இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியுள்ள 'பாகுபலி' திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் உள்ளிட்ட 11 திரைப்படங்களில், 9 திரைப்படங்களுக்கான கதையை எழுதியுள்ளவர் கே.வி.விஜயேந்திர பிரசாத்.
கதாசிரியர் மற்றும் இயக்குநரான கே.வி.விஜயேந்திர பிரசாத், எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை என்பதுடன் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'ரௌடி ரத்தோர்' ஆகிய இந்தி திரைப்படங்களின் கதைகளையும் எழுதியவர்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்திய 'பாகுபலி' மற்றும் 'பஜ்ரங்கி பைஜான்' ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் விஜயேந்திர பிரசாத்தே கதைகளை எழுதியிருந்ததால் இந்தியத் திரையுலகின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இந்தியாவில் வழி தவறிய பாகிஸ்தான் நாட்டு சிறுமியை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பெற்றோர்களிடம் கதாநாயகன் சேர்க்கும் கதைக் கரு அமைந்த திரைப்படமான 'பஜ்ரங்கி பைஜான்', இந்தியாவில் மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலும் வரவேற்பை பெற்றிருந்தது.
சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற வந்திருந்த பாகிஸ்தான் நாட்டு ஏழை சிறுமியிடம் பணம் பெறாமல் சிகிச்சை அளிக்கப்பட்ட உண்மை சம்பவம் மற்றும் சிரஞ்சீவி நடித்து கடந்த 1987-ஆம் ஆண்டில் வெளியாகிய 'பசிவாடி பிராணம்' படத்தை பார்த்ததால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே 'பஜ்ரங்கி பைஜான்' திரைப்படத்தின் கதையை உருவாக்கியதாக கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் தனது பல்வேறு பேட்டிகளில் கூறியுள்ளார்.
அதேப்போல ஒரு மனிதனை 'ஈ' பழிவாங்குவது போல ஒரு திரைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என தனது மகன் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம், கே.வி.விஜயேந்திர பிரசாத் வேடிக்கையாக பேச போய், அதுவே திரைப்படமாக உருவாக்கப்பட்டு வசூல் சாதனையும் செய்தது.
'ஈகா' என பெயரிடப்பட்டு தெலுங்கு மொழியில் வெளியாகிய அப்படம், தமிழில் 'நான் ஈ' என்ற பெயரில் வெளியானது.
இந்த திரைப்படம் குறித்து அது வெளியான சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, படுக்கைநேர கதையை கூறுவது போல தனது தந்தை விஜயேந்திர பிரசாத் இந்த கதையை தனக்கு கூறியதாகவும், அதனால் ஏற்பட்ட சுவாரஸ்யம் தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்கிற உத்வேகத்தை தனக்கு அளித்ததாகவும் குறிப்பிட்டார்.
எனினும், திரைப்பட வில்லனை 'ஈ' பழிவாங்குவது போன்ற காட்சிகளை அமைக்க மிகவும் சிரமம் ஏற்பட்டதாகவும், குறிப்பாக மனிதனுக்கும், 'ஈ'க்குமான காட்சி தொகுப்புகளை உருவாக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது என்றும் கூறினார்.
'நான் ஈ' குறித்து விஜயேந்திர பிரசாத் கூறுகையில், 'ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்' இயக்கத்தில் உருவான 'ஈ.டி' என்கிற திரைப்படத்தை பார்த்து, இதைப் போல ஒரு படம் ஏன் உருவாக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் அப்படத்திற்கான கதையைத் தயார் செய்தேன் என்றார்.
பல்வேறு வெற்றிப் படங்களுக்காண கதையை உருவாக்கிய விஜயேந்திர பிரசாத், நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவ்வாறு அவர் இயக்கிய 'ராஜன்னா' என்கிற திரைப்படத்திற்காக ஆந்திர மாநில அரசின் உயரிய 'நந்தி விருது' ஒன்றையும் பெற்றுள்ளார்.
1988-இல் திரைப்படங்களுக்கான கதையை எழுதத் துவங்கிய விஜயேந்திர பிரசாத், கிட்டத்தட்ட 3 தசாப்தங்களாக தொடர்ந்து எழுத்து உலகில் இயங்கி வருகிறார். இன்றளவும் இந்தியாவில் பல நட்சத்திர அந்தஸ்தில் உள்ள நடிகர்கள், விஜயேந்திர பிரசாத் எழுதும் கதையில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
எழுவதற்கான ஊக்கம் யாரிடமிருந்து கிடைத்தது என்பது குறித்து கருத்துத் தெரிவித்த 73 வயதான விஜயேந்திர பிரசாத், தனது மூத்த சகோதரரும் பல்வேறு துறைகளில் திறமை வாய்ந்தவருமான கோடூரி சிவசக்தி தத்தாதான் காரணம் என்று தெரிவித்தார்.
தான் எப்போதும் எதையாவது பார்த்து அல்லது கேட்டு அதன் மூலம் உந்தப்பட்டுத்தான் ஒரு படைப்பை தயாரிக்க முயல்வதாகவும், ஆனால் தனது சகோதரர் எதையும் தழுவாமல் சுயமான திறனால் படைப்புக்களை உருவாக்கக் கூடிய திறமை படைத்தவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனது சகோதரர் அவருக்குள்ள திறமையால் பலனடையவில்லை, மாறாக நான் அவரது திறமையில் இருந்து பயின்ற சில உத்திகளை கொண்டு இன்று பெருமளவு சம்பாதிக்கிறேன் என்றார் விஜயேந்திர பிரசாத்.