Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

டிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன?

டிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன?
, செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (21:41 IST)
டிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய இந்தியப் பயணத்தின் தொடக்கமாக, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள மொடேரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றினார்.
 
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதியை பாராட்டும் வகையில், நாட்டின் மேம்பாட்டுக்கு எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் வெற்றிகள் பற்றி உயர்வாகப் பேசினார் டிரம்ப்.
 
அதில் சில அம்சங்கள் பற்றி நாம் ஆய்வு செய்தோம்.
 
1. டிரம்ப் கூறியது: ''நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரத்தின் அளவு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.''
 
கண்டறிந்த உண்மை நிலை: இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் பார்த்தால் அதிபர் டிரம்ப் சொன்னது சரி. ஓராண்டில் ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் சரக்குகள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படுகிறது.
 
2000வது ஆண்டில் இந்தியாவின் ட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 477 பில்லியன் டாலர்களாக இருந்தது என்று சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) தெரிவித்துள்ளது. 2019ல் இது 2,940 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
2000 - 2019க்கு இடைப்பட்ட காலத்தில் இது 6.2 மடங்கு அதிகரிப்பாகும்.
 
பிரதமர் மோதி, இந்தியாவின் உற்பத்தித் துறையை வளர்ப்பதற்கு அளித்த உறுதிமொழியை உண்மை அறியும் குழு முன்னர் ஆய்வு செய்தது.
 
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை ஒன்றின்படி, 2019ல் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது.
 
ஜிடிபி அடிப்படையில் உலகின்மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் (அமெரிக்க டாலர்கள் - டிரில்லியன்களில்)
 
உலகின் பெரிய பொருளாதார நாடுகள்
 
2. ''10 ஆண்டுகளில் 27 கோடி பேரை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது.''
 
கண்டறிந்த உண்மை நிலை: 2008இல் இருந்ததைவிட 2018இல் வறுமையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 27.1 கோடி குறைந்துள்ளது என ஐ.நாவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
 
ஐ.நா 2016இல் வெளியிட்ட வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் யார் என்பதை வரையறுக்கும் விதிகளின்படி இது கணக்கிடப்பட்டது.
 
வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் ''சுகாதாரம், சத்தான உணவு, பள்ளிக்கூட வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் 36.4 கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள்'' என்று அதே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
வறுமை நிலையில் இருப்பதாகக் கருதப்படுபவர்களில் 25 சதவீதம் பேர் 10 வயதுக்கு உள்பட்டவர்களாக உள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
படத்தின் காப்புரிமைAFP
3: ``பிரதமர் மோதியின் தலைமையின் கீழ், முதன்முறையாக, இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைத்துள்ளது.''
 
கண்டறிந்த உண்மை நிலை: இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைக்கச் செய்வது என்ற இலக்கை எட்டிவிட்டதாக இந்திய அரசு 2018ல் அறிவித்தது.
 
இருந்தபோதிலும், உண்மையில் அதன் பொருள் என்ன என அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது.
 
ஒரு கிராமத்தில் 10 சதவீத வீடுகளுக்கு மின்சார வசதி இருந்தால், பள்ளிக்கூடங்கள், சுகாதார மையங்கள் ஆகியவற்றுக்கு மின்சார வசதி இருந்தால், அந்தக் கிராமத்திற்கு முழு மின்சார வசதி கிடைத்துவிட்டதாக அரசு வரையறுத்துள்ளது. 2014ல் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்களுக்கு ஏற்கெனவே மின்சார வசதி செய்து தரப்பட்டிருந்தது.
 
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, இந்த உரிமைகேட்பை நாங்கள் முழுமையாக பரிசோதனை செய்தோம்.
 
4: ``நெடுஞ்சாலைகள் அமைக்கும் வேகம் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகமாக உள்ளது.''
 
கண்டறிந்த உண்மை: மோதியின் தலைமையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் நீளம் கணிசமாக அதிகரித்துள்ளது உண்மைதான்.
 
2018-19ல் அரசு சுமார் 10,000 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி ஆண்டான 2013-14ல் அமைக்கப்பட்டதைவிட இது இரு மடங்குக்கும் அதிகம்.
 
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் ஒவ்வொரு நிதியாண்டிலும் அமைக்கப்பட்ட அளவு
 
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள்
 
இந்த ஆண்டுக்கும் அரசு இதேபோல இலக்கு நிர்ணயித்துள்ளது. 2019 நவம்பர் நிலவரப்படி 5,958 கிலோ மீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
சாலைகளை உருவாக்குவதில் பாஜகவின் சாதனையை உண்மை அறியும் குழு ஆழமாக ஆய்வு செய்துள்ளது.
 
5: ``மேலும் 320 மில்லியன் இந்தியர்கள் இப்போது இண்டர்நெட் வசதியுடன் இணைந்து உள்ளனர்.''
 
கண்டறிந்த உண்மை நிலை: இண்டர்நெட் தொடர்பு உள்ளது என்று எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பது முழுமையாக தெளிவாக்கப்படவில்லை. இந்தியாவில் இப்போது 600 மில்லியனுக்கும் மேற்பட்ட இண்டர்நெட் சந்தாதாரர்கள் உள்ளனர் - இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள இண்டர்நெட் பயன்பாடு குறித்த தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ள 320 மில்லியன் என்ற எண்ணிக்கையைத் தாண்டி, சமீப கால ஆண்டுகளில் இது வெகுவாக அதிகரித்துள்ளது.
 
இந்தியாவில் பிராட்பேண்ட் பயன்படுத்துபவர்கள்
 
மொத்தம் (மில்லியனில்)
 
இருந்தபோதிலும், கிராமப் பகுதியில் இருப்பதைவிட, நகரப் பகுதிகளில் இருந்தால்தான் இண்டர்நெட் வசதி சிறப்பாக உங்களுக்கு கிடைக்கும். பெரும்பாலான இந்தியர்கள் கிராமப் பகுதிகளில் வாழ்கிறார்கள். இதில் பாலின அடிப்படையிலும், பயன்பாட்டு வித்தியாசம் உள்ளது.
 
ஆண்களைவிட பெண்கள் இண்டர்நெட் வசதியைப் பயன்படுத்துவது 50 சதவீதம் குறைவாக உள்ளது என்று 2019ல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
 
இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் இண்டர்நெட் வசதியை அளிப்பதற்கான முனைப்பான ஒரு திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டதை உண்மை அறியும் குழு அறிந்துள்ளது. ஆனால், இலக்குகளை எட்ட முடியாமல் அத் திட்டம் திண்டாடி வருகிறது.
 
6: ``மேலும் 600 மில்லியன் பேருக்கு அடிப்படை கழிப்பறை வசதி கிடைத்துள்ளது.''
 
கண்டறிந்த உண்மை நிலை: அக்டோபர் 2014ல் பிரதமர் நரேந்திர மோதி, ஸ்வச் பாரத் அல்லது தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
 
கழிப்பறை வசதிகள் இல்லாத வீடுகளுக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் அரசு கழிப்பறைகளை கட்டிக் கொடுத்தது.
 
இந்தத் திட்டத்தின் கீழ் 100 மில்லியனுக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக குடிநீர் மற்றும் கழிப்பறைகள் துறையின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 600 மில்லியன் என்ற எண்ணிக்கையை எங்களால் மதிப்பிட முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு கழிப்பறையையும் பல பேர் பயன்படுத்துகின்றனர்.
 
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியா மாறிவிட்டது என்று 2018 ஏப்ரலில் பிரதமர் அறிவித்தார். இந்த பழக்கம் இன்னும் நடைமுறையில் இருப்பதாக ஐ.நா. தகவல் கூறியுள்ள போதிலும், திறந்தவெளி கழிப்பிட போக்கு குறைந்துவிட்டதை உண்மை அறியும் குழு உணர்ந்துள்ளது.
 
7: ``மேலும் 70 மில்லியன் வீடுகளுக்குசமையல் எரிவாயு வசதி தரப்பட்டுள்ளது.''
 
கண்டறிந்த உண்மை நிலை: பிரதமர் மோதி 2016ல் தொடங்கிய ஒரு திட்டத்தின் கீழ், ஏழை மக்களின் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டது.
 
இந்தத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட வருவாய்க்கும் குறைவாக உள்ளவர்களின் குடும்பங்களுக்கு 50 மில்லியன் எல்.பி.ஜி. எரிவாயு இணைப்புகள் தரப்பட்டன. சிலிண்டர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு கூடுதல் மானியமும் அளிக்கப்பட்டது.
 
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, அரசு நிர்ணயித்தபடி மேலும் 80 மில்லியன் இணைப்புகள் தர வேண்டும் என்ற இலக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் எட்டப்பட்டுவிட்டது.
 
சிலிண்டர் விலை அதிகரித்த காரணத்தால் மறு பயன்பாட்டுக்கான சிலிண்டர் வாங்கும் போக்கு பாதிக்கப்பட்டு, இத் திட்டத்தின் வெற்றி தடைபட்டுள்ளது என்பதை உண்மை அறியும் குழு கடந்த ஆண்டு கண்டறிந்தது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டம் : கண்டதும் சுட உத்தரவு ...