்தக் கால்வாய் 193 கி.மீ (120 மைல்) நீளம் கொண்டது மற்றும் மூன்று இயற்கை ஏரிகளை உள்ளடக்கியது.
2015ஆம் ஆண்டில், எகிப்து அரசாங்கம் கால்வாயை விரிவாக்கம் செய்தது. இது பிரதான நீர்வழிப்பாதையை ஆழப்படுத்தியதுடன், அதற்கு இணையாக 35 கி.மீ (22 மைல்) தடத்தையும் கப்பல்களுக்கு வழங்கியது.
எவர் கிவன் கப்பல் பற்றிய முக்கியத் தகவல்கள்
செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (05:40 GMT) சுமார் 07:40 மணிக்கு நீர்வழியின் குறுக்கே மாட்டிக்கொண்டது.
20,000 கொள்கலன்களைக் கொண்டு செல்லும் திறன் இந்த கப்பலுக்கு உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தைவானை சேர்ந்த எவர் கிரீன் மரைன் எனும் நிறுவனத்தால் இயக்கப்படும் எவர் கிவன் கப்பல் ஜப்பானைச் சேர்ந்த ஷோயி கிசென் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமானது. 2018ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, பனாமாவில் இந்தக் கப்பல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஷோயி கிசென் நிறுவனத்தின் தலைவர் யுகிடோ ஹிகாகி இந்த கப்பல் சேதம் அடைந்ததாக தெரியவில்லை என்று வெள்ளிக்கிழமை என்று தெரிவித்தார்.
"இந்த கப்பலுக்குள் நீர் புகவில்லை. இது மீண்டும் மிதக்கத் தொடங்கும்போது வழக்கம்போல இயங்கும்," என்று அவர் தெரிவித்தார்.