Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

Prasanth Karthick

, திங்கள், 17 ஜூன் 2024 (14:17 IST)
ஒவ்வொரு மொபைல் ஃபோனுக்கும் ஐ.எம்.இ.ஐ எண் என்று அழைக்கப்படும் தனித்துவமான எண் உள்ளது என்று மொபைல் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும்.



மொபைல் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ இந்த எண்ணைக் கொண்டு நாம் தேடுகிறோம். இதன் உதவியால் காவல்துறை திருடியவர்களை கண்டுபிடித்தும் உள்ளது.

ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு பிரத்யேக எண் உள்ளது என்றாலும், இந்த சிறப்பு எண்ணின் குளோனிங் அல்லது அதில் மாற்றங்கள் செய்யப்படுவது பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

பங்களாதேஷின் மொபைல் ஃபோன் சேவை நிறுவனமான ’ரோபி’-யின் தலைமை நிறுவன மற்றும் ஒழுங்குமுறை அதிகாரி ஷாஹித் ஆலம் தெரிவித்த விஷயங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைநகர் டாக்காவில் உள்ள தொலைத்தொடர்பு இயக்குனரகத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த கருத்தரங்கில் அவர் இதைத்தெரிவித்தார்.

"வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண்ணுடன் ஒன்றரை லட்சம் ஃபோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஃபோன்கள் அனைத்தும் போலியானவை,” என்று கருத்தரங்கில் பேசிய அவர் குறிப்பிட்டார்.

எனினும், போலி மொபைல் போன்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கலாம் என்று நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஏ.கே.எம்.முர்ஷித், பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

"ஒரு ஆபரேட்டரின் நெட்வொர்க்கில் இருந்த எட்டு லட்சம் மொபைல் போன்கள் ஒரே ஐஎம்இஐ குறியீட்டுடன் சில ஆண்டுகளுக்கு வேலை செய்தன," என்று அவர் கூறினார்.

ஆனால் ஒரே அடையாளத்தைக் கொண்ட பல செல்போன்கள் ஒரே நேரத்தில் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதே கேள்வி.

ஐஎம்இஐ என்றால் என்ன?

சர்வதேச மொபைல் கருவி அடையாளம் (IMEI) என்பது 15 இலக்க எண் ஆகும். மொபைல் கைபேசியை தயாரிக்கும் போது இந்த எண் அதில் ப்ரோக்ராம் செய்யப்படுகிறது என்று IMEI.info தெரிவிக்கிறது.

ஆனால் சில சந்தர்ப்பங்களில் இந்த எண் 17 இலக்கங்களாகவும் இருக்கலாம். உண்மையில் இந்த எண் மொபைல் கைபேசியின் அடையாளமாக இருக்கிறது.

இந்த கைபேசி எந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது, எந்த பகுதியில் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த எண் காட்டுகிறது.

"ஒரு மொபைல் எண்ணுக்கு ஒரு ஐஎம்இஐ எண் மட்டுமே இருக்கும்படியாக மற்றும் எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில், மொபைல் தொடர்புக்கான குளோபல் சிஸ்டம் (ஜிஎஸ்எம்) வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று ஏ.கே.எம்.முர்ஷித் கூறினார்.

தொலைபேசி தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அதைக் கண்டுபிடிக்க ஐ.எம்.இ.ஐ எண் பயன்படுத்தப்படும்.

இது தவிர புதிய மொபைல் வாங்கும் போது, அந்த மொபைல் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்பதை ஐஎம்இஐ எண் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்.

உங்கள் போனில் *#06# டயல் செய்தால், உங்கள் மொபைலின் ஐஎம்இஐ நம்பர் உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் IMEI.info இணையதளத்திற்குச் சென்று இந்த எண்ணை உள்ளிட்டு செக் பட்டனை அழுத்தினால் அடுத்த பக்கத்தில் தொலைபேசி தொடர்பான தகவல்களை நீங்கள் காண்பீர்கள்.

ஐ.எம்.இ.ஐ மோசடி எவ்வாறு நிகழ்கிறது?

ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றுவது என்பது பொதுவாக ஒரு உண்மையான எண்ணை குளோனிங் செய்வதாகும்.

மொபைல்களில் இரண்டு வகையான குளோனிங் அடிக்கடி செய்யப்படுகிறது. ஒன்று சிம் குளோனிங் மற்றொன்று ஐ.எம்.இ.ஐ குளோனிங் என்று தகவல் தொழில்நுட்ப நிபுணர் பிஎம் மொய்னுல் தெரிவித்தார்.

மொபைல்பேசியின் அடையாளத்தை நகலெடுக்க முடியும் என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார். சாதாரண மக்கள் அதை எளிதாக செய்ய முடியாது. ஏனென்றால் இதில் பல தொழில்நுட்ப செயல்முறைகள் அடங்கியுள்ளன.

போலி கைபேசிகள் தயாரிக்கும் சில சட்டவிரோத தொழிற்சாலைகளில் டாக்கா பெருநகர காவல்துறை (டிஎம்பி), சமீபத்தில் சோதனை நடத்தியது.

"சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல்களை நகலெடுத்து கைபேசிகள் தயாரிக்கும் ஒரு போலி தொழிற்சாலையை 2020 ஆகஸ்டில் நாங்கள் கண்டுபிடித்தோம்" என்று டாக்கா பெருநகர காவல்துறையின் சைபர் மற்றும் சிறப்பு குற்றப்பிரிவின் கூடுதல் துணை ஆணையர் முகமது ஜுனைத் ஆலம் சர்க்கார் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

இதுபோன்ற மேலும் பல சோதனை நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரங்கள் அளித்தார்.

"உள்ளூரில் இருக்கும் 'தொழிற்சாலைகளில்' ஓரிரு அறைகள் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன. கைபேசிகளின் பாகங்கள், வெளிநாட்டில் இருந்து வாங்கி அசெம்பிள் செய்யப்பட்டவை,'' என்றார் அவர்.

"ஐ.எம்.இ.ஐ ஸ்பூஃபிங் (போலியாக உருவாக்குவது) என்பது பட்டன் ஃபோன்களில் மிகவும் பொதுவானது. இது ஸ்மார்ட் ஃபோன்களில் இது குறைவாகவே உள்ளது. அதிக எண்ணிக்கையில் ஃபோன் அடையாள எண்களை பொருத்துவதற்கு வேறு வழிகள் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

"சட்டவிரோதமாக வெளியில் இருந்து வரும் அறியப்படாத அல்லது அநாமதேய பிராண்டுகளின் கைபேசிகளை இவ்வாறு தயாரிக்கமுடியும். இவற்றுக்கு ஒரே ஐஎம்இஐ எண் பயன்படுத்தப்படுகிறது," என்று பேராசிரியர் மொய்னுல் ஹுசைன் குறிப்பிட்டார்.

'வெளிநாட்டு' நிறுவனத்திடம் இருந்து உதிரிபாகங்கள் வாங்கப்பட்டிருந்தால், அத்தகைய மென்பொருள் அல்லது தேவையான உபகரணங்களை அது வழங்கியிருக்கலாம்,'' என்றார் அவர்.

"ஒருமுறை தகவல் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டால், அதை மாற்ற முடியாது" என்று முர்ஷித் கூறினார்.

”ஆனால் இது கான்ஃபிகர் (மாற்றியமைக்கக்கூடியது) செய்யக்கூடியதாக இருந்தால், போலி கைபேசிகளை சந்தைகளில் விற்பனை செய்யமுடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மோசடி ஏன் நடக்கிறது?

இன்றைய காலகட்டத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய மொபைல் ஃபோன் கண்காணிப்பு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

எந்த ஒரு ஆபரேட்டரின் டவரிலும் இணைக்கப்பட்டுள்ள மொபைல் ஃபோனின் ஐஎம்இஐயை, ஆபரேட்டர் நிறுவனம் அறிந்து கொள்ள முடியும் என்று பேராசிரியர் மொய்னுல் இஸ்லாம் தெரிவித்தார்.

ஆனால் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணுடன் பல கைபேசிகள் இருந்தால் ஒரு குறிப்பிட்ட கைபேசியை கண்டுபிடிப்பது கடினமாகிவிடும்.

"அந்த நிலையில் உண்மையான குற்றவாளியை அடையாளம் காண்பது எங்களுக்கு மிகவும் கடினமாகிவிடும். இதன் விளைவாக மொபைல்பேசி கண்காணிப்புக்கு பதிலாக வேறு உத்திகளைக் கையாள வேண்டி இருக்கும்," என்று போலீஸ் அதிகாரி ஜுனைத் ஆலம் பிபிசி பங்களாவிடம் கூறினார்.

"இந்த காரணத்திற்காகவே சில குற்றவாளிகள் இத்தகைய கைபேசிகளை பயன்படுத்துகின்றனர்," என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும் பெரிய அளவில் ஐ.எம்.இ.ஐ மோசடி நடப்பதற்கு காரணம் ’பொருளாதாரம்’ என்று ஏகேஎம் முர்ஷித் கூறுகிறார்.

ஒவ்வொரு ஐஎம்இஐ நம்பருக்கும் ஜிஎஸ்எம் சங்கம் ராயல்டி செலுத்த வேண்டும்.

"அந்த ராயல்டியைத் தவிர்க்க ஒரு குறிப்பிட்ட நாட்டில் உற்பத்தியாளர்கள், ஒரு ஐ.எம்.இ.ஐ எண்ணுடன் லட்சக்கணக்கான கைபேசிகளை உற்பத்தி செய்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.

இதற்கான தீர்வு என்ன?

ஐஎம்இஐ தரவுத்தளத்திலிருந்து அசல் தொலைபேசியின் அதே ஐ.எம்.இ.ஐ எண்ணைக் கொண்டு குளோன் செய்தால் கைபேசியின் தகவல் தரவுத்தளத்தில் கிடைக்கும்.

"இதன் விளைவாக சராசரி பயனருக்கு இதைப் புரிந்து கொள்ள வழியே இருக்காது" என்கிறார் டாக்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பிஎம் மொய்னுல் ஹுசைன்.

இவற்றைத் தடுக்க அவர் இரண்டு வகையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறார். முதலாவது சட்ட நடவடிக்கை. இரண்டாவது, தொழில்நுட்ப நடவடிக்கைகள்.

ஒரு ஃபோன் பயனரின் கைகளுக்கு வந்துவிட்டால், தொழில்நுட்ப நடவடிக்கைகளால் எந்த பயனும் இல்லை என்று அவர் சொல்கிறார். அதனால் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!