(இக்கட்டுரையை எழுதிய ஸ்வரன் சிங், புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக்கத்தில் பேராசிரியர் ஆவார்)
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா மசூத் அஸாரை பயங்கரவாதியாக புதன்கிழமை அறிவித்தது ஐ.நா.
இதுநாள் வரை சீனா மசூத் அஸார் விவகாரத்தில் பாகிஸ்தான் பக்கமே நின்றது. வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா, மசூத் விவகாரத்தில் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது. மசூத் விஷயத்தில் அவசரப்பட கூடாது என்று சொல்லிவந்த சீனா, இப்போது அவரை கைவிட்டுள்ளது.
சீனா தனது நிலைப்பாட்டை மாற்றியதற்கு என்ன காரணம்?
மும்பை தாக்குதல், 26/11 பயங்கரவாத சம்பவத்திற்கு பின், அதாவது 2009ஆம் ஆண்டிலிருந்தே ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தின் முன் மசூத் குறித்து பிரச்சனையை இந்தியா கொண்டுவந்தது. வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யாவுடன், பிரான்ஸ் மறைமுகமாக இந்தியாவை ஆதரித்து வந்தன. ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தில் நிரந்திர உறுப்பினராக இல்லாத பிறநாடுகளும் இந்தியாவை ஆதரித்தன. ஆனால், சீனா மட்டும் பாகிஸ்தானை பாதுகாக்கும் நோக்குடன் இதற்கு எதிராக நின்றது.
புல்வாமா தாக்குதலுக்கு பின் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்க இணைந்து ஐ.நாவில் மசூத்திற்கு எதிரான முன்மொழிவை மார்ச்சில் கொண்டு வர இருந்தது. சீனா இந்த சமயத்தில் தயக்கம் காட்டியது. இதனை குறைந்தது ஆறு மாதங்களுக்கு தள்ளிப்போட வைப்பதற்கான முயற்சியில் இறங்கியது.
இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சீனா கூறியது. இவ்வாறு சீனா கூறுவது இது நான்காவது முறை.
ஆனால், ஆறுவார காலத்தில் சீனாவின் நிலைப்பாடு மாறி இருக்கிறது. டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு சீன தூதரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னரே சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் வரத் தொடங்கியது.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் வணிகப் போர் நடந்து வரும் சூழலில், புல்வாமா தக்குதலுக்குப் பின், டிரம்ப் அரசாங்கம் இது குறித்து ஐ.நாவில் பேச தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியது. இதன் பிறகே, சீனா பொது மன்றத்தில் பேசும் சூழலுக்கு தள்ளப்பட்டது.
மசூதிற்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என்பதை உணர்ந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், மசூத்திற்கு உடல்நிலை சரியில்லை என பேச தொடங்கினார். அஸாருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாத போது, அவரை நீதிமன்றங்களுக்கு இழுக்கக் கூடாதென்றும் கூறினார்.
இப்படியான சூழலில் சீனாவும், பாகிஸ்தானும் யோசிக்க தொடங்கின. அதாவது இந்தியாவுக்கு எதிரான ஒரு துருப்பு சீட்டாக அஸார் இருப்பாரா அல்லது தங்களுக்கு சுமையாக மாறுவாரா என கணக்குப் போடத் தொடங்கின.
சீனாவில் அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங் உள்ளிட்ட பல தலைவர்களுக்கும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் இடையே உச்சிமாநாடு நடைபெற்று இம்ரான் நாடு திரும்பிய அடுத்த நாள் இந்த முடிவை சீனா எடுத்துள்ளது. இந்த சந்திப்பில் மசூத் அஸர் குறித்த விவாதங்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
தனது முடிவினை சீனா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சொல்வதற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே, அந்நாட்டு வெளியுறவு துறையின் செய்தித் தொடர்பாளர் இப்பிரச்சனை தீர்க்கப்படும் என்று மீண்டும் கூறினார்.
இறுதியாக இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளும், சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது பிரதமர் மோதி வெளிகாட்டிய தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரமும், இதில் முக்கிய இடம் பிடித்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
இந்திய பிரதமர் மோதி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே கடந்த ஏப்ரலில் நடைபெற்ற உச்சிமாநாட்டில், இதுகுறித்து விவாதிக்கப்படாமல் இதுமாதிரி ஒன்று நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
சீனா இந்த முடிவினை அறிவித்துள்ள நேரம், இந்திய மக்களவை தேர்தல் நடக்கிறது. இது ஆளுங்கட்சியின் பிம்பத்தை பெரிதுப்படுத்தலாம் என்ற யூகங்களும் முன்வைக்கப்படும். ஆனால், மசூத் அஸார் விவகாரத்தில் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது அடையாளத்திற்கான சைகை தானே தவிர வேறொன்றும் இல்லை என்று நமக்கு தெரிகிறது.
இதற்கு சிறந்த உதாரணம் ஹஃபீஸ் சயீத் விவகாரம்தான். மும்பையில் 26/11 தாக்குதலை தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒபாமா அரசாங்கம், ஹஃபீஸ் சயீத் குறித்த தகவலுக்கு 10 மில்லியன் டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. பாகிஸ்தான் பணம் இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்தாலும், அவ்வளவு டாலர்கள் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு அவர்களை கவரவில்லை. சயீதை பாதுகாப்பான காவலில் அவ்வப்போது வைத்து, அரசும் நீதிமன்றங்களும் அவரை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்தன.
பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் ஹஃபீஸ் சயீத், அரசியல் கட்சி ஒன்றையும் ஆரம்பித்து, கடந்த தேர்தலில் வேட்பாளர்களையும் நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.