அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாகவுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலுள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம், அசாமில் உள்ள ரங்கபாரா மற்றும் சிப்சாகர், கேரளாவில் உள்ள குட்டநாடு மற்றும் சாவாரா, மேற்கு வங்கத்தில் உள்ள ஃபாலகட்டா ஆகிய ஏழு தொகுதிகளும் தற்போது காலியாக உள்ளன.
தற்போதைய சூழலில் மேற்கண்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது சிரமமானது என்று அந்த மாநிலத்தின் தலைமைச் செயலர்கள் மற்றும் தலைமை தேர்தல் அலுவலர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் காலியான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மாநில அரசுகளின் உள்ளீடுகளை பெற்ற பின்பும் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன், திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி. சாமி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் மரணம் அடைந்தனர். கடந்த ஜூன் மாதம் சேப்பா்கம்- திருவல்லிகேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
மேலும், கடந்த மாதம் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரும் கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சிகிச்சையின்போது உயிரிழந்தார். இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 28, நவம்பர் 3,7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக பிஹார் மாநில சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் மாநில தேர்தல் அதிகாரி, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மேலும் மோசம் அடைந்து வருவதாகக் குறிப்பிட்டு தேர்தலை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை நிலவவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இது தொடர்பாக காணொளி வாலியாக தேர்தல் ஆணைய உயரதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தின்போதும் விளக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய உயரதிகாரியிடம் கேட்டபோது, தற்போதைய முடிவு தற்காலிகமானதுதான் என்றும் மாநிலத்தில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து காலியாகவுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அறிவிப்பை ஆணையம் விரைவில் வெளியிடும் என்று தெரிவித்தார்.