கடந்த ஆண்டு தீவிர, கழுத்து வலி மற்றும் வாந்தி உணர்வு பாதிப்புடன் கடுமையான வலியுடன் கொண்டு வரப்பட்ட நோயாளிக்கு என்ன கோளாறு என்பதைக் கண்டறிய அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவர்கள் வேகமான முயற்சிகளில் இறங்கினர்.
சி.டி. ஸ்கேன், சிறுநீர் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை செய்து பார்த்து, நேரடியாகவும் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவருக்கு விஷம் தரப்படவோ அல்லது புரியாத ஒரு நோய் தாக்கியதோ இதற்குக் காரணம் இல்லை என்றும், உலகிலேயே மிக அதிக காரம் கொண்ட மிளகாய் சாப்பிட்டிருக்கிறார் என்றும் தெரிய வந்தது.
``கரோலினா ரீப்பர்'' என்ற மிக மோசமான மிளகாயை, 34 வயதான அந்த நபர் ஒரு போட்டிக்காக சாப்பிட்டிருக்கிறார். சாதாரண பச்சை மிளகாயைவிட இது 275 மடங்கு அதிக காரம் கொண்டது.
அவருடைய மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ஏற்பட்ட சுருக்கத்தை, அதிர்ஷ்டவசமாக முழுமையாக சரி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
இது அரிதான ஓர் உதாரணமாக இருக்கலாம். ஆனால் மில்லியன் கணக்கானோர் - அநேகமாக பில்லியன் கணக்கானோர் - நாக்கில் சுறு சுறு என காரமாக உணரப்படும் உணவுகளை வழக்கமாக சாப்பிடுகின்றனர். அது நம்மை ஏதாவது பானங்களை குடிக்கச் செய்கிறது அல்லது வயிறு கோளாறை ஏற்படுத்துகிறது - அல்லது இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. காரணம் என்ன?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதன் மீதுள்ள காதல் குறையாததே இதற்குக் காரணம் - பச்சை மிளகு உற்பத்தி 2007 க்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில் 27 மில்லியன் டன்களில் இருந்து 37 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.
ஒரு நபர் ஓர் ஆண்டுக்கு சராசரியாக ஏறத்தாழ 5 கிலோ மிளகாய் சாப்பிடுகிறார் என்று IndexBox என்ற ஆய்வு நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கிறது. சிவப்பு குண்டு மிளகாய் 20 கிராம் எடை இருக்கும் என கொண்டால், 250 கிராம் அளவுக்கான ``தீபாவளி பட்டாசுகளை'' சாப்பிடுவதாக அர்த்தம்.
சில நாடுகளில் இதை சாப்பிடும் அளவு, மற்றவர்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவும் உள்ளது.
துருக்கியில் மக்கள் தினம் 86.5 கிராம் சாப்பிடுகிறார்கள். இதுதான் உலகிலேயே அதிகபட்ச அளவு. காரமான உணவுகளுக்குப் பிரசித்தி பெற்ற மெக்சிகோவில் இது 50.95 கிராம்களாக உள்ளது. அதைவிட மிக அதிகமாக துருக்கி மக்கள் சாப்பிடுகிறார்கள்.
ஆகவே, காரமான உணவுகளை நாம் ஏன் விரும்புகிறோம்?
அது நம்முடைய திரில் ஏற்படுத்தும் உளவியல் மற்றும் பரிணாம உணர்வுக்கு எதிரான போராட்டம் பற்றிய சிக்கலான கதையாக இருக்கிறது.
இயற்கையின் ரகசியம்
காரமான தன்மையைத் தரும் கேப்சாய்சின் என்ற பொருள் உருவாக்கப்படுவதன் நடைமுறைகள் இன்னும் விவாதத்துக்கு உரியவையாக உள்ளன.
காலப்போக்கில் தாவரங்கள் காரத்தை வெளிப்படுத்தக் கூடியவையாக மாறியுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விலங்குகளும், பூச்சி இனங்களும் தங்களை சாப்பிட்டுவிடாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக காரமான தன்மையை உருவாக்கிக் கொண்டுள்ளன என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மிளகாய் செடிகளுக்கு இது எப்படி சரியானதாக அமைந்தது என்பதை அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விலங்குகளின் செரிமாண மண்டலத்தில், இவற்றின் விதைகள் செரிமாணம் செய்யப்பட்டு விடுகிறது. அதனால் அவை முளைக்கும் தன்மையை இழந்துவிடுகின்றன.
தெற்கு கரோலினாவில் விளையும் இந்த மிளகாய்தான் உலகில் மிகவும் காரமானது
ஆனால் பறவைகள் அப்படியல்ல. விதைகள் பறவைகளின் செரிமாண மண்டலத்தைக் கடந்து பத்திரமாக, கழிவுடன் சேரே்ந்து, முளைப்பதற்குத் தயாரான நிலையில் வெளியேறுகின்றன.
எனவே, தாவரத்தின் விளைச்சலை விலங்குகள் சாப்பிடுவதைத் தடுப்பதற்கு இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டுள்ளன. அது மனிதர்களுக்கும் பொருந்தும் தானே?
கசப்பான ருசியை விஷங்களுடன் தொடர்புபடுத்தி மனிதர்கள் பார்ப்பது குறிப்பிடத்தக்கது. அது தான் நமது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாக உள்ளது.
நமது முன்னோர்களைத் தொடர்ந்து, மிளகாய் சாப்பிடும் ஒரே பாலூட்டி இனமாக மனிதன் மட்டும் எப்படி தொடர்கிறான் என்பதற்கு தடயங்கள் இருக்கின்றன.
சூடான எச்சரிக்கை
பூசண எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு குணாதிசயங்கள் காரணமாக, காரமான உணவு வகைகள் மனிதனுக்குப் பிடிக்கத் தொடங்கின என்பது ஒரு விளக்கமாக இருக்கிறது.
காரமான ருசி கொண்ட உணவுகள் சீக்கிரம் கெட்டுப் போவதில்லை என்பது மக்களின் எண்ணமாக உள்ளது - காரமாக இருந்தால் அது கெட்டுப் போகவில்லை என்பதன் அறிகுறி என்று கருதப்படுகிறது.
கோர்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் நிபுணர்கள் ஜெனிபர் பில்லிங், பால் டபிள்யூ ஷெர்மன் ஆகியோர் 1998 ஆம் ஆண்டில் இந்த விளக்கத்தை முன்வைத்தனர்.
36 நாடுகளில் மாமிசம் சார்ந்த பாரம்பரியமான ஆயிரக்கணக்கான உணவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். உணவு கெட்டுப் போகும் வாய்ப்புள்ள, சூடான வெப்ப நிலை உள்ள நாடுகளில் காரமான உணவுப் பொருள் பயன்படுத்தப் படுகிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
``வெப்பமான நாடுகளில், மாமிசம் சார்ந்த உணவுகள் அனைத்திலும் குறைந்தது ஒரு காரமான உணவுப் பொருளாவது இருக்கும். பெரும்பாலானவற்றில் காரமான நிறைய பொருள்கள், குறிப்பாக மசாலா பொருள்கள் இருக்கும். ஆனால் குளிர் மிகுந்த நாடுகளில் பெரும்பாலான உணவு வகைகளில் இவை குறைவாகவே இருக்கும்'' என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
தாய்லாந்து, பிலிப்பின்ஸ், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் காரமான உணவுப் பொருட்களின் பயன்பாடு அதிகபட்ச அளவுக்கு உள்ளது. ஸ்வீடன், பின்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் இது குறைந்தபட்ச அளவாக உள்ளது.
``உணவு தயாரிப்பு முறைகள் நம்முடைய மற்றும் நம் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் வரலாற்று ஆதாரங்களாக உள்ளன என்று நான் நம்புகிறேன். ஒட்டுண்ணிகள் நமது உணவை பகிர்ந்து கொள்ளும் போட்டியில் இருக்கக் கூடியவை'' என்று ஷெர்மன் கூறுகிறார்.
``உணவில் நாம் செய்யும் அனைத்தும் - உலர வைத்தல், சமைத்தல், புகைக்கு உட்படுத்துதல், உப்பிடுதல் அல்லது காரமான பொருட்கள் சேர்த்தல் என அனைத்துமே - ஒட்டுண்ணிகளால் நமக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே இருக்கின்றன.
சுவையற்ற உணவுக்கு மாற்று உணவு ஆராய்ச்சியாளரான கவோரி ஓ'கோனோர் வேறொரு தடயத்தைக் கூறுகிறார்.
கரும்பு மற்றும் உருளைக்கிழங்குகளைப் போலவே, மிளகாய்களும் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்கள் அறியாத உணவுப் பொருளாகவே இருந்து வந்துள்ளது என்று அவர் கூறுகிறார். ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு சென்று, வர்த்தக உறவுகளை ஏற்படுத்திய பிறகு தான், மிளகாய் உலகெங்கும் பரவியது என்கிறார் அவர்.
``ஐரோப்பிய பயண ஆர்வலர்களால் இது எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது'' என்று ஓ'கோனோர் கூறுகிறார்.
சுறுசுறுவென்ற அதன் ருசி இந்தியா, சீனா, தாய்லாந்து உள்பட உலகம் முழுக்க மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
``அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் உணவு ருசியற்றதாக இருந்தது என்று நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டும். ஆனால், சர்க்கரையின் வருகையின் போது ஏற்பட்டதைப் போல, மிளகாயின் வருகையும் உணவில் ருசியைக் கூட்டுவதாக அமைந்தது'' என்று அவர் கூறியுள்ளார்.
திரில்களும் வயிறு வலியும்
இருந்தபோதிலும் ``ஆபத்தை ஏற்றுக் கொள்ளுதல்'' என்ற உந்துதலால் காரமான உணவுடன் நமது உறவு வளர்ந்தது என்று மற்றொரு கருத்தும் முன்வைக்கப் படுகிறது.
உலகிலேயே துருக்கியில்தான் அதிக மிளகாய் பயிரடப்படுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் ரோலர்கோஸ்டரில் செல்வது அல்லது ஸ்கை டைவிங் செய்வது போன்றவை எப்படி திரில்லான அனுபவமாக கருதப்படுகிறதோ, அதேபோல அன்றை காலக்கட்டத்தில் காரமான பொருளை சாப்பிடுவது திரில்லான விஷயமாக கருதப்பட்டிருக்கும் என்று இந்தத் தரப்பினர் கூறுகின்றனர்.
வலி மிகுந்த பரிசோதனைகள்
பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் பால் ரோஜின் என்பவர் இந்த சிந்தனையை உருவாக்கினார். பெரும்பாலான பாலூட்டி இனங்கள் மிளகாயை சாப்பிடுவதில்லை என்ற உண்மையில் இருந்து, இந்த ஆர்வம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. காரத்தை இனிமேலும் தாங்க முடியாது என்ற நிலை வரும் வரையில், சிலருக்கு மிக காரமான மிளகாய்களை அவர் தொடர்ந்து கொடுத்தார். எந்த காரம் தங்களுக்குப் பிடித்திருந்தது என்று அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. தங்களால் அதிகபட்சம் தாக்குபிடிக்கக் கூடியதாக இருந்தவற்றை அவர்கள் தேர்வு செய்தனர்.
``மனதுக்குப் பிடிக்காததாக இருந்தாலும் ஒரு விஷயத்தை செய்யக் கூடியது மனித இனம் மட்டுமே'' என்று ரோஜின் விளக்குகிறார்.
``நமது உடல் எதிர்மறையான தாக்கத்தைக் காட்டினாலும், நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்வதற்கு நமது மனம் கற்றுக்கொண்டிருக்கிறது'' என்கிறார் அவர்.
பயம் ஏற்படுத்தும் பேய் படங்களை ரசித்துப் பார்ப்பதைப் போன்ற அதே காரணத்துக்காகத்தான் காரமான மிளகாயை நாம் சாப்பிடுகிறோம் என்று தோன்றுகிறது.
விசேஷ குணங்களும் பாலினமும்
மற்றவர்களைக் காட்டிலும் சிலருக்கு அதிக காரம் ஏன் பிடிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும் விஞ்ஞானிகள் ஆர்வம் கொண்டுள்ளனர். காரமான உணவை விரும்புவதில் பாலினத்துக்கும் பங்கு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உணவு நிபுணர் நாடியா பைரேன்ஸ் முயற்சி மேற்கொண்டார்.
மற்றவர்கள் எதிரே தங்களை வலிமையானவர்களாகக் காட்டிக் கொள்ளும் எண்ணத்தில் ஆண்கள் காரத்தை அதிகம் சாப்பிடுகிறார்கள் என்றும், காரம் - வலி உணர்வு பிடித்திருப்பதால் பெண்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் அவர் கண்டறிந்தார்.
``உதாரணமாக, மெக்சிகோவில், காரம் சாப்பிடுவது என்பது பலம், துணிச்சல், ஆண்மையான உடல் அமைப்பை வெளிப்படுத்துபவையாகக் கருதப்படுகிறது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது: திரில்லுக்காகவோ அல்லது ருசியில்லாத உணவு பிடிக்காத காரணத்தாலோ மிளகாய் உணவை தேர்வு செய்திருந்தாலும், அல்லது உணவு கெட்டுவிடாமல் தவிர்ப்பதற்காக பாரம்பரியமாக கடைபிடித்த வழக்கத்தை தொடர்வதாக இருந்தாலும், நாளுக்கு நாள் மிளகாய் சாகுபடியும், அதிக வீரியம் கொண்டவையாக சாகுபடி செய்தவும் அதிகரித்து வருவதாலும், காரமான உணவுக்கு பஞ்சம் என்பது ஒருபோதும் ஏற்படாது.