Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது?

குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது?
, திங்கள், 6 டிசம்பர் 2021 (10:18 IST)
அதிகரித்து வரும் கருத்தரிப்பு பிரச்னைகள், குழந்தையின்மை - தாமதமான குழந்தை போன்றவற்றால் உருவாகும் சிக்கல்கள் வடிவமாற்றங்கள் அடைந்துகொண்டு இருக்கின்றன என்பதை கடந்த வாரம் வெளியான ஒரு குற்றச் செய்தி ஒன்றின் மூலம் கவனத்துக்கு வந்துள்ளது.
 
சென்னை புழலுக்கு அருகேயுள்ள காவாங்கரையைச் சேர்ந்தவர் யாஸ்மின். திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ள யாஸ்மின் இரண்டாவதாக கர்ப்பமடைய, அவருடைய கணவர் யாஸ்மினை விட்டுப்பிரிந்துள்ளார். குழந்தை பிறந்து சில நாட்கள் ஆன நிலையில், ஆட்டோவில் வந்தபோது தன்னுடைய பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகவும், குழந்தையையும் காணவில்லை எனவும், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் யாஸ்மின்.
webdunia
விசாரணையில், பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என்பதும், இரண்டாவதாக பிறந்த குழந்தையை விற்று யாஸ்மின் பணம் பெற்றதும், தனக்குக் கிடைத்த பணத்தில் வீட்டு வாடகை பாக்கியை செலுத்தியுள்ளார் என்பதும், குழந்தை தனக்கே மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் தெரியவந்தது; பின்னர் யாஸ்மின் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மூலம் குழந்தைகள் விற்பனை தொழில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 
"வலைப்பின்னல் போல செயல்படுகிறது"
கருத்தரித்தலுக்காக ஆரோக்கியமான கருமுட்டைகளை சாமானியர்களிடமிருந்து பெற்று சந்தைப்படுத்தும் 'இடைத்தரகராக' செயல்படுவர் ஜெயகீதா. கருவைக் கலைக்க முடிவுசெய்திருந்த யாஸ்மினுக்கு, குழந்தையை பெற்று, பின்னர் விற்று விடலாம் என யோசனை அளித்துள்ளார் ஜெயகீதா.
 
ஜெயகீதாவின் ஏற்பாட்டில் ஏற்கெனவே இருமுறை தன்னுடைய கருமுட்டைகளை தானம் செய்துள்ளார் யாஸ்மின். இந்த முன் அறிமுகத்தால், குழந்தையை விற்கும் முயற்சிக்கு சம்மதித்த யாஸ்மின் நவ. 21-ம் தேதி அவருக்குப் பிறந்த ஆண் குழந்தையை நவ.25-ம் தேதி ஜெயகீதா மூலம் ரூ.3.5 லட்சத்துக்கு விற்றுள்ளார். அந்த பணம் தான் ஆட்டோவில் செல்லும்போது திருடப்பட்டுவிட்டதாக புகார் அளித்துள்ளார் யாஸ்மின்.
 
யாஸ்மின் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த வேப்பேரி காவல் ஆய்வாளர் கண்ணன் பிபி தமிழிடம் கூறுகையில், "கடந்த 27-ம் தேதி யாஸ்மின் எங்களுக்குப் புகார் அளித்தார். கணவர் பிரிந்து சென்றதால் இன்னொரு குழந்தையை வளர்ப்பதற்கு வழியில்லை என்பதை புகாரிலேயே அவர் ஒப்புக்கொண்டார். 5 மாத கர்ப்பம் என்பதால், கருவைக் கலைக்க மருத்துவமனையில் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், ஜெயகீதா யோசனையின்படி குழந்தையை விற்றுள்ளார். குழந்தையை ரூ.3.5 லட்சத்துக்கு வாங்கிய, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வேலை செய்துவந்த சிவக்குமார், குழந்தையை விலைக்கு வாங்கிக் கொடுத்த, அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆரோக்கிய மேரி, இடைத்தரகர்கள் ஜெயகீதா, தனலட்சுமி, குழந்தையின் தாய் யாஸ்மின் என இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரும்பாக்கம் சுரபி இல்லத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாய் யாஸ்மினுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன" என தெரிவித்தார்.
 
ஒற்றைத் தாய்மார்களும், குழந்தை வியாபாரமும்
webdunia
ஒற்றைத்தாயாக இருப்பவர்களுக்கு அரசின் திட்டங்கள் செல்ல வேண்டும் என்றால், முதலில் அவர்கள் ஒற்றை பெற்றோர் என்பதை நிரூபிக்க வேண்டும். காதல் திருமணமாக இருந்தால், பெரும்பாலும் எந்த ஆவணங்களும் இருக்காது. ஒற்றை பெற்றோருக்கான நிதியுதவித் திட்டங்களைப் பெறுவதில், அரசு அமைப்புகளில் நிறைய ஊழல்களும் உள்ளன. அவ்வளவு எளிதில் நிதியுதவியைப் பெற முடியாது. அத்தகைய பெண்களுக்கு ஏதேனும் அமைப்பின் உதவி இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
 
குழந்தையை தனியே விட்டுவிட்டு வேலைக்கு செல்ல முடிவதில்லை. பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்னைகள் மூலமாக பாதிக்கப்படும் பெண்களுக்கு தங்க வசதி ஏற்படுத்திக்கொடுப்பது, உணவு, குடிநீர், படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றுக்காக, அரசின் சார்பாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் 'ஒன் ஸ்டாப் சென்டர்' போன்ற மையங்கள் குறித்த அடிப்படை தகவல்கள் கூட பலருக்கும் தெரிவதில்லை. இந்த விழிப்புணர்வின்மையும், அறியாமையுமே ஒற்றைத்தாய்மார்களின் பிரச்னையின் அடித்தளம்.
 
"சமூக ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் நலிவடைந்த ஒற்றைத் தாய்மார்கள், இடைத்தரகர்களின் தவறான இலக்குகளுக்கு ஆளாகுகின்றனர். கொரோனா ஊரடங்குக்குப் பிறகான பெண்களின் வாழ்வாதாரம் என்பது பெரிய கேள்விக்குறியாகிவிட்டது. குறிப்பாக, அமைப்புசாரா பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்வாதாரம் என்பதே இல்லை. இதனால், குழந்தையை விற்பது போன்ற தவறான இலக்குகளுக்கு ஆளாகின்றனர். காதல் திருமணம் செய்திருந்தால், கணவர் கைவிடும்போது பெரும்பாலான நிகழ்வுகளில் அப்பெண்கள் மீண்டும் தங்கள் பெற்றோரிடமும் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதில்லை. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும் இதே சூழல்தான். கல்வியறிவுள்ள ஒற்றைத்தாய் என்றால் கூட இதனை சமாளித்துவிடுவார்கள். ஆனால், அதுகுறித்த கல்வியறிவு இல்லாதவர்கள், பொருளாதார பலம் இல்லாதவர்கள் இத்தகைய சூழல்களில் சிக்கிவிடுகின்றனர். இத்தகைய பெண்களை ஏமாற்றினால் யாருக்கும் தெரியாது என குழந்தைகளை விற்கும் கும்பல் கருதுகிறது" என்கிறார் 'தமிழ்நாடு வுமன் கலெக்டிவ்' அமைப்பின் நிறுவனர் ஷூலு பிரான்சிஸ்.
 
குழந்தையை பராமரிக்க முடியாமல் கைவிடும் ஒற்றைத் தாய்மார்கள் குறித்த சிக்கலின் வடிவம் ஒருபுறம் என்றால், குழந்தையின்மையால் வளர்ப்புக் குழந்தைகளை நோக்கி நகர்வோரின் சிக்கல் மறுபுறம் நிற்கிறது.
webdunia
குழந்தையை தத்தெடுப்பதற்கான சட்டபூர்வ வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு சாதாரண மக்களை சென்றடையவில்லை என்கிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் 'தோழமை' அமைப்பின் இயக்குநர் தேவநேயன்.
 
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தனக்கு ஒரு குழந்தை வேண்டாம் என்றால், எங்கு அந்த குழந்தையைக் கொடுக்க வேண்டும், முறையாக குழந்தையை தத்துக் கொடுப்பது எப்படி என்ற புரிதல் இல்லாததுதான் குற்றங்கள் நடப்பதற்கான காரணம். தொட்டில் குழந்தைத் திட்டம் உள்ளிட்ட நலிவடைந்த குழந்தைகளை வளர்ப்பதற்கான அரசின் திட்டங்கள், அரவணைப்புப் பெற்றோர் (Foster care) குறித்துத் தெரிவதில்லை. குழந்தைகள் நல ஆணையம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு குறித்து, சாதாரண மக்களுக்குத் தெரியாது. சாமானிய மக்களுக்கு தத்தெடுப்பது குறித்து விரிவான பிரசாரம் செய்யப்படவில்லை. 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தெல்லாம் தத்தெடுப்பு நிகழ்கிறது. இப்படியிருக்கையில், தத்தெடுப்பது என்றால் என்னவென்பதே தெரிவதில்லை. வழக்கறிஞர் முன்னிலையில் 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டால் போதும் என்பதுதான் புரிதல். சட்டப்பூர்வமாக தத்தெடுப்பது எளிமைப்படுத்தப்படவில்லை."
 
"நாமக்கல் மாவட்டத்தில் 2019-ல், நூற்றுக்கணக்கான மலைவாழ் குழந்தைகள் சட்டத்துக்குப் புறம்பாக தத்து கொடுக்கப்பட்டனர். அதில், 100 ரூபாய் பத்திரத்தில் சாட்சிக் கையெழுத்திட்ட வழக்கறிஞர்களும் சிக்கினர். அடுத்தடுத்து பெண் குழந்தை பிறந்தாலோ, அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களாக இருந்தாலோ அவர்களை மூளைச்சலவை செய்வதற்கான கும்பல் இருக்கிறது. படித்தவர்களே குழந்தைகளை தவறான முறையில் தத்தெடுக்கின்றனர்" என பதிவுசெய்தார்.
 
குழந்தையை பணத்துக்காக விற்பதோ, வாங்குவதோ தண்டனைக்குரிய குற்றம். சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ன்படி, சட்டத்துக்குப் புறம்பாக குழந்தையை தத்தெடுப்பது தண்டனைக்குரியது. அதில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அல்லது ஒரு லட்சம் அபராதமும் அல்லது இரண்டும் தண்டனையாக கிடைக்கும்.
 
குழந்தைகளை வளர்க்க முடியாத சூழலில் என்ன செய்ய வேண்டும்
ஆதரவற்ற பெண்கள் தங்களால் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை பிபிசிக்கு விளக்கினார், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார்.
 
"ஒரு பெற்றோரால் குழந்தையை வளர்க்க முடியவில்லை என்றால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (District Child Protection Unit) அக்குழந்தையை ஒப்படைக்க வேண்டும். இந்த அலகு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான 12 பேர் கொண்ட அலுவலகம் அது. பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும். அப்படியில்லையென்றல் தனியாக அலுவலகத்தில் இயங்கும். குழந்தை விற்பனை தொடர்பான சம்பவங்கள் நடைபெற்ற உடனேயே இங்குள்ள அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையை மீட்பார்கள். இந்த அலகுகள் சிறப்பாக செயல்படுகின்றன. குழந்தைகளுக்கு எதிரான பலவித குற்றங்களை தடுப்பதற்காக இந்த அலகுகள் செயல்படுகின்றன. குழந்தைகள் தொடர்பான அனைத்து உதவிகளுக்கும் 1098 என்ற உதவி எண்ணுக்கு அழைக்கலாம். குழந்தையை ஒப்படைக்க மனமில்லாமல், குழந்தையை வைத்துக்கொள்ள விரும்பும் பொருளாதார நலிவடைந்த பெற்றோர், மாவட்ட அலகுக்குத் தெரிவித்தால், அவர்கள் அரசுசாரா நிறுவனங்கள் மூலம் உதவி பெற்றுக் கொடுப்பார்கள். அவர்கள் மூலம் அக்குழந்தைக்கு நிதியுதவி கிடைக்க வழிவகை செய்யலாம்.
 
ஆனால், நேரடியாக அப்பெற்றோருக்கு அரசு நிதியுதவி வழங்கும் வகையிலான திட்டம் இல்லை" என்றார் சரண்யா ஜெயக்குமார்.
 
தத்தெடுத்தல்: சட்டமும், நடைமுறைகளும்
உலகம் முழுவதும் சட்டப்பூர்வமான தத்தெடுப்புகள் இப்போது அதிகரித்து வருகின்றன. புகழ்பெற்ற பிரபலங்களே அதிகாரப்பூர்வமாக தத்தெடுப்பு மூலம் தங்களை பெற்றோர்களாக்கிக் கொள்ளும் அறிவிப்புகள் பலரது கவனத்தையும் ஈர்க்கின்றன. ஆனால், சாமானியர்களுக்கு அதுகுறித்த அறிதல் இன்றும் குறைவாகவே உள்ளது. சட்டப்பூர்வ தத்தெடுப்பில் ஈடுபட முக்கியமானது அதற்கான கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அறிந்து வைத்திருத்தல்.
 
"ஒற்றை பெண் எந்த பாலின குழந்தைகளையும் தத்தெடுக்க முடியும். ஆனால், ஆண்கள் தத்தெடுக்க விரும்பினால், ஆண் குழந்தை மட்டுமே கிடைக்கும்.
 
குழந்தையை சட்டப்பூர்வமாக தத்தெடுப்பது அதிக காலம் எடுக்கும். ஏனென்றால், குழந்தையை தத்தெடுக்க விரும்புவோர் அதிகமாக இருக்கின்றனர், ஆனால், குழந்தைகள் குறைவாகவே இருக்கின்றனர். தத்தெடுக்க விரும்புவோர் திருமணமாகி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும். 4 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தையை தத்தெடுக்க விரும்பினால், கணவன் - மனைவியின் வயதின் மொத்தம் 90-ஐ தாண்டக்கூடாது.4-8 வயதுள்ள குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினால், 100-ஐ தாண்டக்கூடாது. 8-18 வயதுள்ள குழந்தை என்றால், 110-ஐ தாண்டக்கூடாது. தம்பதிக்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் இருந்தால், குழந்தையை தத்தெடுக்க முடியாது. ஆனால், 3 குழந்தைகளும் சிறப்பு குழந்தைகளாக இருந்தால் தத்தெடுக்க முடியும்.
 
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பதன் அடிப்படையில்தான் இது நடைபெறும். பின்னணி விசாரணை யாருக்கு விரைவில் முடிகிறதோ அவர்களுக்குக் குழந்தை கிடைக்கும்" என தத்தெடுப்புக்கான முக்கியமான கட்டுப்பாடு விதிகளை விளக்கினார் சரண்யா ஜெயக்குமார்.
 
"பணம் கொடுத்து குழந்தையை வாங்கி, இரண்டு, மூன்று ஆண்டுகள் வளர்த்தபின்னர், குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தால், அவர்கள் மீண்டும் குழந்தையை வளர்க்கவே முடியாது. பின்னர், அழுதுபுரண்டாலும் குழந்தை அவர்களுக்குக் கிடைக்காது. வளர்க்க முடியாமல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் விடப்படும் குழந்தைகள், (Surrendered Children) ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் என அழைக்கப்படுவர். அக்குழந்தைகள் தத்தெடுப்பு இல்லத்தில் (Adoption Home) வளர்க்கப்படுவர். பின்னர், அக்குழந்தையின் புகைப்படத்தை தத்தெடுப்பதற்காக வெளியிடுவர். பின்னர் காரா (CARA - Central adoption resource Agency) மூலமாக, யார் தத்தெடுக்க விரும்புகிறார்களோ, அப்பெற்றோரிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்படும். ஒப்படைக்கப்படும் குழந்தைகளில், குழந்தையின் உறவினர்கள் யாராவது (foster Care) வந்து நாங்கள் தத்தெடுக்க விரும்பவில்லை, ஆனால், குழந்தையை வளர்க்கவும், பராமரிக்கவும் விரும்புகிறோம் எனக்கூறினால், அரசு அந்த குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.2,000 நிதியுதவி வழங்குகிறது."
 
"இதன்மூலம், அக்குழந்தைக்கு குடும்ப சூழல் கிடைக்கும். cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துதான் குழந்தையை தத்தெடுக்க முடியும். அதிகாரிகள், தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் இல்லத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்வர். ஏற்கெனவே இவர்களுக்குக் குழந்தை இருக்கிறதா, அவர்கள் எந்த பாலின குழந்தையைக் கேட்கிறார்கள், ஏன் கேட்கிறார்கள், உடல் - மன - பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்களா, குற்றப்பின்னணி இருக்கிறதா என எல்லா தரப்பு காரணிகளையும் ஆய்வு செய்து அவர்கள் குழந்தையை வளர்க்கத் தகுதியானவர்கள் தான் என சான்று அளிப்பார்கள். பின்னர் அவர்களுக்கு 3 குழந்தைகள் வரை பார்க்க அனுமதியளிப்பார்கள். குழந்தையை தேர்ந்தெடுத்தப் பின்னர் நீதிமன்றம் வாயிலாகத்தான் குழந்தையை தத்தெடுக்க முடியும். தத்தெடுத்த குழந்தைகளை நன்றாக வளர்க்கிறார்களா என்பதை நீதிமன்றம் ஒரு சில வருடங்களுக்குக் கண்காணிக்கும். மற்றொரு வழியாக, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் Hindu adoption maintainance Act (HAMA) என்று உண்டு. இரு இந்து குடும்பங்கள் இருந்து, ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தையை மற்றொரு இந்து குடும்பம் தத்தெடுக்க விரும்பினால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு சென்று 'ஹாமா'மூலமாக குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறோம் எனக்கூறி நடைமுறைகளைப் பின்பற்றி குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும்" என்கிறார் சரண்யா ஜெயக்குமார்.
 
தேவைப்படும் முன்னெடுப்புகள்
"சமூக அழுத்தமே சட்டத்துக்குப் புறம்பாக, குழந்தையை தத்தெடுப்பதற்கு சமூக அழுத்தம் காரணமாக இருக்கின்றன. குழந்தை இல்லையென்றால் திருமணமான முதல் வருடம் கூட விட்டுவிடுவார்கள். அதன்பின்னர், குறிப்பாக பெண்களைப் பார்த்து 'ஒரு புள்ளப்பூச்சி இல்லையா' என ஒதுக்கும் நிலையே சமூகத்தில் நிலவுகிறது. பொருளாதார வசதி கொண்டவர்கள், செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வார்கள்.
 
இத்தகைய சமூக நெருக்கடிகள் காரணமாக, பொருளாதார பலம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? தமிழகத்தில் சென்னை கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் மட்டும்தான் செயற்கை கருவூட்டல் மையம் இருக்கிறது. ஆனால், தனியார் மையங்களே அதிகம் உள்ளன. செயற்கை கருவூட்டலுக்கு என, வங்கிக்கடன் அளிப்பதெல்லாம் உள்ளது. பொருளாதார வசதியின்றி குழந்தை இல்லாமல் இருப்பவர்களை திசைதிருப்பி, மூளைச்சலவை செய்வதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது. அதைப்பற்றி நாம் பேசுவதேயில்லை. அரசின் கரம் இவர்களை களையெடுப்பதை நோக்கி நீளவேண்டும். இதற்கான சிறப்பு முன்னெடுப்புகள் அவசியமாகின்றன" என்கிறார் தேவநேயன்.
 
"கிராமப்புற பெண்கள் என்றால் 100 நாள் வேலைத்திட்டம் இருக்கிறது. அதன்மூலம், ஒற்றைத் தாய்மார்களுக்கு வேலை கிடைப்பதை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
 
நகர்ப்புறங்களில் வீட்டு வேலை உள்ளிட்ட அமைப்புசாரா வேலைகள் உள்ளன. ஆனால், அதில் பணிப்பாதுகாப்பு என்பது இல்லை. எனவே, நகர்ப்புறங்களிலும், பணிப்பாதுகாப்புடன் வேலை கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இதற்காக, தனியே குழு அமைத்து, அதில் மகளிர் நல அமைப்புகளை இணைக்க வேண்டும். ஒற்றைத் தாய்மார்களுக்கான வேலைவாய்ப்பை எளிமைப்படுத்தினாலே இத்தகைய குற்றங்களை களைய முடியும். ஒற்றைத்தாய்மார்கள் தங்கள் சுயாதினத்தை இழந்துவிடாமல் வாழ்வதற்கான நம்பிக்கையை அதிரிக்க 'ஒன் ஸ்டாப் சென்டர்'கள் குறித்த முறையான விழிப்புணர்வை முறையாக பராமரிக்க வேண்டும். அங்கு, கல்வி, வேலைவாய்ப்பு, கவுன்சிலிங் என எல்லாவற்றையும் வழங்க வேண்டும் " என்கிறார் ஷீலு.
 
"தத்தெடுப்பதற்கான வழிமுறைகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. இணையத்தில் அதனை பதிவு செய்ய வேண்டும். நீண்ட காலம் எடுக்கிறது. இதனை எளிமைப்படுத்த வேண்டும்.
 
2012-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தின்கீழ், கிராமக் குழந்தைகள் பாதுகாப்பு குழு உருவாக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டு, நிதி ஒதுக்கினர். பஞ்சாயத்துத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரை உள்ளடக்கிய இக்குழு, ஆண்டுக்கு 3 முறை கூட்டம் கூடி அந்த ஊரில் உள்ள குழந்தைகளின் நிலை குறித்து ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இதன்மூலம் , அந்த ஊரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை அறிய முடியும். மேலும், அந்த கூட்டங்களில் குழந்தைகளுக்கான திட்டங்கள் என்ன என்பதும் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
 
குழந்தைகளுக்கு ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அதனை பேசுவதை விட, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அரசு அமைப்புகள் ஈடுபட வேண்டும். குழந்தை நேயர் கிராமங்கள் உருவாக வேண்டும்" என்றார் தேவநேயன்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுட்டுக்கொள்ளப்பட்ட அப்பாவிகள்: பதற்றத்தை குறைக்க ஊரடங்கு!