சில வாரங்களுக்கு முன்பாக கௌதம் கார்த்திக் நடித்து வெளிவந்த ரங்கூன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்த படமும் வெளியாகியிருக்கிறது. ரங்கூன் படத்தில் கிடைத்த நல்ல பெயரை இந்தப் படத்திலும் தக்கவைத்திருக்கிறார்.
நடிகர்கள்: கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி, சூப்பர் சுப்பராயன்.
இசை: எஸ்.எஸ் தமன்
இயக்கம்: ஆர். கண்ணன்
ஒளிப்பதிவு: பிரசன்ன குமார்
எஞ்சினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மொபைல், லேப்டாப் போன்ற பொருட்களை விற்கும் கடையை நடத்துகிறார்கள் சக்தியும் (கௌதம் கார்த்திக்) அவனது நண்பன் பாலாஜியும் (ஆர்.ஜே. பாலாஜி).
மனித வளத் துறை அமைச்சரான தேவராஜின் (சூப்பர் சுப்பராயன்) வீட்டிற்கு சிசிடிவி பொருத்தியதற்கான பணத்தை கேட்டு, அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம், பல பொறியியல் கல்லூரிகளில் வசதி போதவில்லை என்று மூடும் தேவராஜ், லஞ்சம் வாங்கிக்கொண்டு அவற்றை திறக்க உத்தரவிடுகிறார்.
செய்த வேலைக்கு பணம் கிடைக்காமல் அவமானப்படுத்தப்படுவதால், அமைச்சர் வீட்டில் கட்டுக்கட்டாக நோட்டு இருப்பதை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.
இதனால், மந்திரி பதவியை பறிகொடுக்கும் தேவராஜ், இதைச் செய்தவனைத் தேட ஆரம்பிக்கிறார். பேய்கள் உலாவும் கோலிவுட்டில், திடீரென இப்படிப்பட்ட படங்களைப் பார்ப்பது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கதாநாயகன், பெரிய கம்ப்யூட்டர் நிபுணர் என்பதை நிறுவுவதற்கான துவக்கக் காட்சிகளும் அதைத் தொடரும் பாடலும் சற்று அலுப்பை ஏற்படுத்துகின்றன.
ஆனால், கதையில் வில்லன் அறிமுகமானதும் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது படம். அதன் பிறகு முடியும்வரை, விறுவிறுப்பான த்ரில்லராகவே நகர்கிறது படம்.
ஆனால், பல காட்சிகளை உருவாக்கியிருப்பதிலும் படமாக்கியிருப்பதிலும் பெரும் அலட்சியம் தென்படுகிறது. தொழில் நுட்பம் சார்ந்த காட்சிகளில் காதுகளில் சற்று அதிகமாகவே பூச்சுற்றுகிறார்களோ என்று தோன்றவைக்கும் இடங்களும் இருக்கின்றன.
சாலையில் பொருத்தப்படும் சிறிய கருவி, கடந்து செல்லும் வாகனங்களையெல்லாம் ஸ்கேன் செய்வதாக காட்டுவது, படத்தின் இறுதியில் கதாநாயகனுடன் சேர்ந்து செயல்படும் காவல்துறை, நாயகன் மாட்டிக்கொள்ளும்போது வெகுநேரத்திற்கு வராமலேயே இருப்பது என பல இடங்கள் உறுத்துகின்றன.
படத்தின் துவக்கத்தில் வரும் பாடல், ஆர்.ஜே.பாலாஜியின் பொறியியல் கல்லூரி குறித்த விரிவுரைகள் போன்றவையும் படத்தின் ஓட்டத்தைத் தடைசெய்கின்றன. கௌதம் கார்த்திக்கு ஆறாவது படம் இது. முதல் படத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார். எந்த இடத்திலும் உறுத்தாத நடிப்பு.
நாயகி ஷ்ரத்தா தாஸ், கௌதமைவிட மூத்தவரைப் போல இருக்கிறார் என்பதைத் தவிர, வேறு குறை சொல்லமுடியாது. ஹீரோவின் நண்பன் என்பதால், ஆர்.ஜே.பாலாஜிக்கு படம் முழுக்க பேசிக்கொண்டேயிருக்கும் பணி.
இவர்கள் எல்லோரையும்விட படத்தில் சட்டென ஈர்ப்பவர், வில்லனாக வரும் சூப்பர் சுப்பராயன். பல தருணங்களில் மிரள வைக்கிறார். படத்தின் சாதகமான அம்சங்களில் இவரது தேர்வும் ஒன்று.
ஆக, கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா, இயக்குனர் ஆர். கண்ணன் ஆகிய எல்லோருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம்.