உலகில் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அடுத்த பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் உள்ள பென்னு என்ற சிறுகோளில் இருந்து மண் மாதிரியை சேகரித்து வெற்றிகரமாக பூமிக்கு கொண்டு வந்துள்ளது.
7 ஆண்டுகள் நீடித்த இந்த திட்டம் எப்படி நிறைவேறியது? இதற்கு பயன்படுத்தப்பட்ட ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலத்தின் சிறப்பு என்ன? சிறுகோளின் மண் மாதிரிகளை சுமந்து வந்த கொள்கலன் பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழைந்த போது என்ன நிகழ்ந்தது? கொள்கலன் தரையில் பத்திரமாக இறங்கியது எப்படி? தற்போது அந்த மண் மாதிரிகள் எங்கே இருக்கின்றன? இந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்கம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
பென்னு என்பது பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் இருக்கும் சிறு கோளாகும். அது சூரிய மண்டலத்தில் உள்ள மலையளவு பெரிய விண்வெளிப் பாறையாகும். அது சுமார் 500 மீட்டர் அதாவது 1,640 அடி அகலம் கொண்டது.
"இந்த பென்னு சிறுகோள் பூமியின் தோற்றத்திற்கு முன்பே உருவானது. ஏன் நமது சூரிய குடும்பத்திற்கு முன்பே கூட உருவானதாகக் கூட இருக்கலாம் என்று இந்த விண்வெளி ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளரான தாந்தே லாரெட்டா. ஆகவே அதனை ஆய்வு செய்வதன் மூலம் பூமியின் தோற்றம், பூமியில் உயிர்களின் தோற்றம் பற்றிய ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பென்னு சிறுகோளில் இருந்து கற்களையும் மண்ணையும் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி 2016-ம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலத்தை பென்னு சிறுகோளை நோக்கி நாசா செலுத்தியது. பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் உள்ள அந்த சிறுகோளை அந்த விண்கலம் நெருங்க 2 ஆண்டுகளாயின.
பென்னு சிறுகோளில் எந்த இடத்தில் மண் மாதிரிகளை சேகரிப்பது என்பதை தீர்மானிக்க மேலும் 2 ஆண்டுகளை நாசா எடுத்துக் கொண்டது. இந்த காலத்தில் பென்னு சிறுகோளின் அமைப்பை விண்கலத்தின் மூலமாக ஒவ்வொரு அங்குலமாக நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் முடிவில், பென்னு சிறுகோளில் எந்த இடத்தில் மண் மாதிரிகளை சேகரிப்பது என்று அவர்கள் தீர்மானித்தனர்.
2020-ஆம் ஆண்டு, அக்டோபர் 20-ஆம் தேதி, பென்னு சிறுகோளில் மண் மாதிரி எடுக்கப்பட்ட தருணம் அற்புதமான ஒன்றாக இருந்தது.
ஒசைரிஸ்-ரெக்ஸ், பென்னுவின் தரை வரை தாழ்வாகச் சென்றது. பிறகு, அதன் 3 மீட்டர் (10 அடி) நீளமான கரத்தால் மண்ணை அள்ளி எடுக்கும் பொறிமுறையைப் பிடித்துக் கொண்டது.
பென்னுவின் மேற்பரப்பைத் தாக்கி, அதே நேரத்தில், கற்கள் மற்றும் மண்ணை மேலெழ வைக்க நைட்ரஜன் வாயுவை வெடிக்கச் செய்வதே திட்டமாக இருந்தது.
ஆனால், அடுத்து நடந்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
விண்கலத்தின் பொறிமுறை பென்னுவைத் தொடர்பு கொண்டபோது, அதன் மேற்பரப்பு ஒரு திரவம் போலப் பிரிந்தது.
நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்ட போது, பொறியின் வட்டு 10செ.மீ கீழே இருந்தது. நைட்ரஜனின் அழுத்தம் 8 மீ (26 அடி) விட்டம் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியது. கல்லும் மண்ணும் எல்லா திசைகளிலும் பறந்தன. ஆனால் முக்கியமாக சேகரிப்புப் பொறிமுறையின் கொள்கலனுக்குள்ளும் சென்றன.
பென்னு சிறுகோளில் மண் மாதிரிகளை வெற்றிகரமாக சேகரித்த பின்னர் ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் பூமியை நெருங்கியவுடன், தம்மிடம் இருந்த சிறுகோளின் மண் மாதிரிகள் அடங்கிய கொள்கலனை பூமியை நோக்கி விடுவித்தது. அந்த கொள்கலன் விநாடிக்கு 12 கி.மீ. அதாவது மணிக்கு சுமார் 43,500 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி விரைந்தது.
துப்பாக்கித் தோட்டாவை விட 15 மடங்கு வேகத்தில் சீறி வந்ததால் வானத்தில் ஒரு தீப்பிழம்பைப் போல கொள்கலன் காட்சியளித்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த வெப்பக்கவசம் அதனை அந்த நெருப்பில் இருந்து காப்பாற்றியது. அதில் பொருத்தப்பட்டிருந்த பாராசூட் அதனை வேகத்தை தணித்து மெதுவாக தரையை நோக்கி பயணிக்க உதவியது.
பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த 13 நிமிடங்களில் அந்த கொள்கலன் பத்திரமாக தரையைத் தொட்டது. ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலத்தால் விடுவிக்கப்பட்ட, பென்னு சிறுகோளின் 250 கிராம் மண் மாதிரிகளை சுமந்து கொண்டிருந்த கொள்கலன் திட்டமிட்டபடி அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 8.52 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8.22 மணி) இந்த அற்புத தருணம் நடந்தேறியது. இதையடுத்து நாசா விஞ்ஞானிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
தரையைத் தொடுமுன் கொள்கலனில் இருந்து தனியே விடுவித்துக் கொண்ட பாராசூட்டும் அருகிலேயே விழுந்தது. அங்கே தயாராக காத்திருந்த நிபுணர்கள் அந்த கொள்கலனை ஆய்வு செய்தனர். பின்னர், அந்த கொள்கலன் உட்டாவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் பிறகு, அங்கே நாசா ஏற்கனவே தயாராக நிறுத்திவைத்துள்ள ஹெலிகாப்டர் மூலம் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அந்த கொள்கலன் கொண்டு செல்லப்படும்.
ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலம் சிறுகோளின் மண் மாதிரிகள் அடங்கிய கொள்கலனை பூமியை நோக்கி விடுவித்த பிறகு, அடுத்த 20 நிமிடங்களில் தனது என்ஜினை இயக்கி புதிய பாதையில் பயணத்தை தொடங்கியது. ஒருவேளை அது தனது பாதையை மாற்றிக் கொண்டிருக்கா விட்டால், அது விடுவித்த கொள்கலனை பின்தொடர்ந்து சென்று அந்த விண்கலமே கொள்கலன் மீது மோதி அழித்துவிட்டிருக்கும்.
விண்வெளியில் தனது பாதையை மாற்றிக் கொண்ட ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலம் பூமியில் இருந்து 800 கி.மீ. உயரத்தில் சென்றது. அதுதான், பூமியை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பல செயற்கைக்கோள்களின் சுற்றுவட்டப் பாதையாகும். ஆனால், ஒசைரிஸ் - ரெக்ஸ் விண்கலம் அங்கேயே நிலைகொண்டிருக்கப் போவதில்லை.
மாறாக, அபோஃபிஸ் என்ற மற்றொரு எரிகல்லை சந்திக்க புறப்பட்டுச் சென்றிருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அந்த சந்திப்பு 2029-ம் ஆண்டு நிகழும்.
பென்னு சிறுகோளின் மண் மாதிரிகள் அடங்கிய கொள்கலன் டெக்சாஸில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு இந்த மண் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்ய ஒரு துப்புரவான பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது.
மண் மாதிரியின் பெரும் பங்கு நாசா வசம் இருக்கும். 4 சதவீத பங்கை கனடா விண்வெளி மையத்திற்கும் பூஜ்ஜியம் புள்ளி 5 சதவீத பங்கை ஜப்பான் விண்வெளி மையத்திற்கும் நாசா அனுப்ப இருக்கிறது. ஏற்கனவே ஹயாபுசா 2 திட்டத்தின் மூலம் எரிகல்லில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை நாசாவுக்கு ஜப்பான் வழங்கியதற்கு பிரதிபலனாக தற்போது பென்னு எரிகல்லில் இருந்து எடுக்கப்பட்ட மணலை ஜப்பானுக்கு நாசா வழங்குகிறது. இதுதவிர, உலகின் பல பகுதிகளில் இருந்து விஞ்ஞானிகள் சில மணல் மாதிரிகளை கேட்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் (Natural History Museum) சேர்ந்த முனைவர் ஆஷ்லீ கிங், இந்த மண் மாதிரியைத் (கையுறைகள் அணிந்து) தீண்டும் முதல் விஞ்ஞானிகளில் ஒருவராக இருப்பார். ஆரம்ப பகுப்பாய்வைச் செய்யும் குழுவின் உறுப்பினராக அவர் உள்ளார்.
"ஒரு சிறுகோளில் இருந்து மாதிரிகளை கொண்டு வருதல் அடிக்கடி செய்யப்படும் ஒன்றல்ல. எனவே அதன் முதல் அளவீடுகளைச் செய்வது மிக நன்றாக செய்ய வேண்டும்.," என்று அவர் கூறுகிறார். "இது நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக இருக்கிறது," என்கிறார்.
நாசா, பென்னுவை சூரிய குடும்பத்தில் இருக்கும் மிகவும் ஆபத்தான ஒரு பாறையாகக் கருதுகிறது. விண்வெளியில் அதன் பாதை, அறியப்பட்ட எந்த ஒரு விண்கல்லையும் விட பூமியைத் தாக்குவதற்கான அதிக வாய்ப்புள்ளது அல்லது அதற்கான அதிக சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கிறது.
ஆனால் பயப்பட வேண்டாம், அது நிகழ்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒரு நாணயத்தைத் டாஸ் போட்டு ஒரே வரிசையில் 11 தலைகளைப் பெறுவது போன்றது. அடுத்த நூற்றாண்டின் பிற்பகுதி வரை எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
பென்னுவில் நிறைய நீர் இருக்கவும் வாய்ப்புள்ளது. அதன் எடையில் 10% உள்ள இந்த நீர் அதன் தாதுக்களில் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த நீரில் உள்ள பல்வேறு வகையான ஹைட்ரஜன் அணுக்களின் விகிதம் பூமியின் பெருங்கடல்களில் உள்ளதைப் போலவே உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்வார்கள்.
சில வல்லுநர்கள் நம்புவது போல, ஆரம்ப காலத்தில் பூமி மிகவும் சூடாக இருந்ததாலேயே தன் நீரின் பெரும்பகுதியை இழந்திருந்தால், பென்னுவுடன் H₂O பொருத்தத்தைக் கண்டறிவது, நமது பெருங்கடல்களுக்கு அவற்றின் கொள்ளளவை வழங்குவதில் எரிகற்களின் தாக்குதல் எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பது தெரிந்துவிடும்.
பென்னு சிறுகோளில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதே விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள விரும்பும் முதல் விஷயம் ஆகும். இதற்கான விடை, இல்லை என்பதாகவே இருக்கும் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் அனுமானிக்கின்றனர். ஏனெனில், பென்னு சிறுகோளில் நிலைமை மிகவும் கடினமானதாகவும், வளங்கள் மிகவும் குறைவாகவும் இருப்பதாகத் தெரிகிறது.
வெப்பம் மற்றும் குளிர், கதிர்வீச்சு மற்றும் கனரக உலோகங்களின் நச்சுத்தன்மையைக் கூட அடக்கி, மிகவும் ஆபத்தான சூழல்களில் வாழும் சில நுண்ணுயிரிகள் பூமியில் உள்ளன என்பது நிச்சயமாக உண்மை.
உதாரணமாக, டார்டிகிரேட்கள் என்ற நுண்ணுயிரி. ஆனால், அவை குறுகிய காலத்திற்கு விண்வெளியின் வெற்றிடத்தை தாங்கும் என்பதை ஏற்கனவே சோதனைகளில் நிரூபித்துள்ளன.
ஆனால் ஒரு சிறிய சிறுகோள் மீது உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில், வெப்பநிலையில் ஏற்படும் அதீத ஏற்றத்தாழ்வுகள், விண்வெளித் துகள்களின் தொடர்ச்சியான மோதல்கள் போன்றவை உயிர் வாழ மிகவும் சவாலானதாக அதனை மாற்றி விடுகின்றன.
ஒ
பென்னு சிறுகோளின் எடையில் 5-10% கார்பன் இருக்கலாம். இதுவரை நடந்துள்ள ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நமக்கு தெரிந்தவரை,, பூமியில் உயிர் கரிம வேதியியலை அடிப்படையாகக் கொண்டது.
விண்வெளியில் இருந்து சிக்கலான மூலக்கூறுகள் பூமிக்கு வந்ததால்தான் இங்கு உயிர்கள் தோன்றினவா? என்ற கேள்வி இன்னும் விடை தெரியாமல் நீடிக்கிறது.
"பென்னுவின் மண் மாதிரியில் செய்யப்படும் முதல் பகுப்பாய்வுகளில் ஒன்று, அதில் உள்ள கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகளின் பட்டியலைத் தயாரிப்பது," என்று NHM-இன் பேராசிரியர் சாரா ரஸ்ஸல் கூறுகிறார்.
"விண்கற்களைப் பார்ப்பதன் மூலம், எரிகற்களும் வெவ்வேறு கரிம மூலக்கூறுகளைக் கொண்டிருக்கக் கூடும் என்பதை நாம் அறிவோம். ஆனால் விண்கற்களில் உள்ள மூலக்கூறுகள் பெரும்பாலும் மிகவும் அசுத்தமானவை. எனவே பென்னுவின் மண் மாதிரி நமக்கு உண்மையான கரிமக் கூறுகள் என்ன என்பதைக் கண்டறிய வாய்ப்பளிக்கும்,” என்கிறார் அவர்
பேராசிரியர் லாரெட்டா மேலும் கூறுகையில், இந்த மாசுபாட்டின் காரணமாக, புரதங்களில் பயன்படுத்தப்படும் அமினோ அமிலங்கள் விண்கற்களில், உள்ளனவா என்று நாங்கள் தேடவில்லை. “எனவே எரிகற்கள் பூமியில் உயிர்கள் தோன்ற ஆதாரமாக இருந்தனவா என்ற புரிதலை மேம்படுத்தப் போகிறோம்,” என்கிறார் அவர்.