எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எல்லா விலையையும் கொடுத்து மக்களை கொலை செய்கிறீர்கள் என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை கடுமையாகச் சாடியிருக்கிறார் திரைப்பட நடிகர் சித்தார்த்.
சமீபத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், நாட்டில் பரவிவரும் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்திற்கு தமது ட்விட்டர் பக்கம் மூலம் பதிலளித்த டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், "இம்மாதிரி அசாதாரணமான தருணங்களில் நீங்கள் அளிக்கும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் மதிப்புமிக்க அறிவுரைகளையும் உங்களுடைய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பின்பற்றினால், வரலாறு உங்களை இன்னும் மேம்பட்ட இடத்தில் வைத்திருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவரது பதில் கடிதம் முழுக்க, முழுக்க காங்கிரஸ் தலைவர்களைக் குற்றம்சாட்டும் வகையிலேயே அமைந்திருந்தது.
இந்த விவகாரத்தில் ஹர்ஷ் வர்தன் பதிலை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், "நீங்கள் கோவிட் போராளி அல்ல டாக்டர் ஹர்ஷ்வர்தன். உண்மையில் நீங்கள் கோவிட்டின் கூட்டாளி" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "எப்படியாவது தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்பதற்காக எல்லா விலையையும் கொடுத்து மக்களை கொலை செய்கிறீர்கள். அதன் பிறகு, மத கூட்டங்களில் மேலும் பலரைத் திரளச் செய்து மேலும் மக்களைக் கொல்கிறீர்கள். வரலாறு இதை ஒருபோதும் மறக்காது. மன்னிக்காது, வெட்கம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார் சித்தார்த்.
அவரது இந்தப் பதிவிற்குக் கீழே, பல்வேறு ட்விட்டர்வாசிகளும் பாலிவுட் பிரபலங்களின் ட்விட்டர் முகவரியை டேக் செய்து, "சித்தார்த்தைப் போல முதுகெலும்பு உடையவர்களாக இருங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.