ஜம்மு காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்றும் இதில் மற்ற நாடுகளின் தலையீடு தேவையில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ''இந்த (பாஜக) அரசுடன் நான் பல பிரச்சனைகளில் முரண்பட்டுள்ளேன். ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் நான் மிகவும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. இதில் தலையிட பாகிஸ்தானுக்கோ வேறு எந்த வெளிநாட்டுக்கோ எவ்விதமான உரிமையும் இல்லை,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட மற்றொரு செய்தியில், ''ஜம்மு காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது. அங்கு நடக்கும் வன்முறைகள் பாகிஸ்தான் ஆதரவுடன், தூண்டுதலுடன் நடைபெறுகிறது. பயங்கரவாதத்திற்கு மிக முக்கியமாக ஆதரவு அளிக்கும் நாடு பாகிஸ்தான் என்பது உலகம் அறிந்த ஒரு விஷயம்," என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் பாகிஸ்தான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தேவையில்லாமல் ராகுல் காந்தியின் பெயர் விஷமத்தனமாக இழுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் கூறிய பொய்கள் மற்றும் தவறான தவகல்களை நியாயப்படுத்த இவ்வாறு செய்யப்பட்டுள்ளது,'' என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் எப்போதும் இந்தியாவின் ஓருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்பதில் இந்த உலகில் உள்ள யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த 24ஆம் தேதி ஸ்ரீநகருக்கு சென்றனர்.
ஆனால், அவர்கள் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த விஷயம் அரசியல் காலத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீருக்கு வருகை தருமாறு ஆளுநர் அழைப்பு விடுவித்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன். ஆனால், எங்களை விமான நிலையத்தில் இருந்து செல்வதற்கு அனுமதிக்கவில்லை. எங்களுடன் இருந்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலைமை சரியாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது," என இதுகுறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மலிக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,"காஷ்மீரின் நிலை தெரியும் என்பதால், அவர் அடிப்படை ஆதாரமற்ற பேச்சுகளை தவிர்ப்பார் என்று நினைத்தே, ராகுல் காந்திக்கு நான் அழைப்பு விடுத்தேன் என்பதை தெளிவாக சொல்ல நினைக்கிறேன்," என்று அந்த அறிக்கையில் சத்ய பால் மலிக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்தவர்களுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்த மனுக்களை ஐந்து பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.