Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மேன் Vs வைல்ட்: ரஜினியின் சாகசம் எப்படியிருந்தது?

மேன் Vs வைல்ட்: ரஜினியின் சாகசம் எப்படியிருந்தது?
, செவ்வாய், 24 மார்ச் 2020 (10:42 IST)
டிஸ்கவரி சேனலில் மேன் VS வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினி செய்த சாகசங்களைவிட, அவருடைய நிஜமான சில தருணங்களும் அவருடைய கருத்துகளும் வெளிப்பட்டதே ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமளித்திருக்கும். டிஸ்கவரி சேனலில் வெளியான மேன் Vs வைல்ட் என்ற ரியாலிட்டி ஷோ உலகின் மிகப் பிரபலமான டிவி தொடர்களில் ஒன்று.

அதன் அடிப்படை இதுதான்: நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பியர் கிரில்ஸ் ஏதாவது ஒரு வனாந்திரத்தில் தனது குழுவினருடன் சிக்கிக்கொள்வார்; அது பாலைவனமாகவோ, அடர்ந்த காடாகவோ, மலையாகவோ, சில சமயங்களில் கைவிடப்பட்ட தொழிற்சாலை பிரதேசமாகவோ இருக்கும். அங்கு உள்ள அபாயங்களை அவர் சமாளித்து எப்படி மீண்டும் மனிதர்கள் வாழும் பிரதேசத்திற்கு வருகிறார் என்பதுதான் இந்தத் தொடரின் மையமான அம்சம்.

பியர் க்ரில்ஸ் என்பிசி, நாட் ஜியோ தொலைக்காட்சிகளில் 'ரன்னிங் வைல்ட்' என்ற நிகழ்ச்சி ஒன்றைச் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களுடன் சாகசத்தில் ஈடுபடுவார். இந்த 'ரன்னிங் வைல்ட்' நிகழ்ச்சியில்தான் ஹாலிவுட் நட்சத்திரங்கள், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்க, மீண்டும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை நடத்தினார் பியர் க்ரில்ஸ். பொதுவாக இம்மாதிரி பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில், சாகசங்கள் அதிகம் இருக்காது. அந்த பிரபலங்கள் தங்களைப் பற்றியும் பல்வேறு விஷயங்கள் குறித்த தங்களுடைய பார்வை என்ன என்பதையும் பகிர்ந்துகொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள், பியர் க்ரில்ஸின் தப்பிப் பிழைக்கும் திறன் குறித்து அறிவதைவிட, பங்கேற்கும் பிரபலங்கள் குறித்தே அதிகம் அறிந்துகொள்வார்கள். பிரதமர் மோதி கலந்துகொண்ட நிகழ்ச்சியும் அப்படித்தான் அமைந்தது. ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியும் அதே மாதிரிதான் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் ரஜினிகாந்த்.

webdunia

கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. சம்பிரதாய அறிமுகங்கள் முடிந்த பிறகு, பியர் க்ரில்ஸும் ரஜினியும் பேசியபடி நடக்க ஆரம்பிக்க, தன்னைப் பற்றி சொல்கிறார் ரஜினிகாந்த். தன்னுடைய உண்மைப் பெயர், பாலச்சந்தரைச் சந்தித்த பிறகு அவருடைய வாழ்க்கை எப்படி மாறியது என்று விளக்கினார் ரஜினி. சிறிது நேரம் என்றாலும், மிக ஆத்மார்த்தமாகப் பேசினார் ரஜினி.

பிறகு, க்ரில்ஸும் ரஜினியும் ஒரு கைவிடப்பட்ட இரும்புப் பாலத்தை அடைகிறார்கள். ஒரு வறண்டுபோன ஆற்றின் மேலே ஐம்பதடி உயரத்தில் அமைந்திருந்த அந்தப் பாலத்தின் தரைப்பகுதி உடைந்து போயிருக்க, எஞ்சியிருந்த பக்கவாட்டு கம்பிகளைப் பிடித்தபடி அந்த ஆற்றைக் கடக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க்.
முதலில் சற்றுத் தயங்கும் ரஜினி, பிறகு பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு வெற்றிகரமாகக் கடந்துவிடுகிறார். இதற்குப் பிறகு காட்டில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் ஜீப்பில் ஏறி இருவரும் பயணிக்கிறார்கள். பயணத்தின்போது, மோதியுடன் நடத்தப்பட்ட முந்தைய நிகழ்ச்சியைக் குறிப்பிடும் ரஜினி, அவரிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன என்று கேட்க, க்ரில்ஸ் "மோதியின் நகைச்சுவை உணர்ச்சி" பிடித்திருந்தது என்றார். தான் சிறு வயதில் காடுகளில் அதிகம் திரிந்ததாக மோடி கூறியதையும் நினைவுகூர்ந்தார்.

இதற்குப் பிறகு, ஒரு ஓரமாக ஜீப்பை நிறுத்திவிட்டு தூரத்தில் தெரிந்த தண்ணீரை சேகரிக்க இருவரும் ஆயத்தமானார். முதலில் ரஜினி தயங்க, வழக்கம்போல பாதுகாப்புக் கம்பி மாட்டி பள்ளத்தில் இறக்கினார் க்ரில்ஸ். இந்த சாகசத்தில் ரஜினிக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டன.
webdunia

இதிலேயே அசந்துபோன ரஜினி, நிகழ்ச்சியின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம் போலிருக்கிறதே என்றார். ஆனால், அதற்குள் ஜீப்பின் டயர் பஞ்சராகிவிட்டது. பிறகு டயரை மாற்றிக்கொண்டு மற்றொரு குளத்தை அடைந்தார்கள் இருவரும். அங்கே முதலைகள்கூட இருக்கலாம் என ரஜினிக்கு சற்று பீதியை ஏற்படுத்தினார் க்ரில்ஸ்.

பிறகு அந்த குளத்தின் நடுவில் பொறுத்தப்பட்டிருந்த ஒரு கேமராவை எடுக்க இருவரும் தண்ணீரில் இறங்கி சென்றனர். கேமராவை எடுத்துப் பார்த்தால், அதில் புலி ஒன்று தண்ணீர் குடித்தது பதிவாகியிருந்தது. இத்தோடு இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

இந்தப் பயணத்தின் நடுநடுவே, இந்தியா முழுவதும் நிலவும் தண்ணீர் பிரச்சனைகள் குறித்து புள்ளிவிவரங்களோடு பேசினார் ரஜினி. அவ்வப்போது சில தத்துவங்களையும் சொன்னார்.

70 வயதாகிவிட்ட ரஜினி, சிறிது தூரம் நடப்பதற்கே மூச்சு வாங்குவதைப் பார்க்க முடிந்தது. இருந்தபோதும் மிகுந்த உற்சாகத்துடனும் நகைச்சுவை உணர்ச்சியுடனும் பேசியபடி வந்தது, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியது. பல இடங்களில், தான் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என நினைக்கவே இல்லை என்று குறிப்பிட்டார். அவர் திரும்பத் திரும்ப இதைச் சொன்னதால் உண்மையிலேயே அவர் அப்படித்தான் நினைத்ததைப் போல இருந்தது.
பொதுவாக பியர் க்ரில்ஸின் ரசிகர்களுக்கு இருக்கும் சந்தேகம் ஒன்றை இந்த நிகழ்ச்சியில் கேட்டார் ரஜினி. "எப்படி இந்த பூச்சியெல்லாம் திங்கிறீங்க, ஏதும் அலர்ஜி வந்துறாதா?" என்றார். இதற்குப் பதிலளித்த பியர் க்ரில்ஸ், தன் வீட்டிற்கு யாரும் சாப்பிடவே வரமாட்டார்கள் என்று ஜோக்கடித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் ரஜினி பேசிய முத்தாய்ப்பான கருத்து, அவரது மனதைப் பிரதிபலிப்பதாக இருந்தது. "இந்தியாவில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை இருக்கின்றன. கலாச்சார ரீதியில் பணக்கார நாடான இந்தியா பொருளாதார ரீதியிலும் பணக்கார நாடாக வேண்டமும். இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் இருக்கிறார்கள். மற்ற மதங்களுக்கெல்லாம் பல நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்து மத்திற்கு இந்தியாவும் குட்டி நாடான நேபாளமும்தான் இருக்கிறது. இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்கிறோம்" என்றார்.

பிரதமர் மோதி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், அவர் பிரதமராகவே தென்பட்டார். இந்த நிகழ்ச்சியில் ரஜினி தன் சூப்பர் ஸ்டார் இமேஜை விட்டுவிட்டு, சற்றே தடுமாறும் சாகசங்களை சற்று தயக்கத்தோடு பார்க்கும் இயல்பான மனிதராக வெளிப்பட்டார். ஆனால், ரஜினியைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் ஏதும் இந்த நிகழ்ச்சியிலிருந்து ரசிகர்களுக்குக் கிடைத்திருக்காது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சும்மா சும்மா முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் பாட்ஷா! – மீண்டும் கைது!