Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தமிழகத்துக்கு செல்லும் நீரைப் பயன்படுத்தி மேகதாட்டுவில் புதிய அணை கட்ட முடிவு: கர்நாடக பட்ஜெட்டில் எடியூரப்பா அறிவிப்பு

தமிழகத்துக்கு செல்லும் நீரைப் பயன்படுத்தி மேகதாட்டுவில் புதிய அணை கட்ட முடிவு: கர்நாடக பட்ஜெட்டில் எடியூரப்பா அறிவிப்பு
, வியாழன், 11 மார்ச் 2021 (15:11 IST)
(இன்று 11.03.2021, வியாழக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

'காவிரியில் தமிழகத்துக்கு செல்லும் நீரைப் பயன்படுத்தி மேகதாட்டுவில் புதிய அணைகட்டப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் தமிழக எல்லைக்கு அருகில் உள்ள மேகதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட மாநில அரசு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. இதற்கான திட்ட வரைவு அறிக்கை மத்திய நீர்வளத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மத்திய அரசு மேக தாது திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.

இதற்கிடையில், தமிழக அரசு காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடகா, அந்த திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள‌து.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல்வர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்தின் 2021 ‍- 22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது எடியூரப்பா கூறியதாவது: "பெங்களூரு மாநகரில் அதிகரித்துள்ள‌ குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அர்க்காவதி - காவிரி திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் மேகேதாது அருகே 9,000 கோடி ரூபாயில் புதிய அணை கட்டப்படும். இந்தக் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ்பெங்களூரு மாநகருக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும்

மேலும், ராம்நகர், கோலார் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கும் பயன்படுத்தப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மேகேதாதுவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும்" என எடியூரப்பா கூறியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மூத்த குடிமக்கள் அயோத்தி செல்ல முழு செலவையும் அரசே ஏற்கும் - அர்விந்த் கெஜ்ரிவால்

மூத்த குடிமக்கள் அயோத்தி செல்ல முழு செலவையும் அரசே ஏற்கும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது.
webdunia

டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

நான் ராம பக்தன். ராமரின் வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்ட வளர்ச்சிக்கான 10 திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றார். டெல்லியில் ராம ராஜ்ஜியம் அமைக்க அரசு பின்பற்றும் 10 திட்டங்களாக அவர் குறிப்பிடுபவை:

டெல்லியில் ஒருவர் கூட பசியுடன் தூங்கக் கூடாது என்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒவ்வொரு ஏழைக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய அரசு செயல்பட்டு வருகிறது.

அனைத்து மக்களுக்கும் இலவச மற்றும் மேம்பட்ட சுகாதார சேவை வழங்குவதை உறுதி செய்ய ஆம் ஆத்மி அரசு செயல்பட்டு வருகிறது.

வீடுகளுக்கு 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்க டெல்லி அரசு வழிவகை செய்துள்ளது. டெல்லி ராம ராஜ்ஜியம் திட்டத்தின் ஒரு அங்கம் இது.

டெல்லியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கும் வகையில் ஆம் ஆத்மி அரசு ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி அரசின் வேலைவாய்ப்பு தளங்கள், தொழில் தொடங்குவதற்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் லட்சக்கணக்கான வேலையில்லாதவர்கள் பயனடைகின்றனர்.

குடிசை வாழ் பகுதியில் வீடு கட்டித் தருவது ராம ராஜ்ஜிய திட்டத்தின் அங்கம் ஆகும்.

பெண்களுக்குப் பாதுகாப்பு: காவல் துறை டெல்லி அரசின் கீழ் இல்லை. ஆனால், தற்போது அது விவாதத்துக்குரிய விஷயம் அல்ல. யார் பொறுப்போ அவர்கள் அதைச் செய்ய வேண்டும். எங்கள் தரப்பில் பொறுப்புடன் செயல்படுகிறோம். சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, பெண்களுக்கு இலவச போக்குவரத்து சேவை வழங்கப்பட்டுள்ளது, பேருந்துகளில் காவலர்களை நியமித்துள்ளோம்.

மூத்த குடிமக்களுக்கு மரியாதை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு, ஆன்மிகப் பயணமாக மூத்த குடிமக்களை டெல்லி அரசே அயோத்தி அழைத்துச் செல்லும்.
டெல்லி அரசின் கீழ் அனைவரும் சமம் என கூறினார் கெஜ்ரிவால்.

ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரத்தை வெளியிடும் திட்டம் இல்லை

கடந்த 2011-ல் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரத்தை தற்போது வெளியிடும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டதாக தினமணியில் செய்தி பிரசூரமாகியுள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் சார்பில் சமூக - பொருளாதார மற்றும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இதற்கு பதிவாளா் ஜெனரல் அலுவலகம் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கியிருந்தது. இதில் ஜாதிவாரியான விவரங்கள் தவிர்த்து மற்ற விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

ஜாதிவாரியான மூல விவரங்களை வகைப்படுத்துவதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அமைச்சகம் அறிவித்தபடி, ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்களைத் தற்போது வெளியிடும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை.

2021-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதன் நோக்கம் குறித்து கடந்த 2019 மார்ச் 28-ல் இந்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டல் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா! – சென்னையில் மூடப்பட்ட பிரபல ஓட்டல்!