ஜான் வெய்ன் கேசியால் கொல்லப்பட்டவர் யார் என 45 ஆண்டுகளுக்கு பின் அடையாளம் தெரிந்தது
ஃப்ரான்சிஸ் வெய்ன் அலெக்சாண்டர் கொல்லப்பட்டப்போது, அவருக்கு வயது 21 அல்லது 22 ஆக இருக்கலாம்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில், 1970களில் காணாமல் போன நபர், அப்போது பல கொலைகள் செய்த தொடர் கொலைகாரர் ஜான் வெய்ன் கேசி கொலை செய்த நபர்களில் ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஃப்ரான்சிஸ் வெய்ன் அலெக்சாண்டர் என்ற அந்த நபரின் உடல் பாகங்கள், 1978ஆம் ஆண்டு கேசியின் சிகாகோ பகுதியிலுள்ள அவரது வீட்டின் அடிப்பகுதியில் மற்றவர்களின் உடல் பாகங்களுடன் கண்டுப்பிடிக்கப்பட்டன.
2011ஆம் ஆண்டில், எட்டு அடையாளம் தெரியாத இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து, டி.என்.ஏ பரிசோதனை மூலம் அவர்களின் அடையாளங்களை கண்டுபிடிக்கும் நோக்கில் குக் கவுண்டியின் காவல்துறை தலைமை அதிகாரி டாம் டார்ட் உத்தரவிட்டார்.
கடந்த பத்தாண்டில் கண்டுபிடிக்கப்பட்டவர்களில், கேசியால் கொல்லப்பட்ட மூன்றாவது நபர் அலெக்ஸண்டர்.
1976-1977 ஆகிய ஆண்டுகளுக்கிடையே, கேசி அவரை கொலை செய்த காலத்தில், அவருக்கு வயது 21 அல்லது 22 இருக்கும் என்று டார்டின் அலுவலகம் கூறுகிறது.
1972-1978 ஆகிய ஆண்டுகளுக்கிடையே , 33 இளைஞர்களை கொலை செய்து, தனக்கு சொந்தமான இடத்தில் புதைத்த குற்றத்துக்காக கேசிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அவர் 1994ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
காவல் அதிகாரி என்றோ அல்லது கட்டுமான வேலை வழங்குவதாகக் கூறியோ இளைஞர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்காக அவர்களை தன் வலையில் சிக்க வைப்பார்.
இதன் விசாரணை மீண்டும் தொடங்கிய போது, 1970 முதல் 1978-டில் கேசி கைது வரை காணாமல் போன இளைஞர்களின் குடும்பங்களிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகளை டார்ட் கேட்டுப் பெற்றார். இதனைக்கொண்டு, அடையாளம் தெரியாமல் புதைக்கப்பட்ட எட்டு பேரின் டி.என்.ஏ யை ஒப்பிட முயற்சித்தார்.
பல மாதங்கள் கழித்து, 19 வயதான கட்டடத் தொழிலாளி வில்லியம் ஜார்ஜ் பன்டி கேசியால் கொலை செய்யப்பட்டவராக கண்டறிப்பட்டார்.
2017 ஆம் ஆண்டில், மினசோட்டாவில் காணாமல் போன ஜேம்ஸ் பைரோன் ஹாகேன்சன் மற்றொரு கொலை செய்யப்பட்ட நபராக அடையாளம் காணப்பட்டார்.
அலெக்சாண்டரின் தாய் மற்றும் ஒன்று விட்ட சகோதரரின் டி.என்.ஏ மாதிரிகளை அவரின் எஞ்சியிருந்த மாதிரிகளுடன் புலனாய்வாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.
தங்கள் குடும்பத்திற்கு ஒரு விடையை அளித்ததற்காக காவல் துறைக்கு (Sheriff's Office) அலெக்சாண்டரின் சகோதரி கரோலின் சாண்டர்ஸ் நன்றி தெரிவித்தார்.
" 45 ஆண்டுகள் கழித்தும், எங்கள் அன்புக்குரிய வெய்னின் முடிவைப் பற்றி அறிய மிகவும் கடினமாக உள்ளது. மிகவும் கொடூரமான வெறுக்கத்தக்க மனிதரின் கைகளால் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்", என்று கூறினார் சாண்டர்ஸ்.
"என்ன நடந்தது என்பதற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்து, வெய்னுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் இதை கடந்து செல்லலாம்".
அமெரிக்காவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர் கொலைகாரர்களில் ஒருவரான கேசியில் பாதையில் அலெக்சாண்டர் எப்படி வந்தார் என்பது சரியாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவர் சிகாகோவில் வசித்தார். அங்கு அவருக்கு திருமணமாகி மூன்று மாதத்திற்கு பின்னர், 1975 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
1976 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சிகாகோவில் போக்குவரத்து துறையிடம் இருந்து ஒரு அபராத ரசீது பெற்றிருந்தார். அதன்பின்னர், அவர் உயிருடன் இருந்ததற்கான எந்த பதிவு இல்லை என்று அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கேசி சுற்றிய பகுதியில் அலெக்சாண்டர் வசித்து வந்தார். முன்னர் அடையாளம் காணப்பட்டவர்களும் அங்கு முன்னர் வசித்தனர் என்று காவலர் அமைப்பு (Sheriff's Office) தெரிவித்தனர்.
எஞ்சியுள்ள உடல்களின் அடையாளங்களை கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று காவல்துறை கூறுகின்றனர்.