Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நீண்ட வாள், வெள்ளிக்காசு, புகைப்போக்கி குழாய் - தோண்ட தோண்ட கிடைக்கும் பழந்தமிழர் பொருட்கள்!

நீண்ட வாள், வெள்ளிக்காசு, புகைப்போக்கி குழாய் - தோண்ட தோண்ட கிடைக்கும் பழந்தமிழர் பொருட்கள்!
, சனி, 31 ஜூலை 2021 (09:13 IST)
தமிழ்நாட்டின் பல இடங்களில் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை செய்துவருகிறது. நீண்ட வாள், வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என புதைந்துகிடந்த வரலாற்றின் எச்சங்கள் மாநிலத்தின் பல இடங்களிலிருந்தும் மேலெழ ஆரம்பித்துள்ளன.
webdunia
2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. ஆனால், கீழடி அகழாய்வை நடத்திவந்த இந்தியத் தொல்லியல் துறை, மூன்றாம் கட்ட அகழாய்வுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் வேறு அகழாய்வுகளை நடத்தவில்லை. நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகளையும் வெளியிடவில்லை.
webdunia
இதற்குப் பிறகு எழுந்த கோரிக்கைகளால், நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட அகழாய்வுகளை மாநிலத் தொல்லியல் துறையே நடத்தி முடித்தது. இதற்குப் பின் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வை நடத்த முடிவுசெய்தபோது, கீழடி மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல இடங்களிலும் அகழாய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவெடுத்தது.
 
கடந்த ஆண்டே கீழடி மட்டுமல்லாமல், அதன் அருகில் உள்ள சில ஊர்களிலும் அகழாய்வு நடத்தப்பட்டது. அதன்படி கீழடி தொகுப்பு (கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்), ஆதிச்சநல்லூர், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், கொடுமணல், மயிலாடும்பாறை ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் துவங்கிய அகழாய்வு கொரோனா ஊரடங்கு காரணமாக மே 10ஆம் தேதி நிறுத்தப்பட்டது.
webdunia
ஊரடங்கு காலகட்டம் முடிந்த பிறகு, ஜூன் மாத இறுதியில் இருந்து மீண்டும் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. மழைக் காலம் துவங்குவதற்கு முன்பாக அகழாய்வுப் பணிகள் நிறைவடைய வேண்டும் என்பதால் தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளன.
 
கீழடியைப் பொறுத்தவரை தொடர்ந்து தொல்லியல் பொருட்கள் கிடைத்துவரும் பகுதியாக இருந்து வருகிறது. 2019 -20ல் நடந்த அகழாய்வில் 25க்கும் மேற்பட்ட தாழிகள் உட்பட பல தொல்லியல் பொருட்களும் கலைப் பொருட்களும் கிடைத்தன.
 
இந்த முறை நடந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஓடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. இங்குள்ள தரைகள் செங்கல் கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரு கற்களை இணைக்க களிமண்ணும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
 
அகரம் தளத்தில் நடந்த அகழாய்வில் சில நாட்களுக்கு முன்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை கிடைத்தது. பத்து சென்டிமீட்டர் அலகமும் நான்கு சென்டிமீட்டர் உயரமும் கொண்ட அந்த பொம்மை எந்த விலங்கைக் குறிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் இதே அகரம் பகுதியில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரராயன் காசுகளும் கிடைத்தன.
webdunia
இந்த ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி, யானை தந்தம், சங்கு ஆகியவற்றால் ஆண அணிகலன்களும் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
 
ஆதிச்சநல்லூரில் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு நடத்திய புதைமேடு சுமார் 114 ஏக்கர் பரப்பளவுடையது. அந்தப் பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆய்வுகள் நடத்த அனுமதியில்லை. ஆகவே அதற்கு அருகில் உள்ள பகுதியில் ஆய்வு நடத்த மாநில தொல்லியல் துறை அனுமதி பெற்றுள்ளது.
webdunia
ஆதிச்சநல்லூர் புதைமேடு என்பது இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த பகுதி. இதற்கு அருகில் மக்கள் வசித்த இடமாக கருதக்கூடிய பகுதியில் ஆய்வை நடத்த தொல்லியல் துறை விரும்பியது. அதில் பெரும்பகுதியில் மத்திய கால ஏரி ஒன்று இருக்கிறது. ஆகவே அருகில் உள்ள கிராமத்தில் அகழாய்வு நடந்துவருகிறது.
 
இங்கு இரண்டு மீட்டர் ஆழத்தில் பல பானை ஓடுகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. ஆனால், அருகிலேயே ஏரி உள்ளதால், அகழாய்வுப் பள்ளங்களில் தெளிவாக பண்பாட்டு அடுக்குகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கிறது. ஆதிச்சநல்லூரில் வாள், வேறு சில இரும்புப் பொருட்கள் கிடைத்தாலும் அலெக்ஸாண்டர் ரீயின் ஆய்வில் கிடைத்த அளவுக்கு பொருட்கள் கிடைக்கவில்லை.
 
சிவகளை
ஆதிச்சநல்லூருக்கு அருகில் உள்ள சிவகளையும் ஈமத் தாழிகள் புதைக்கப்பட்ட இடம்தான். இதுவும் ஆதிச்சநல்லூரும் தொடக்க இரும்பு காலத்தை அதாவது கி.மு. 8 முதல் கி.மு. 9 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. ஆதிச்சநல்லூரையும் சிவகளையையும் ஒரே நிலப்பகுதியாகவும் கருத முடியும். இந்த சிவகளை புதைமேடு கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கருக்குப் பரந்து கிடக்கிறது. இந்த அளவுக்கு மிகப் பெரிய புதைமேடு இருக்கிறதென்றால், அதற்கு அருகில் உள்ள பராக்கிரமபாண்டிய புரம், மூலக்கரை போன்ற பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
சிவகளையில் சிவகளைப் பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்களில் 15க்கும் மேற்பட்ட ஆய்வுக் குழிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 5 தாழிகள் மூடியுடன் கண்டெடுக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இவை தவிர, நூல் நூற்க உதவும் தக்கிளி, புகைப்பான், கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், நடுகற்கள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
ஆதிச்சநல்லூரைப் போலவே இங்கும் மூன்று பண்பாட்டு அடுக்குகள் காணப்படுகிறன. இங்கு கிடைத்த ஈமத் தாழிகளில் கிடைத்த பொருட்களை ஓஎஸ்எல், டிஎல் டேட்டிங் செய்து பார்க்கும்போது ஒவ்வொரு பண்பாட்டு அடுக்கின் காலமும் தெளிவாகத் தெரியவருமெனத் தொல்லியல் துறை நம்புகிறது.
 
கொற்கை
பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக இருந்ததாகக் கருதப்படும் கொற்கையில் 1968ல் முதல்முதலாக ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை 1961ல் உருவாக்கப்பட்ட நிலையில் அந்தத் துறையின் சார்பில் முதல்முதலில் நடந்த அகழாய்வே இங்குதான் நடத்தப்பட்டது. இங்கு கிடைத்த பொருட்களை வைத்து, இந்த இடத்தின் காலம் என்பது கி.மு. 785 என கணிக்கப்பட்டிருக்கிறது. இடைச் சங்ககால பாண்டியர்களின் துறைமுக நகரமாக கொற்கை இருந்ததாகக் கருதப்படுகிறது.
 
இங்கு இப்போது நடத்தப்பட்டுவரும் அகழாய்வில், பல பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் கடந்த வாரம் துளையிடப்பட்ட குழாய்கள் ஒன்பது அடுக்குகளாகக் கிடைத்திருக்கின்றன. இதற்குள் உள்ள பொருட்களை ஆய்வுசெய்த பிறகு, இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியவரக்கூடும்.
 
கங்கை கொண்ட சோழபுரம்
கங்கை கண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரச் சோழனின் அரண்மனை அமைந்திருந்ததாகக் கருதப்படும் மாளிகை மேடு பகுதியில் தற்போது அகழாய்வு நடத்தப்பட்டுவருகிறது. இங்கு ஏற்கனவே நடந்த அகழாய்வில் சோழர் காலத்து அரண்மனையின் அடிப்பகுதியின் ஒரு பகுதி வெளிப்பட்டது. தற்போது, அரண்மனையின் அமைப்பைப் புரிந்துகொள்ளும் வகையில் ஏதாவது ஒரு பகுதியின் முழுமையையும் வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கு ஆங்கில எழுத்தான 'T' வடிவில் ஒரு பெரிய சுவர் கிடைத்துள்ளது.
 
மிகப் பெரிய ஆணிகளும் கிடைத்துள்ளன. "இந்த அளவுக்கு ஆணி பெரிதாக இருக்கிறதென்றால், அங்கு இருந்திருக்கக்கூடிய கதவு போன்ற மரப் பொருட்களின் உயரத்தையும் அகலத்தையும் புரிந்துகொள்ளலாம்" என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குனரான ஆர். சிவானந்தம். இங்குள்ள அரண்மனை இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
 
இந்த மாளிகை சுமார் ஒன்றரைக் கி.மீ. பரப்பளவுக்கு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த மாளிகையின் மதில் சுவர் காணப்படுகிறது. ஏற்கனவே 2008ல் இங்கு நடந்த அகழாய்வில் இந்த மதில் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர, கொக்கிகள், சீன நாட்டுப் பானை ஓடுகள் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. டெரகோட்டா உருவங்களும் கிடைத்திருக்கின்றன.
 
கொடுமணல்
கொடுமணல் அகழாய்வைப் பொறுத்தவரை, இங்கு பல முறை தஞ்சாவூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், இந்தியத் தொல்லியல் துறை, மாநிலத் தொல்லியல் துறை போன்றவை அகழாய்வுகளைச் செய்திருக்கின்றன. சுமார் 12 முறை இங்கு அகழாய்வு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு இதுவரை கிடைத்துள்ள பொருட்கள் எல்லாமே ஒரே காலகட்டத்தைச் சுட்டிக்காட்டுபவையாகவே இருக்கின்றன.
 
இங்கு இரண்டு விதமான தலங்கள் இருக்கின்றன. ஒன்று ஈமத் தலம். மற்றொன்று தொழில் நடைபெற்ற இடம். இங்கு பெரும்பாலும் மணிகள் செய்யப்பட்ட இடங்கள் அதிகம் கிடைத்திருக்கின்றன. இங்கு மணிகள் அறுக்கும் தொழிற்சாலைகளுக்கான உலைகள், காசுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. ஒரு கிணறும் அதற்கு அருகில் இரண்டு பக்கமும் படிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தைப் பொறுத்தவரை கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார் சிவானந்தம்.
 
மயிலாடும்பாறை
 
கிருஷ்ணகிரியில் உள்ள மயிலாடும்பாறையைப் பொறுத்தவரை, அந்தப் பகுதி புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அடுத்ததாகப் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்களும் இங்கு கிடைத்துள்ளன. குறிப்பாக மிக நீளமான வாள் ஒன்று கிடைத்துள்ளது. இங்கு கிடைத்துள்ள பானைகள் பெரும்பாலும் சக்கரங்களைக் கொண்டு வனையாமல், கையால் வனையப்பட்டவையாக உள்ளன.
 
இந்த அகழாய்வு முடிந்த பிறகு, ஏற்கனவே நடந்த அகழாய்வின் முடிவுகளை வெளியிடுவதோடு, தொடர்ச்சியாக இடங்களைக் கண்டறிந்து அகழாய்வு நடத்த முடிவுசெய்திருப்பதாக மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அங்காடிகளுக்கு ஆப்பு - 10 நாட்களுக்கு தடை!!