Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

முடங்குகிறதா இரட்டை இலை? தேர்தல் ஆணையத்தின் பதிலால் பரபரப்பு!

முடங்குகிறதா இரட்டை இலை? தேர்தல் ஆணையத்தின் பதிலால் பரபரப்பு!
, வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (10:31 IST)
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்கள் வேட்பாளரை அதிகாரபூர்வ வேட்பாளராக ஏற்க வேண்டுமென எடப்பாடி தரப்பு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், "இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரே முடிவுசெய்வாா்" என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
 
ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வேட்புமனு தாக்கலும் துவங்கியுள்ளது. இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., எடப்பாடி அணி, ஓ. பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிளவு பட்டிருக்கும் நிலையில் இரு தரப்பும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
webdunia
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையெழுத்துடன் கூடிய வேட்பாளரின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. இந்த விண்ணப்பத்தை ஏற்கும்படி ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டது. இதனை மனுவாகத் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் கூறியது.
 
இதையடுத்து, கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று, இந்தக் கோரிக்கையை எடப்பாடி தரப்பு மனுவாகத் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கில், ஓ.பி.எஸ். தரப்பு ஏற்கனவே பதில் மனு தாக்கல்செய்துவிட்ட நிலையில், தற்போது இந்தியத் தேர்தல் ஆணையமும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
 
அந்த பதில் மனுவில், "எந்தக் கட்சிக்குள்ளும் நடக்கும் உட்கட்சி விவகாரங்களையோ உட்கட்சித் தேர்தல்களையோ கண்காணிப்பது தேர்தல் ஆணையத்தில் வேலை இல்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் கட்சி விதிகளில் குறிப்பிட்டபடி உட்கட்சித் தேர்தல்களை நடத்தி, அதன் நிர்வாகிகள் யார் என்ற பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். விதிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்தப்படுகிறதா என்பதை மட்டும்தான் தேர்தல் ஆணையம் கவனிக்க முடியும்.
 
சம்பந்தப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி திருத்தப்பட்ட கட்சி விதிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டிருப்பதால், அவற்றைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. மேலும், சின்னங்கள் தொடர்பாக இதுவரை எந்தத் தரப்பும் முறையீடு செய்யவில்லை.
 
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளரைப் பொறுத்தவரை, தேர்தல் நடத்தும் அதிகாரியே வேட்புமனுவை ஏற்பது குறித்து முடிவுசெய்வார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்படிருந்த பதில் மனுவில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகிவிட்டது என்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகிவிட்டதா, இல்லையா என்பது முடிவாகும். எனவே, எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தால், அது பொதுக்குழு தொடர்பான வழக்கின் மீதான தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறப்பட்டிருந்தது.
 
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி தன்னைத் தற்காலிக பொதுச் செயலாளராக அ.தி.மு.கவின் பொதுக் குழு தேர்வுசெய்துவிட்டதால் இரட்டை இலைச் சின்னத்தைத் தங்களுக்கே ஒதுக்க வேண்டுமென எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு கோரிவரும் நிலையில், தேர்தல் ஆணையம் இந்த பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
 
ஜூலை 11ஆம் தேதி கூடிய அ.தி.மு.கவின் பொதுக் குழு தன்னை தற்காலிகப் பொதுச் செயலாளராக தேர்வுசெய்ததை ஏற்கும்படியும் அந்தத் தருணத்தில் செய்யப்பட்ட விதி மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கும்படியும் எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
வரும் பிப்ரவரி 7ஆம் தேதியே வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், தங்கள் தரப்பை அதிகாரபூர்வ அ.தி.மு.கவாக அங்கீகரித்து தங்கள் தரப்பிற்கு இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதில் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு முனைப்பாக இருக்கிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருக்கும் இந்த மனு, ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேனா சிலை விவகாரம்; அது கருத்துகேட்பு கூட்டமே இல்ல! – பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு!