பஞ்சாப் மாநிலத்தில் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் மாதத்துக்குள் 1.78 லட்சம் ஸ்மார்ட் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள தகவலில், ''நவம்பர் மாதத்துக்குள் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 1.78 லட்சம் ஸ்மார்ட் போன்களை வழங்க உள்ளோம். முதல் கட்டமாக 50,000 மாணவர்களுக்கு போன்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றை அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களில் டச் ஸ்கிரீன், கேமரா, அரசு செயலிகள், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கான இ-பாடங்கள் ஆகியவை இருக்கும்.
இரண்டாவது கட்டமாக ஸ்மார்ட் போன்கள் அரசால் விரைவில் வாங்கப்பட உள்ளன. நவம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து, 12-ம் மாணவர்களுக்கு 1.78 லட்சம் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். கொரோனாவால் 2020-21 ஆம் கல்வியாண்டில் 4 மாதங்கள் ஏற்கெனவே வீணாகி விட்டன.
தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். பெருந்தொற்றுக் காலத்தில் கல்வியை அணுகுவதில் உள்ள சிரமத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.