Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

உலகின் மிகவும் பழைமையான குடும்ப அமைப்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

உலகின் மிகவும் பழைமையான குடும்ப அமைப்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
, சனி, 25 டிசம்பர் 2021 (17:39 IST)
இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட்ஸில் உள்ள 5,700 ஆண்டுகள் பழைமையான கல்லறையில் புதைக்கப்பட்ட மனித எலும்புகளில் இருந்து, உலகின் பழைமையான மரபுவழி குடும்ப மரத்தை விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர்.
 
கல்லறையில் இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வு மூலம், அங்குப் புதைக்கப்பட்டவர்கள் ஒரு பெரிய குடும்பத்தின் ஐந்து தொடர்ச்சியான தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. கல்லறையில் காணப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஒரே ஆணுடன் குழந்தைகளைப் பெற்ற நான்கு பெண்களின் வழிவழியாக வந்தவர்கள்.
 
அந்த கல்லறையைப் பயன்படுத்துவதற்கான உரிமை ஒரு மனிதனின் வம்சாவளியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அங்குப் புதைக்கப்பட்ட மக்கள் அவர்களுடைய வம்சாவளியில் இருந்து வந்த முதல் தலைமுறையில் எந்தத் தாயின் வழியாக வந்தவர்கள் என்பதன் அடிப்படையில், வெவ்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளனர்.
 
இது, இந்தச் சமூகத்தின் நினைவுகளில் முதல் தலைமுறை பெண்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பிடித்துள்ளார்கள் என்பதை உணர்த்துகிறது. தென்கிழக்கு இங்கிலாந்தின் க்லௌசெஸ்டெர்ஷைர் என்ற பகுதியில் இருக்கும் ஹேஸல்டன் நார்த்தில் உள்ள புதிய கற்கால கல்லறை, ஆங்கில எழுத்தான எல் வடிவத்திலான அறைகளைக் கொண்டுள்ளது. ஒன்று வடக்கு நோக்கியும் மற்றொன்று தெற்கு நோக்கியும் உள்ளது.
 
பண்டைய மரபணு தலைமுறை ஆய்வுக்குத் தலைமை தாங்கிய, அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் பேராசிரியராகவும் இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான டேவிட் ரீச், "இரண்டு பெண்கள், அவர்களின் குழந்தைகள் மற்றும் ஐந்தாம் தலைமுறை வரையிலான அவர்களுடைய குழந்தைகள் உட்பட அனைவரும் தெற்கு அறையில் இருந்தனர்.
 
பின்னர், மற்ற இரண்டு பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் முதன்மையாக வடக்கு அறையில் இருந்தனர். இருப்பினும் வடக்குப் பாதையின் சேதங்கள், அங்கு புதைப்பது இனி சாத்தியமில்லை என்பதை உணர்த்தியது. ஆகவே, அவர்களில் சிலர் கல்லறையின் பயன்பாட்டைப் பொறுத்து பின்னர் தெற்கு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
 
ஆய்வின் முதன்மை ஆசிரியரும் முதன்மை தொல்பொருள் ஆய்வாளருமான, இங்கிலாந்தின் நியூகேஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர்.கிறிஸ் ஃபௌலர், "இது பரந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், மற்ற கற்கால கல்லறைகளின் கட்டிட அமைப்பு அந்த கல்லறைகளில் உறவுமுறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நமக்குத் தெரிவிக்கலாம் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது," என்று கூறினார்.
 
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அனடோலியா (நவீன துருக்கி) மற்றும் ஏஜியன் ஆகியவற்றிலிருந்து ஐரோப்பா முழுவதும் பரவிய மூதாதையர்களால் பிரிட்டனுக்கு வேளாண்மை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரான காலகட்டத்தைச் சேர்ந்தவையாக கல்லறை இருக்கிறது. இந்தக் கற்கால மக்களிடையே உள்ள குடும்ப இயக்கவியலைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களுடைய கலாச்சாரத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கும் இந்த ஆய்வு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்.
 
"மிக நீண்ட காலத்திற்கு முன்பு இந்த இடத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை இது உண்மையில் தெளிவாக்குகிறது. இதுபோன்ற பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கான தொடக்கமாக இதுவே முதல் ஆய்வாக இருக்கும் என்று நம்புகிறேன்," என்கிறார் பேராசிரியர் ரீச்.
 
குடும்பத்தில் "வளர்ப்பு மகன்கள்" தத்தெடுக்கப்பட்டதற்கான அறிகுறிகளும் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கல்லறையில் தாயோடு மகன்கள் புதைக்கப்பட்டுள்ளார்கள், ஆனால் அவர்களுடைய உயிரியல் ரீதியிலான தந்தை புதைக்கப்படவில்லை. அதோடு, அவர்களுடைய தாய்க்கும் அந்த கல்லறையில் புதைக்கப்பட்ட ஆணுக்கும் பிறந்த குழந்தைகளும் உள்ளனர்.
 
கல்லறையில் காணப்படாத பெண் வாரிசுகள்
குழந்தைப் பருவத்தில் இறந்த இரண்டு பெண் குடும்ப உறுப்பினர்கள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், வயது வந்த மகள்கள் முழுமையாக அங்கு இல்லை. அவர்கள் இணையர் மற்றும் அவர்களுடைய குழந்தைகளின் தந்தையாக இருந்த ஆண்களின் கல்லறையில் வேறு இடத்தில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. அதேநேரம் அங்குக் காணப்படாத மற்ற பெண்களும் இருக்கிறார்கள் என்கிறார் பேரா.ரீச்.
 
மேலும், "ஆண்களும் பெண்களும் ஒரே விகிதத்தில் பிறந்துள்ளார்கள். அப்படியிருக்க சில பெண்களுக்கான புதைவிடம் அங்குக் காணப்படவில்லை. அவர்கள் எங்கே என்பதுதான் கேள்வி. இது ஒரு மர்மமாக உள்ளது. அவர்கள் அடுத்த கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றில்லை. ஏனெனில் ஒட்டுமொத்த சமூகத்திலுமே அவர்கள் காணப்படவில்லை.
 
ஆட்கள் தகனம் செய்யப்பட்டார்களா? சில தகனம் செய்யும் நடைமுறைகள் உள்ளன. அந்த நிலப்பரப்பில் மக்களுக்கு வெவ்வேறு வழிகளில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டதா அல்லது ஒரு குறிப்பிட்ட சமூக அந்தஸ்தை பெற்றவர்களை மட்டுமே நாம் பார்க்கிறோமா?" என்கிறார்.
 
ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றிருப்பதற்கான ஆதாரங்களை கல்லறை வெளிப்படுத்துகிறது. அதேவேளையில், பெண்களும் பல ஆண்களை மணந்து, குழந்தை பெற்றுக் கொண்டதற்கான ஆதாரங்களையும் இது காட்டுகிறது.
 
ஓர் ஆணுடன் குழந்தைகளைப் பெற்ற வெவ்வேறு பெண்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லாதவர்களாக இருந்தனர். ஆனால், பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களுடன் இணையும் சந்தர்ப்பங்களில், அந்த ஆண்கள் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களாக இருந்துள்ளார்கள்.
 
இந்த ஆய்வின் முதன்மை மரபியல் நிபுணரும் இணை ஆசிரியருமான, ஸ்பெயினில் இருக்கும் பாஸ் கன்ட்ரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இனிகோ ஒலால்டே, "கல்லறையில் நிகழ்ந்துள்ள சிறப்பான மரபணு பாதுகாப்பு, பண்டைய மரபணுவை மீட்டது மற்றும் சமீபத்திய தொழில்நுட்பஙக்ளைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்தது ஆகியவை, மிகவும் பழைமையான மரபுவழி குடும்ப மரத்தை வெளிப்படுத்த, இந்த பண்டைய குழுக்களின் சமூகக் கட்டமைப்பைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள, அதைப் பகுப்பாய்வு செய்ய அனுமதித்துள்ளது," என்று கூறினார். இந்த ஆய்வு மதிப்பாய்வு செய்யப்பட்ட நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நில அதிர்வால் மக்கள் அச்சப்பட வேண்டாம்!