அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை வெள்ளிக்கிழமைக்குள் மூட அந்நாடு உத்தரவிட்டுள்ளது. இதனை "ஆத்திரமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட அரசியல் நகர்வு" என்று சீனா விவரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா "திருடுவதால்" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை, வாஷிங்டனில் இருக்கும் சீனத் துணைத் தூதரகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
வணிகப் போர், கொரோனா தொற்று, ஹாங்காங் தொடர்பான சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவற்றியது உள்ளிட்ட பிரச்சனைகளில், அமெரிக்கா சீனா இடையேயான பதற்றம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, சீன ஆதரவு ஹேக்கர்கள் கோவிட் 19 தடுப்பூசிகளை தயாரித்துவரும் ஆய்வகங்களை இலக்கு வைத்திருப்பதாக அமெரிக்காவின் நீதித்துறை குற்றம்சாட்டியது.
"அமெரிக்காவில் இருக்கும் மேலும் பல சீனத் தூதரகங்களை எப்போது வேண்டுமானாலும் மூட சொல்ல முடியும்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.